இந்தியாவுக்குத் தரப்பட்ட உறுதிமொழியை மீறி மாலத்தீவு மாஜி அதிபர் நசீத் கைது!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Mohamed Nasheed
மாலே: இந்தியாவுக்குத் தரப்பட்ட உறுதிமொழியையும் மீறி முன்னாள் அதிபர் முகம்மத் நசீதை மாலத்தீவு அரசு கைது செய்துள்ளது. இது இந்தியாவுக்கு மூக்கறுப்பாக கருதப்படுகிறது.

நசீத் அதிபராக இருந்தபோது மாலத்தீவு தலைமை நீதிபதி அப்துல்லா முகம்மதை கைது செய்ய உத்தரவிட்டது தொடர்பாக இப்போது வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் நசீதை கைது செய்ய சமீபத்தில் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது.

இதையடுத்து மாலத்தீவு தலைநகர் மாலேவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நசீத் தஞ்சம் புகுந்தார். இவர் இந்தியாவுக்கு ஆதரவானவர் என்பதாலும், மாலத்தீவில் சீனாவின் கை ஓங்குவதை தடுக்க இவர் உதவுவார் என்பதாலும் இவரை இந்தியா மறைமுகமாக ஆதரித்து வருகிறது.

இந்தியத் தூதரகத்தில் தஞ்சமடைந்த இவரைக் காக்க மாலத்தீவு அரசுடன் மத்திய அரசு மறைமுக பேச்சு நடத்தியது. இதையடுத்து இப்போதைக்கு நசீத் கைது செய்யப்பட மாட்டார், தேர்தலில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார் என்ற உறுதிமொழிகளை மாலத்தீவு அரசு இந்தியாவிடம் தந்தது.

இதையடுத்து 11 நாட்கள் இந்தியத் தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்த நசீத் கடந்த வெள்ளிக்கிழமை தான் வெளியே வந்தார். இந் நிலையில் இன்று அவரை அதிரடியாகக் கைது செய்துள்ளது மாலத்தீவு.

இதன்மூலம் இந்தியாவுக்கு எந்த அளவுக்கு மாலத்தீவு மரியாதை தருகிறது என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. உலக அரங்கின் இந்தியாவுக்கு இது பெரும் தலைகுனிவாகவே கருதப்படுகிறது.

முன்னதாக அதிபராக இருந்த நசீதை போலீசார் புரட்சி நடத்தி துப்பாக்கி முனையில் மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தது நினைவுகூறத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former Maldives President Mohamed Nasheed has been arrested from his residence in Male'. The arrest comes after a lower court issued a third arrest warrant against him. 
 Mr Nasheed faces charges of illegally ordering the military to detain Chief Criminal Judge Abdulla Mohamed when he was in power in January 2012. If convicted, Mr Nasheed will be barred from the country's September Presidential polls. His party insists it's a politically motivated case to ensure he doesn't contest.
Please Wait while comments are loading...