பாடகர் மூஸ் வாலா கொலை.. கூலிப்படையுடன் போலீஸ் “பார்ட்டி”! இந்தியாவைவிட்டே வெளியேறுவேன் -தந்தை வேதனை
சண்டிகர்: பஞ்சாபில் பிரபல பாடகர் சித்து மூஸ்வாலாவை கொன்ற குற்றவாளிகள் மீது ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று அவரது தந்தை எச்சரித்து இருக்கிறார்.
பிரபல பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலாவுக்கு அந்த மாநிலத்தை கடந்து நாடு முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பிரச்சாரம் செய்தார்.
இந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன் சித்து மூஸ் வாலா பட்டப்பகலில் கூலிப்படை கும்பலால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். காரில் சென்றுகொண்டிருந்த அவரை கடந்த மே 29 ஆம் தேதி மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றனர்.
படுகொலையான பாடகர் சித்து மூசே வாலா.. குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன ராகுல் காந்தி

கைதான கூலிப்படை
இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த கோல்டி ப்ரார் கூலிப்படை கும்பலின் தலைவர் லாரன்ஸ் பிஸ்னாய், அங்கில்த் சிர்ஸா, பிரியவர்த், காஷிஷ், கேசவ் குமார் உள்ளிட்டோரை கைது செய்த டெல்லி காவல் துறை அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், பஞ்சாப் போலீஸ் சீருடைகள் மற்றும் பயங்கர ஆயுதங்களை கைப்பற்றி இருக்கின்றனர்.

மூஸ்வாலா தந்தை
இந்த நிலையில் கொல்லப்பட்ட பாடகர் சித்து மூஸ்வாலாவின் தந்தை பால்கவுர் சிங் சித்து, காவல்துறை மற்றும் விசாரணை அமைப்புகளின் மீது குற்றம்சாட்டி இருக்கிறார். "எனது மகன் பட்டப்பகலில் கடந்த 5 மாதங்களுக்கு முன் கொல்லப்பட்டார். ஆனால், இன்று வரை எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை.

நாட்டைவிட்டு வெளியேறுவேன்
அடுத்த ஒரு மாதத்திற்குள் கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்த நாட்டை விட்டே நாள் வெளியேறுவேன்." என்று கூறி இருக்கிறார். மூசா கிராமத்தில் சித்து மூஸ் வாலாவின் ரசிகர்கள் மத்தியில் பேசிய அவரது தந்தை, "டிஜிபியிடம் சில விசயங்கள் பற்றி தெரிவிப்பதற்காக நேரம் கேட்டு இருக்கிறேன்.

வழக்கை வாபஸ் பெறுவேன்
நான் நவம்பர் 25 ஆம் தேதி வரை காத்திருப்பேன். அதற்குள் எதுவும் நடக்காவிட்டால், என்னுடைய வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டு நாட்டை விட்டே சென்றுவிடுவேன். காவல்துறையும் மத்திய புலனாய்வு நிறுவனங்களும் எனது மகனின் சக கலைஞர்களிடம் விசாரணை நடத்தியது. ஆனால், கூலிப்படை தலைவன் லாரன்ஸ் பிஸ்னோயின் ஆட்களிடம் விசாரிக்கவில்லை." என்று கூறியுள்ளார்.

விசாரணை அதிகாரி
மத்திய புலனாய்வுத்துறை விசாரணை அதிகாரியாக இருந்து நீக்கப்பட்ட ஆய்வாளர் ப்ரீத்பால் சிங்தான் சித்து மூஸ் வாலா வழக்கை விசாரித்து வந்தார். அவர் சண்டிகரில் உள்ள டிஸ்கோ பார்டியில் கூலிப்படை கும்பலுடன் கலந்துகொண்ட வீடியோவை பால்கவுர் சிங் சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றவாளிகளுடன் போலீஸ்
"ஆய்வாளர் ப்ரீத்பால் சிங் கூலிப்படை கும்பலை சேர்ந்த தீபக் தினுவுக்கு நெருக்கமான மோகித் பரத்வாஜுடன் தொடர்பில் இருந்து இருக்கிறார். அவர்தான் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி போலீஸ் விசாரணையில் இருந்து தப்பிச் சென்றவர். சண்டிகரில் உள்ள ஒரு விடுதியில் ஆய்வாளர் ப்ரீத்பால் சிங் மோகித்துடன் இருந்துள்ளார்.

கூலிப்படை பி டீம்
தினு போலீஸ் கஸ்டடியில் இருந்தபோது டிஸ்கோவுக்கு சென்றதுடன் ஷாப்பிங்கும் செய்துள்ளார் ஆய்வாளர் பிரீத்பால் சிங். டிஸ்கோ உரிமையாளரை தினு தொடர்பு கொண்டு தேவையான வசதிகளை செய்துகொடுக்க சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது. பிஸ்னாயின் பி டீம் சண்டிகரில் இருக்கிறது. ஆனால், அவர்களிடம் விசாரணை நடத்துவது பற்றி யாரும் கவலைப்படவில்லை.

இதுதான் நீதியா?
சித்து மூஸ் வாலா மரணத்துக்கு நியாயம் கேட்டு பாடகி ஜென்னி ஜோஹல் உள்ளிட்ட 2 பெண்கள் குரல் எழுப்பியதற்காக அவர்களுக்கு என்.ஐ.ஏ. சம்மன் அனுப்பி இருக்கிறது. இதுதான் நீதியை வழங்குவதற்கான வழியா? ஆய்வாளர் ப்ரீத்பால் சிங் பணம் பெற்றுக்கொண்டு செயல்பட்டார்." என்று விமர்சித்துள்ளார்.