திருச்சியில் மாணவர்களைத் தாக்கிய 50 காங்கிரஸார் மீது வழக்குப் பதிவு
திருச்சி: திருச்சியில் காங்கிரஸ் கட்சியின் பேனர்களை அகற்றியதற்காக மாணவர்களைத் தாக்கிய காங்கிரஸார் 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் கடந்த 27-ந் தேதியன்று காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கான பேனர்களை காங்கிரசார் வைத்திருந்தனர். ஈழப் பிரச்சனையில் துரோகம் இழைத்து வரும் காங்கிரஸ் கட்சியைக் கண்டித்து போராட்டம் நடத்தி வரும் சட்டக் கல்லூரி மாணவர்கள் இந்த பேனர்களை கிழித்து அகற்றியுள்ளனர். அப்போது மாணவர்களை சுற்றி வளைத்த காங்கிரஸார் கொடுமையாக தாக்கியிருக்கின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் மாணவர்கள் சிலர் கைதும் செய்யப்பட்டனர்.
ஆனால் மாணவர்களைத் தாக்கிய காங்கிரஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழ.நெடுமாறன், வைகோ உள்ளிட்டோர் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து மாணவர்களின் புகாரின் பேரில் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகர் உட்பட 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.