For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆட்டைக் கடித்து..... மாட்டைக் கடித்து... ! - ரிப்போர்ட்டர் கட்டுரைக்கு கருணாநிதி பதில்

By Shankar
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து... என்பார்களே.. அதைப் போல அருவருக்கத்தக்க கட்டுக் கதைகளை எந்த நாகரீகமும் இன்று வெளியிடத் தொடங்கிவிட்டன சில பத்திரிகைகள் என்று கண்டனம் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

கருணாநிதியுடன் நடிகை குஷ்பு நிற்கும் படத்தை வெளியிட்டு, குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வெளியான அட்டைப்படக் கட்டுரை திமுகவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை:

கழக முன்னணியினரைக் காயப்படுத்தி, கலகமூட்டிக் குழப்பம் ஏற்படுத்திடும் கற்பனையான செய்திகள், என்னைப் பற்றியும் எனது குடும்பத்தைப் பற்றியும் இட்டுக் கட்டிய பொய்யுரைகள் அபாண்டமான முறையிலும், அதிர்ச்சியூட்டத் தக்க வகையிலும் வெளியிடப்பட்டு வருகின்றன.

நமது கவனத்தைத் திசை திருப்புவதற்காகவே வெளியிடப்படும் அந்தச் செய்திகளை அவ்வப்போது மறுத்து விளக்கமளிப்பதும், சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்வதும் கால விரயத்தை ஏற்படுத்தும் என்பதால், அவற்றைப் பெரிதாக எண்ணி அலட்டிக் கொள்ளாமல், அமைதியாக அலட்சியப்படுத்தப்பட்டன.

அலட்சியம் செய்ததையே ஆதாயமாகக் கருதி, "ஆட்டைக் கடித்து..... மாட்டைக் கடித்து ......." என்பார்களே அதைப்போல, அருவருக்கத்தக்க கட்டுக் கதைகளை, எவ்வித நாகரிகமுமின்றி வெளியிடத் தொடங்கியிருக்கிறார்கள். என்னைப் பற்றிக் கூட நான் எப்போதும் கவலைப்படுவதில்லை, ஆனால் ஒரு பெண்மணியைப் பற்றி, அதுவும் கணவனுடனும், குழந்தைகளுடனும் குடும்பம் நடத்தி வாழ்ந்து கொண்டு, கட்சிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பவரைப் பற்றி நாராச நடையில் கொச்சைப்படுத்தி எழுதுவது முறை தானா?

தமிழ்நாட்டு மக்கள் அதையெல்லாம் பொறுத்துக் கொள்கிறார்களா? அந்தப் பத்திரிகையாளர்கள் தங்களுக்கும் குடும்பம், பிள்ளை, குட்டிகள் இருப்பதை மறந்து, சேற்றை அள்ளி வீசுகிறோமே அதனால் கைகள் கறை ஆவதோடு, மற்றவர் மனம் எப்படியெல்லாம் வேதனைப்படும் என்பதைப் பற்றிக் கவலை கொள்ளாமல், செய்திகளை வெளியிடுகிறார்கள்.

நான் கடந்த எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பத்திரிகையாளனாகவே வளர்ந்து வந்திருக்கிறேன். எனது கைகளைக் கொண்டே என்னை அடிப்பதா என்ற தயக்கத்தில் இதுவரை அமைதியோடு பொறுமை காத்து வந்தேன். பத்திரிகையாளர்கள் சிலர், என்னைப் பொறுமையின் விளிம்பிற்கே தள்ளிக் கொண்டிருப்பது எனக்குப் புரிகிறது.

எனவே சேற்றை வாரி வீசுவோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து, சட்ட வல்லுநர்களின் ஆலோசனை பெற்று அமைப்பு ரீதியாக முடிவெடுத்து அறிவிக்கலாமா அல்லது கட்சி ரீதியாக அந்தப் பத்திரிகை அலுவலகத்தின் முன்னாலேயே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தலாமா என்றிருக்கிறேன்.

கழகத் தோழர்கள், உள்நோக்கம் கொண்ட இத்தகைய செய்திகளைப் பற்றிக் கவலைப்படாமல் சதித் திட்டத்தை நிறைவேற்ற இறுக்கிக் கட்டிக் கொண்டு கிளம்பியிருக்கும் "இனவெறி" கூட்டத்தின் செய்திகளையும், ஏடுகளையும் புறந்தள்ளி விட்டு என்றும் போல் கட்சிப்பணி மக்கள் பணி ஆற்றி, வெற்றி காண வேண்டும் என்று விரும்புகிறேன்.

குறிப்பாகக் கழகத் தோழர்கள் எத்தகைய ஏடுகள் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகின்றன என்பதை புரிந்து கொண்டு, அத்தகைய இதழ்களை வாங்குவதில்லை, அவற்றைக் கையாலும் தொடுவதில்லை என்று அந்தந்த கிளைக் கழகத்தின் சார்பில் சூளுரை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK president M Karunanidhi condemned the 'malicious, poisonous' article published in Kumudham Reporter on him and Kushboo.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X