லோக்சபா தேர்தலில் சமாஜ்வாடிக்கு 4 சீட்தான் ...அப்புறம் சவ ஊர்வலம்தான்: தொடர்ந்து வம்புக்கு இழுக்கும்
லக்னோ: மத்திய அரசுக்கும் சமாஜ்வாடி கட்சிக்கும் இடையேயான முறுகல் நிலை தணிந்திருந்த நிலையில் மத்திய அமைச்சர் பேனிபிரசாத் வர்மா மீண்டும் அக்கட்சியை வம்புக்கு இழுத்திருக்கிறார். லோக்சபா தேர்தலில் சமாஜ்வாடிக்கு 4 சீட்தான் கிடைக்கும்.. அதன் பின்னர் அக்கட்சிக்கு சவ ஊர்வலம் நடத்த வேண்டியதுதான் என்று விமர்சித்திருக்கிறார் பேனி பிரசாத் வர்மா.
மத்திய உருக்குத்துறை அமைச்சராக இருக்கும் பேனி பிரசாத் வர்மா உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். அவர் தொடர்ந்தும் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவை விமர்சித்து வருகிறார். முலாயம்சிங் யாதவுக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பிருக்கிறது என்று பேனிபிரசாத் வர்மா பேசிய பேச்சால் மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளக் கூடிய முடிவுக்கு போனது சமாஜ்வாடி கட்சி.
பின்னர் உத்தரப்பிரதேசத்துக்கு கூடுதல் நிதி உதவி அளிப்போம் என்று லக்னோவில் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உறுதி அளித்ததால் மத்திய அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற மாட்டோம் என்று அறிவித்திருந்தார் முலாயம்சிங்.
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் பல்ராம்பூர் என்ற இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பேனி பிரசாத் மீண்டும் சமாஜ்வாடி கட்சியை மிகக் கடுமையாக சாடி இருக்கிறார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், உத்தரப்பிரதேசத்தின் 90 லோக்சபா தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் வெற்றி பெறும். பாரதிய ஜனதா கட்சியை 10 இடங்களுக்கு மேல் ஜெயிக்க விடமாட்டோம். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 36 இடங்கள் கிடைக்கும். சமாஜ்வாடிக்கு 4 இடங்கள்தான் கிடைக்கும். அதற்குப் பின்னர் அந்தக் கட்சிக்கு சவ ஊர்வலம்தான் என்று விமர்சித்திருக்கிறார்.
22 எம்.பிக்களைக் கொண்டிருக்கும் சமாஜ்வாடி கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருவதாலேயே மத்திய அரசு கவிழாமல் காப்பாற்றப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசைக் கவிழ்த்து முன்கூட்டியே லோக்சபா தேர்தலைக் கொண்டுவரும் வகையில்தான் பேனி பிரசாத் வர்மா பேசி வருகிறார். இப்பொழுது சமாஜ்வாடி என்ன செய்யப் போகிறதோ?