For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரதமர் வீட்டை முற்றுகையிட முயன்ற வைகோ உள்ளிட்ட 1000 மதிமுகவினர் கைதாகி விடுதலை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் வீட்டினை முற்றுகையிட முயன்ற வைகோ உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மதிமுக வினரை போலீசார் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று பீகாரில் புத்தகயாவிற்கும், திருப்பதிக்கும் வழிபாடு செய்வதற்காக வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ தலைமையில் ஆயிரக்கணக்கான மதிமுகவினர் பிரதமர் வீட்டினை முற்றுகையிட டெல்லி சென்றனர். இன்று காலை ஜந்தர் மந்தரில் இருந்து பிரதமர் வீட்டை நோக்கி பேரணி சென்ற போது நாடாளுமன்ற சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது செய்தியாளர்களிடையே வைகோ பேசியதாவது:

இங்கே தலைநகர் டெல்லியில் எதற்காக இந்தப் போராட்டம் எனில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணம் கொடுத்து இந்திய அரசு போருக்கு உதவியாக இருந்தது. ஆஸ்பத்திரிகளின் மீது குண்டு வீசினார்கள். லட்சக்கணக்கானோரை கொன்று குவித்தார்கள். ஆனால் அதற்கு இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசு உதவி செய்தது. டெல்லியில் ஒரு இளம் பெண் கற்பழிக்கப்பட்டது எங்கள் நெஞ்சினை பதைப் பதைக்கிறது. எங்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

ஆனால் பல்லாயிரக்கணக்கான பெண்கள் ஈழத்தில் கற்பழிக்கப்பட்டனர். இந்திய அரசு, மன்மோகன் சிங், சோனியா ஆகியோர் இந்த படுபாதகத்திற்கு உதவி செய்கிறது. இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டுகிறது. ஐக்கியஜனநாயக கூட்டணி அரசு இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

புத்தர் ஆலயத்திற்கு எப்படி வரலாம்?

மனித உரிமைக்குற்றம் என்றும் பல நாடுகள் இலங்கைக்கு எதிராக கிளம்பியுள்ளன. ஆனால் இந்தியா ஆதரவு தருகிறது. இதற்காகவே நாங்கள் போராட்டத்தை தொடங்குகிறோம். ராஜபக்சே புத்தகயாவிற்கு வருகிறார். அமைதியை போதித்த புத்தரின் ஆலயத்திற்கு படுகொலைகளை செய்த ராஜபக்சே வருகிறான்.

திருப்பதிக்கு வருவது நியாயமா?

இலங்கையில் ஆயிரக்கணக்கான இந்துக்கோவில்களை இடித்துவிட்டு திருப்பதிக்கு சாமி கும்பிட வருவது எந்த விதத்தில் நியாயம். யாழ்பாணப் பல்கலைக்கழக மாணவர்களை சிறைப்பிடித்திருக்கின்றனர். ஆனால் இந்திய அரசு ராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது. இலங்கைக்கு உதவி செய்வதை நிறுத்திக்கொள்ளவேண்டும். ராஜபக்சே இந்தியாவிற்கு வருவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. இதன் காரணமாக பிரதமர் வீட்டை முற்றுகையிடுகிறோம்.

உயிர்தியாகத்திற்கு அர்த்தம் வேண்டாமா?

முத்துக்குமார் தொடங்கி பலர் ஈழத்தமிழர்களுக்காக இன்னுயிரை மாய்த்திருக்கின்றனர். முத்துக்குமார் உள்ளிட்டவர்களின் தியாகத்திற்கு ஒரு அர்த்தம் வேண்டாமா? இந்தியாவிற்கும் ராஜபக்சேவை நுழைய விடக்கூடாது என்பதற்காகவே எங்களின் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளோம். இந்தியாவில் எண்ணற்ற அரசியல் கட்சிகள் உள்ளனர். அவர்கள் இந்த கொலைகாரனுக்கு ஆதரவு தருகிறீர்களா? இது சட்டமா, நியாயமா, நாங்கள் கண்டிப்பாக எதிர்ப்போம். அவனை சர்வதேச நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை

நாதியற்றவர்களா தமிழர்கள் ?

முத்துகுமார் உள்ளிட்ட எண்ணற்ற தியாகிகளின் உயிர் தியாகத்திற்கு என்ன செய்யப்போகிறோம். தமிழர்கள் நாதியற்று கிடக்கிறர்களா? இதுபோல வேறுமாநில மக்களுக்கு நடந்திருந்தால் அனுமதிப்பார்களா? பஞ்சாபிகளை கொன்றுவிட்டு சீக்கியர்கள் பொற்கோவிலுக்குள் ராஜபக்சே நுழைய முடியுமா? எங்களின் வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுகிறது இந்திய அரசு புத்தகயாவிற்கும், திருப்பதிக்கும் ஏன் அழைத்து வருகிறாய் ராஜபக்சேவை. அதற்கு இப்போது என்ன அவசியம்? அவசரம்? நாங்கள் இங்கே எங்கள் கோபத்தை வெளிப்படுத்தவே வந்திருக்கிறோம். அதற்காகவே பிரதமர் வீட்டினை முற்றுகையிடுகிறோம். இந்த போராட்டம் உலகம் முழுவதும் எதிரொலிக்க வேண்டும் என்றார் வைகோ.

உருவபொம்மை எரிப்பு, கைது

இதனைத் தொடர்ந்து ராஜபக்சேவின் உருவ பொம்மைக்கு வைகோ நெருப்பு வைத்தார். பின்னர் மன்னிக்க மாட்டோம், மன்னிக்கமாட்டோம் ராஜபக்சேவை மன்னிக்க மாட்டோம் என்பது போன்ற பல முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து பிரதமர் வீட்டை முற்றுகையிட கிளம்பிய வைகோ, மல்லை சத்யா, நாடாளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி, இணைய தள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மதிமுக வினரை போலீசார் கைது செய்தனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

கைது செய்யப்பட்ட மதிமுகவினர் அனைவரும் பார்லிமென்ட் சாலையில் இருந்த காவல்நிலைய சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் சில மணி நேரங்களில் வைகோ உள்ளிட்ட மதிமுகவினர் விடுதலை செய்யப்பட்டனர். பிரதமர் வீட்டினை மதிமுகவினர் மீண்டும் முற்றுகையிட முயற்சி செய்யலாம் என்பதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

English summary
Vaiko led a protest in Delhi today in protest against Rajapakse's India visit
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X