பாஜக நாடாளுமன்றக் குழுவில் மீண்டும் நரேந்திர மோடி-நாளை அறிவிக்கப்படுகிறது!

பாரதிய ஜனதா கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவராக உருவெடுத்திருக்கும் நரேந்திர மோடிதான் லோக்சபா தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்று கூறப்பட்டு வருகிறது.இந்த சூழலில் 6 ஆண்டுகளுக்குப் பின்னர் பாஜகவின் நாடாளுமன்றக் குழுவில் மீண்டும் மோடி இடம்பெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பாஜகவின் தலைவராக முன்பு ராஜ்நாத்சிங் பொறுப்பு வகித்த போதுதான் பாஜகவின் நாடாளுமன்றக் குழுவில் மோடியும் இடம் பெற்றிருந்தார். ஓராண்டு காலத்துக்குப் பின்னர் மோடி நாடாளுமன்றக் குழுவில் இருந்து விலக்கப்பட்டார். இது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது.
தற்போது ராஜ்நாத் சிங் மீண்டும் பாஜக தலைவராகி இருக்கிறார். குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து மூன்று முறை பாஜக ஆட்சியைத் தக்க வைத்து மோடியும் சாதனை படைத்திருக்கிறார். பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவதால் மோடிக்கு நாடாளுமன்றக் குழுவில் மீண்டும் இடம் கொடுக்கிறார் ராஜ்நாத்சிங். தமக்கும் நாடாளுமன்றக் குழுவில் இடம் வேண்டும் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் செளகான் கேட்டுப்பார்த்தார். ஆனால் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
அத்துடன் மோடியின் தளபதியான குஜராத் மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜகவின் பொதுச்செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட இருக்கிறார். சர்ச்சைக்குரிய சோராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கில் பதவியை இழந்தவர் அமித் ஷா.
பாஜக பொதுச்செயலாளர்களான அனந்த் குமார், ராம் லால் ஆகியோர் தொடர்ந்தும் தங்களது பதவிகளைத் தக்க வைக்கின்றனர். வருண்காந்தியும் பொதுச்செயலாளராகக் கூடும். பாஜகவின் தலைமை செய்தித் தொடர்பாளராக ரவிசங்கர் பிரசாத் நீடிப்பார் எனத் தெரிகிறது. ஆனால் பாஜகவின் மகளிர் பிரிவு தலைவர் பொறுப்பில் ஸ்ம்ரிதி ராணி நீடிக்க மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் வேறு ஒருவருக்கு அப்பதவி கிடைக்கலாம்.