கற்பழித்தவர்கள் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை: விரக்தியில் இளம்பெண் தீக்குளிப்பு
போபால்: மத்தியபிரதேசத்தில் பாலியல் பலாத்காரம் செய்தவர்களுக்கு எதிராக புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்ட காரணத்தால் இளம்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
குணா மாவட்டம், பஜ்ரங்கர் கிராமத்தை சேர்ந்த 16 வயது இளம்பெண்ணை அதே பகுதியில் வசிக்கும் சோனு செகாரியா (23), சோனு சென் (20) என்ற வாலிபர்கள் கடந்த 26-ம் தேதி பலாத்காரம் செய்தனர். இது பற்றி யாரிடமாவது கூறினால் உன்னைக் கொன்று விடுவோம் என அவர்கள் மிரட்டியும் உள்ளனர்.
எனினும் அதற்கு அஞ்சாமல் தனக்கு நேர்ந்த கொடுமையை தனது தாயாருடன் சென்று பர்கோடாகிர்ட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் அதனை கண்டு கொள்ளவில்லை.
இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகிய அந்த இளம்பெண், வீட்டில் இருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த காயமடைந்த அந்த இளம்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
'இச்சம்பவத்தின் மூலம் கற்பழிப்பு குற்றங்களை கட்டுப்படுத்த தவறிய மத்திய பிரதேச மாநில அரசின் கோர முகம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது' என அம்மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அஜய் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளம்பெண்ணை நேற்று சந்தித்து ஆறுதல் கூறிய குவாலியர் சரக போலீஸ் ஐ.ஜி. ஆதர்ஷ் கடியார், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இதன் பின்பே நேற்று குணா மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் கே.சி.ஜேயின், பஜ்ரங்கர் கிராமத்திற்கு சென்று குற்றவாளிகளில் ஒருவனை கைது செய்துள்ளார்.தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.