For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பி.எப் பணத்தை முழுசா எடுக்க முடியாதாம்!: 50 வயசு வரைக்கும் காத்திருக்கணும்!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான, பி.எப்., கணக்கில் உள்ள முழு பணத்தையும், முன்கூட்டியே திரும்ப பெறும் நடைமுறைக்கு கட்டுப்பாடு விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

50 வயதுக்கு பின், சந்தாதாரர்கள் முழு தொகையையும் எடுக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் திட்டமிட்டுள்ளது.

EPFO mulls changes in scheme to curb pre-mature PF withdrawals

இந்தியாவில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் எனப்படும் தினக்கூலிகள் தவிர்த்து, அமைப்பு சார்ந்த தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்குத்தான் ஊழியர் சேமநல நிதி அல்லது ஊழியர் வருங்கால வைப்பு நிதி எனப்படும் பி.எப். தொகை, அவர்களது அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதம் பிடிக்கப்பட்டு, அதே தொகை அவர்கள் பணிபுரியும் நிறுவன பங்காகவும் அவர்களது பி.எப். கணக்கில் சேர்க்கப்படுகிறது.

இதில் ஊழியர்களின் சம்பள முறை, அடிப்படையில் இருந்தால், நிறுவன பங்காக செலுத்தப்படும் தொகையும் ஊழியரின் சம்பளத்திலிருந்தே பிடிக்கப்பட்டு செலுத்தப்படும். அதாவது ஒரு ஊழியருக்காக சம்பந்தப்பட்ட நிறுவனம் ஊதியம் உள்ளிட்டவற்றுக்காக ஆண்டு ஒன்றுக்கு எவ்வளவு செலவிட தீர்மானிக்கிறதோ, அது மொத்தமாக கணக்கிடப்பட்டு முதலிலேயே ஒருவருக்கு சம்பளம் இவ்வளவு என்று தெரிவிக்கப்படும்.

இந்நிலையில் அரசு ஊழியர்களை பொறுத்தவரை அவர்கள் ஒருமுறை வேலைக்கு சேர்ந்துவிட்டால், பெரும்பாலும் ஓய்வுபெறும் வரை பணியாற்றுகின்றனர். நோய் உள்ளிட்ட சில தவிர்க்க முடியாத காரணங்களை தவிர்த்து சம்பந்தப்பட்ட ஊழியர் வேலையை விடுவதில்லை. அரசு வேலையை விட்டு தனியார் வேலைக்கு செல்வதும் ரொம்பவே அரிது.

தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களில், ஒரே நிறுவனத்தில் ஓய்வு பெறும் வரை வேலை பார்ப்பவர்கள் என்பது மிகக்குறைவான சதவீதத்தினரே. சிலர் பல்வேறு காரணங்களுக்காக அடிக்கடி வேலை மாறுகின்றனர். சிலர் வேலைக்கு சேர்ந்த மூன்று மாதத்திலேயே வேறு நிறுவனத்திற்கு மாறுகின்றனர் என்றால், சிலர் ஐந்தாண்டு அல்லது பத்தாண்டுகளில் மாறுகின்றனர்.

புதிதாக வேலைக்கு சேரும் நிறுவனத்தில் தரப்படும் பி.எப். கணக்கு எண்ணுக்கு, தாங்கள் முன்னர் வேலை பார்த்த நிறுவனத்தில் அளிக்கப்பட்ட பி.எப். கணக்கில் சேர்ந்த தொகையை மாற்றிக்கொள்ளலாம் என்றபோதிலும், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் குறிப்பாக பழைய நிறுவனத்திற்கு அலைவது உள்ளிட்ட காரணங்களால் அதனை செய்ய முன்வருவதில்லை. வேலை மாறுபவர்கள் அல்லது வேலையை விடுபவர்கள், தாங்கள் பணிபுரிந்த காலத்தில் செலுத்திய பி.எப். பணத்தை உடனடியாக விண்ணப்பித்து, குறிப்பிட்ட காலத்திற்குள் பெற்று விடுகின்றனர்.

இன்னும் சில குறிப்பிட்ட சதவீதத்தினர், முன்பு வேலை செய்த நிறுவனத்தில் பிடிக்கப்பட்ட பி.எப். தொகை ஒரு சில ஆயிரங்களுக்குள் இருக்கும்பட்சத்தில், அதனை எடுக்காமலேயே விட்டுவிடுகிறார்கள்.

நிரந்தர பி.எப் கணக்கு எண்

இதுபோன்ற நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாகத்தான் வேலை செய்யும் பணியாளர்கள் ஒவ்வொருக்கும் நிரந்தர பி.எப். கணக்கு எண் (Universal Account Number -UAN) வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

இதன் மூலம் ஒருவர் எத்தனை நிறுவனங்களுக்கு வேலை மாறினாலும் அவரது பி.எப். கணக்கு மாறாது. தொடர்ந்து அதே எண்ணிலேயே பி.எப்.பிற்காக பிடித்தம் செய்யப்படும் தொகை செலுத்தப்படும். இந்த திட்டம் முழு வீச்சில் நடைமுறைப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்தக்கட்டமாக வேலை செய்வோர், தங்களது பி.எப் பணத்தை முதிர்வு காலத்திற்கு முன்னரே எடுக்கும் போக்கை குறைக்கும் நோக்கில், புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் திட்டமிட்டுள்ளது.

50 வயதுக்குப் பின்னர்

இதன்படி, சந்தாதாரர்களுக்கு, 50 வயதான பின், அவர்கள் பி.எப்., கணக்கில் உள்ள முழு தொகையையும் திரும்ப பெற முடியும். அதற்கு முன் திரும்ப பெற வேண்டுமானால், கணக்கில் உள்ள, 90 சதவீத தொகையை மட்டுமே திரும்ப பெற முடியும். மீதமுள்ள, 10 சதவீத தொகை, அவர்கள் கணக்கிலேயே இருக்கும். 50 வயதுக்கு பின், அந்த தொகையை பெற முடியும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் கே.கே. ஜலான், அண்மையில் நடத்திய ஆய்வு கூட்டத்தில் இந்த யோசனை தெரிவிக்கப்பட்டு, அதனை அமல்படுத்த ஒப்புதலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரவேற்பு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் இந்த ஆலோசனையை, தொழிலாளர் மற்றும் ஊழியர் சங்கங்கள் வரவேற்றுள்ளன. 'எந்த நிறுவனத்துக்கு சென்றாலும் பயன்படுத்தும் வகையில், பி.எப்., சந்தாதாரர்களுக்கு 'யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர்' கொடுக்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தால், பி.எப்., கணக்கிலிருந்து அடிக்கடி பணம் எடுக்கும் நடவடிக்கை குறையும்' என, ஊழியர் சங்கங்கள் தெரிவித்து உள்ளன.

மருத்துவ செலவு

பி.எப்., கணக்கில் உள்ள முழு தொகையையும் திரும்ப பெறுவதற்கான புதிய விதிமுறை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை; ஆலோசனை மட்டுமே நடத்தப்பட்டுள்ளது.

புதிய நடைமுறை அமலுக்கு வந்தாலும், மருத்துவம் மற்றும் திருமணம் தொடர்பான விஷயங்களுக்காக சந்தாதாரர்கள், பி.எப்., கணக்கிலிருந்து பணம் எடுக்கும் நடைமுறையில் மாற்றம் வராது என, கூறப்படுகிறது.

ரூ. 27000 கோடி

நாடு முழுவதும், பல்வேறு ஊழியர் மற்றும் தொழிலாளர்களின் பி.எப்., கணக்குகளில் உள்ள, 27,000 கோடி ரூபாய், யாரும் உரிமை கோரப்படாமல் உள்ளது. இந்த தொகைக்கு உரியவர்களை கண்டறிவதற்கு பி.எப்., அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

English summary
Retirement fund body EPFO plans to hold about 10 per cent of subscriber money till they turn 50 for discouraging premature withdrawal of entire amount in PF account by members before their superannuation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X