For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உடையும் காங்கிரஸ்! உதயமாகிறது த.மா.கா! அதிமுகவுக்கு ஆதரவு?

By Mathi
Google Oneindia Tamil News

TN Congress faces Split over Eelam Tamils issue
சென்னை: இலங்கை பிரச்சனையில் மத்திய அரசு மற்றும் காங்கிரஸ் கட்சி மீதான தமிழக மக்களின் கடும் அதிருப்தியின் விளைவாக அக்கட்சியுடனான உறவை துண்டிக்கும் நிலைக்கு திமுக போனது. தற்போது இலங்கை பிரச்ச்சனையை முன்வைத்து தமிழக காங்கிரஸ் கட்சியே இரண்டாக பிளவுபடுவதும் வாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது.

வாசனை ஓரம்கட்டிய ராகுல்

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றது முதலே தாம் ஓரம்கட்டப்படுகிறோம் என்ற அதிருப்தி மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனுக்கு இருந்து வருகிறது. குறிப்பாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து தமது ஆதரவாளர் யுவராஜா நீக்கப்பட்ட விவகாரத்தில் உச்சகட்ட அதிருப்திக்குப் போனார் வாசன்.

அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு முடிவடைய இருக்கும் தமது ராஜ்யசபா எம்.பி. சீட்டை வட மாநிலம் ஒன்றில் இருந்து பெற்றுத் தரவும் கோரியிருந்தார் வாசன். ஆனால் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பியாக வேண்டியதுதானே என்று ராகுல் கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் உதயமாகிறது என்ற செய்திகள் வெளியாகத் தொடங்கின. இதை ஒரு பேரம் பேசக் கூடிய யூகச் செய்தியாக வாசன் தரப்பு பரப்புகிறது என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போது தமிழ் மாநில காங்கிரஸ் உதயமாகும் வாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவே தெரிகிறது.

ஈழத் தமிழர் விவகாரம்

அண்மைக் காலமாக இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ஜிகே வாசனின் குரல் தமிழக மக்களின் குரலை எதிரொலித்து வருகிறது. காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பகிரங்கமாக கருத்து தெரிவித்து வருகிறார் வாசன். இதன் அடுத்த நிலையாக பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து ஈழத் தமிழர் பிரச்சனை, தமிழக மீனவர் நலன் போன்ற விவகாரங்கள் குறித்து சூடாகவே விவாதித்தார் என்றும் செய்திகள் வெளியாகின.

காங்கிரஸ் கட்சியில் தாம் புறக்கணிக்கப்படுகிறோம் என்பதாலும் தமக்கு மீண்டும் ராஜ்யசபா சீட் எப்படியும் பெற்றாக வேண்டும் என்பதற்காகவும் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெயரில் தனிக் கட்சியை மீண்டும் தொடங்குவது என்ற முடிவுக்குப் போய் இருக்கிறார் ஜி.கே.வாசன்.

பிரணாப் முகர்ஜி அட்வைஸ்

காங்கிரஸில் தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது தொடர்பாக ஜி.கே. வாசனின் குடும்ப நண்பராக இருக்கும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார் வாசன். பிரணாப் முகர்ஜியைப் பொறுத்தவரையில் இந்திரா காந்தி இறந்த உடனேயே பிரதமர் பதவியை விரும்பியவர். ஆனாலும் அவருக்கு அது நிறைவேறாத கனவாகவே போய்விட்டது. கடைசியில் அவரை ஜனாதிபதி பதவியில் உட்கார வைத்து அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர்.

தற்போது தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரத்தின் கை டெல்லியில் ஓங்கியிருப்பதுடன் அவரையே பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் முன்னிறுத்தலாம் என்ற தகவல்களும் பரவி வருகின்றன. ப.சிதம்பரத்தின் செல்வாக்கு அதிகரிப்பதை சகிக்காதவராக பிரணாப் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜி.கே.வாசன் தம்மை சந்தித்த போது தனிக் கட்சியை தொடங்குவதன் மூலம் ப.சிதம்பரத்தின் செல்வாக்கை டெல்லியில் குலைத்துவிடலாம் என்ற அடிப்படையில் விவாதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

தமிழ் மாநில காங்கிரஸ்

இதைத் தொடர்ந்துதான் ஜி.கே. வாசன் குடும்பத்தினர் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்குவது... இலங்கைப் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சி மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகள் தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக இருக்கிறது என புது கட்சியின் உதயத்துக்கு காரணமாக சொல்வது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தமது அரசியல் ஆலோசகரான துக்ளக் வார இதழின் ஆசிரியர் சோவையும் வாசன் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
யார் யார்?

ஜிகே வாசன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினால் ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், இளங்கோவன் ஆதரவாளர்களைத் தவிர கட்சி மேலிடம் மீது அதிருப்தியில் இருக்கும் பல காங்கிரஸ் தலைவர்களும் இணையக் கூடும். குறிப்பாக தேர்தலில் தோற்றதால் முடங்கிக் கிடக்கும் பல காங்கிரஸாரும் இணையலாம். இதேபோல் இலங்கைத் தமிழர் பிரச்சனையால் தமிழகத்தில் தலை காட்ட முடியாது என்று கருதக் கூடிய காங்கிரஸாரும் இதை சாக்காக வைத்து வெளியேறலாம்.
அதிமுகவுடன் கூட்டணி:

ஜி.கே.வாசன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்கினால் தமது கூட்டணியில் இணைத்துக் கொள்ளவே திமுக மிகவும் விரும்பும். தேமுதிக, திமுக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவற்றுடன் களம் இறங்கினால் கணிசமாக தொகுதிகளைக் கைப்பற்றலாம் என்பது திமுகவுக்கு இயல்பாகவே எழக் கூடிய யோசனையாக இருக்கும். ஆனால் ஜிகே வாசன் தரப்பினரோ இப்போதைக்கு ஜெயிக்கிற குதிரையாக இருப்பது அதிமுகதான்... அவர்களுடன் அணி சேர்ந்தால் எப்படியும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று கருதுவதாகத் தெரிகிறது.

ஆக, தமிழகத்திலும் லோக்சபா தேர்தல் வியூகங்கள் விரைவிலேயே களைகட்டப் போகிறது!

English summary
TamilNadu Congress party now faces Split lead by Union Minister GK Vasan over Sri Lankan Tamils issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X