புர்கா அணிந்து கொண்டு "குத்தாட்டம்.!" தீயாக பரவும் பரபர வீடியோ.. 4 மாணவர்கள் மீது பாய்ந்த நடவடிக்கை
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் கல்லூரி விழா ஒன்றில் மாணவர்கள் சிலர் புர்கா அணிந்து நடனமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்தாண்டு தொடக்கம் முதலே ஹிஜாப் சர்ச்சை தொடங்கி ஹலால் இறைச்சி என வரிசையாக அங்குச் சர்ச்சைகள் அரங்கேறி வருகிறது.
இந்தச் சூழலில் மற்றுமொரு சர்ச்சை சம்பவம் அங்கு நடந்துள்ளது. அங்குள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் மாணவர்கள் சிலரின் நடனம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
மாண்டஸ் புயல் எதிரொலி.. சென்னையிலிருந்து இன்று இரவு அரசுப் பேருந்துகள் ரத்து.. தமிழக நிலவரம் என்ன?

புர்கா நடனம்
ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சமீபமாக வீடியோ ஒன்று வேகமாகப் பரவி வந்தது. 18 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில் 4 மாணவர்கள் புர்கா அணிந்து கொண்டு நடனமாடுவது போல இருந்தது. பிரபல பாலிவுட் பாடலான "ஃபெவிகோல் சே' என்ற பாடலுக்கு அவர்கள் ஆடியிருந்தனர். இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த மாணவர்கள் சில ஆபாசமான ஸ்டெப்களையும் புர்கா அணிந்து கொண்டு போட்டதாக இணையத்தில் பலரும் சாடினர்.

எழுந்த எதிர்ப்பு
இந்தச் சம்பவம் கர்நாடகாவின் மங்களூரில் செயின்ட் ஜோசபி பொறியியல் கல்லூரியில் நடந்துள்ளது. இந்த நான்கு மாணவர்களின் நடனம் இஸ்லாமியர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி பலரும் விமர்சித்தனர். மேலும், மத உணர்வைப் புண்படுத்தும் இதுபோன்ற நிகழ்ச்சிகளைக் கல்லூரி நிர்வாகம் எப்படி அனுமதிக்கலாம் என்றும் பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். இதனால் சம்மந்தப்பட்ட கல்லூரியில் இணையத்தில் பலரும் கடுமையாகச் சாடி கருத்துகளைப் பதிவிட்டனர்.

பாய்ந்த நடவடிக்கை
அங்கு நடந்த மாணவர் சங்கத்தின் தொடக்க விழா நிகழ்ச்சியில் இந்தச் சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. புதன்கிழமை மாலை இந்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், இது பெரும் பரபரப்பை உருவாக்கியது. இந்தச் சூழலில் இது தொடர்பாகச் சம்மந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக அந்த 4 மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும், அவர்கள் நான்கு பேரும் இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்றும் விளக்கமளித்துள்ளது.

என்ன நடந்தது
கல்லூரி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், "இணையத்தில் பரவி வரும் வீடியோ, மாணவர் சங்கத்தின் தொடக்க விழாவின் இன்பார்மல் நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்டது. இன்பார்மல் நிகழ்ச்சி நடந்த போது, திடீரென மேடையில் ஏறிய நான்கு இஸ்லாமிய மாணவர்கள் இப்படி நடனமாடிவிட்டனர். இது அங்கீகரிக்கப்பட்ட நிகழ்ச்சிகளின் ஒரு பகுதி இல்லை. சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. மேலும், அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

விளக்கம்
இரு வேறு சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்குத் தீங்கு விளைவிக்கும் செயல்களைக் கல்லூரி ஆதரிக்காது. இதுபோன்ற செயல்களைக் கல்லூரி நிர்வாகம் ஒருபோதும் அனுமதிக்காது. சம்மந்தப்பட்ட மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது. கல்லூரி நிர்வாகத்தின் இந்த விளக்கத்திற்குக் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிரான விமர்சனங்கள் குறைந்துள்ளது.

சஸ்பெண்ட்
முன்னதாக, இந்த ஆண்டு கர்நாடக எஸ்எஸ்எல்சி தேர்வில் ஹிஜாப் அணிந்ததற்காக நூர் ஃபஹிமா என்ற கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பெங்களூருவில் உள்ள கேடிஎஸ்வி பள்ளியில் கண்காணிப்பாளராக இருந்தவர் ஃபஹிமா. அவர் தேர்வின் கண்காணிப்பாளராக இருக்கும் போது, ஹிஜாப் அணிந்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, கர்நாடக பள்ளிகளில் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.