தன்வந்திரி மந்திரம் உச்சரித்து அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர்கள்! பரவும் கர்நாடக மருத்துவமனை வீடியோ
பெங்களூர்: கர்நாடகத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு டாக்டர்கள், நர்ஸ்கள் ‛தன்வந்திரி' மந்திரத்தை உச்சரிக்கும் வீடியோ டுவிட்டரில் சுற்றி வருகிறது.
Recommended Video
மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் நோயின்றி ஆரோக்கத்துடன் நீண்ட ஆயுள் வாழ விரும்புகிறார்கள். ஆனால் அது முடியாமல் போகிறது. ஒவ்வொருவரும் அவ்வப்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகிறோம்.
இதில் ஒரு பகுதியினர் நோயில் இருந்து உடனடியாக மீளும் நிலையில், இன்னொரு தரப்பினர் பெரும் சிரமத்தை சந்திக்க நேரிடுகிறது. அறுவை சிகிச்சை, தொடர் சிகிச்சை, தொடர்ந்து மாத்திரை எடுத்து கொள்ளுதல் உள்ளிட்ட பிரச்சனைகளை கடக்க வேண்டியுள்ளது.

மருத்துவ முறைகள்
இந்தியாவில் ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஓமியோபதி உள்ளிட்ட மருத்துவ முறைகள் உள்ளன. நோயின் தன்மையை பொறுத்து ஒவ்வொருவரும் தங்களுக்கு வேண்டிய சிகிச்சை முறைகளை பெற்று குணமாகின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும், கடவுள் நம்பிக்கையை மறுத்துவிட முடியாது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணமாக வேண்டி அவர்களின் குடும்பத்தினர் கோயில்களுக்கு செல்வதையும் நாம் பார்க்கலாம்.

தன்வந்திரி மந்திரம்
இந்நிலையில் தான் மருத்துவமனையில் ஒருவருக்கு அறுவை சிகிச்சை துவங்குவதற்கு முன்பு தன்வந்திரி மந்திரத்தை டாக்டர்கள், நர்ஸ்கள் உச்சரிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. கர்நாடகத்தில் உள்ள குமாரேஷ்வர் மருத்துவமனையில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக வீடியோ ஒன்று டுவிட்டரில் வெளியாகி உள்ளது.

டுவிட்டரில் கருத்து
வீடியோ அடங்கிய அந்த பதிவில், ‛‛மந்திரம் உச்சரிக்கப்படும் போதெல்லாம், அதன் தெய்வீக ஆற்றல்கள் உங்களை தொடும். இதன்மூலம் உங்களின் உடல், மனம், ஆன்மா ஆகியவை குணப்படுத்தும் வேலையை செய்ய துவங்கும்'' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர்.

தன்வந்திரி என்ன
தன்வந்திரி மந்திரம் இந்து மத கடவுள் விஷ்ணுவுக்கானது. நல்ல உடல்நலத்திற்காக இந்த மந்திரம் உச்சரிக்கப்படும். தேவர்கள், அசுரர்களுடன் போராடி வலிமை இழந்த நிலையில் அவர்களுக்கு உயிர் மீதான அச்சம் ஏற்பட்டது. இதுபற்றி பிரம்மாவிடமும், தேவர்கள் தலைவரான இந்திரனிடமும் முறையிடப்பட்டது. இதையடுத்து தேவர்களுக்கு வாழ்வளிக்க பாற்கடல் கடையப்பட்டது. அப்போது கடலிலிருந்து விஷ்ணு தன்வந்திரி அவதாரம் செய்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. இது அவரது 17 வது அவதாரமாகும். இந்த அவதாரத்தின்போது அவரது திருக்கர கலச அமிழ்தத்தை தேவர்கள் உண்டதால் நிறை வாழ்வு பெற்றதாக கூறப்படுகிறது.

அறுவை சிகிச்சையில்...
மேலும் சூரிய கடவுளிடம் இருந்து ஆயுர்வேதம் கற்றுத் தேர்ந்த பதினாறு மாணவர்களில் மிகவும் முக்கியமானவர் தன்வந்திரி என்று பிரம்ம வைவர்த்த புராணம் சொல்கிறது. பத்ம புராணம், வாயு புராணம், விஷ்ணு புராணமும் இந்த அவதாரம் குறித்து கூறுகிறது. அத்துடன் தனு என்ற வார்த்தைக்கு அம்பு, உடலை தைத்தல் என்கிற பொருள் உண்டு. எனவே, தன்வந்திரி வார்த்தைக்கு அறுவை சிகிச்சையில் சிறந்தவர் எனவும் பொருள்படும். தன்வந்திரியே வைத்தியத்தின் அரசன், சிறந்த மருத்துவர் என்றும் குறிப்பிடுகின்றனர்.












Click it and Unblock the Notifications