உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% ரிசர்வேசன்.. டிகேஎஸ் இளங்கோவன் எதிர்ப்பு..பொன்.ராதாகிருஷ்ணன் வரவேற்பு
சென்னை: உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது தேவையற்றது என்பதே திமுகவின் நிலைப்பாடு என்றும் சமூக ரீதியாக மட்டுமே இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும் திமுகவின் செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். அதே நேரத்தில் இந்த தீர்ப்பு வரவேற்புக்குரியது என்று பாஜகவின் மூத்த தலைவர் பொன். ராதகிருஷ்ணன் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2019ஆம் ஆண்டு, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறியப் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்து, 103-வது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை கொண்டுவந்தது. ஆனால் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும்முறை அரசியலமைப்பில் இல்லை என்று கூறி யூத் ஃபார் ஈகுவாலிட்டி என்ற அமைப்பு, அரசியல் கட்சிகள், தனிநபர்கள் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
சமூக ரீதியிலும், கல்வி ரீதியிலும் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற அரசியல் சாசன விதிகளை மீறி உயர்சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதாக திமுக, விசிக, உள்ளிட்ட கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இட ஒதுக்கீடு
இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டம் அல்ல, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டம் என்று திமுக எம்.பி. வில்சன் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டார். பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு என்பது சமத்துவத்தை பின்பற்ற சொல்லும் அரசியல் சட்ட பிரிவு 14க்கு எதிரான அநீதி என்றும் இடஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கத்தையே சிதைக்கிறது என்றும் திமுக சார்பில் வாதிடப்பட்டது.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இந்த சட்ட திருத்தம் முறையானது என்று வாதிட்டனர். அனல்பறந்த வாத பிரதிவாதங்களுடன் செப்டம்பர் மாதத்தில் 7 நாட்கள் அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு உறுதி செய்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் 3 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

3 நீதிபதிகள் ஆதரவு
இடஒதுக்கீடு விவகாரத்தில் மறுபரிசீலனை செய்யும் தருணம் வந்துவிட்டது. 10% இட ஒதுக்கீடு செல்லும்; அதில் எந்தவித விதிமீறல் இல்லை. சமூக சமத்துவத்திற்கு எதிராக 10% இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று நீதிபதி மகேஸ்வரி தீர்ப்பளித்தார். 10% இடஒதுக்கீடு சட்டத்திருத்தம் 50%இடஒதுக்கீடு என்ற வரையறையை மீறவில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10%இட ஒதுக்கீடு செல்லும் என்று நீதிபதி பேலா திரிவேதி தீர்ப்பளித்தார். ஒவ்வொரு ஒதுக்கீட்டுக்கும் கால நிர்ணயம் தேவை என்று நீதிபதி பர்திவாலா தீர்ப்பளித்தார். இரண்டு நீதிபதிகள் 10 சதவிகித இட ஒதுக்கீடுக்கு எதிராக தீர்ப்பளித்துள்ளனர்.

டிகேஎஸ் இளங்கோவன்
உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் கருத்து கூறி வருகின்றனர். திமுகவின் செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளர்கோவன், எங்களுடைய நிலைப்பாடு என்பது பொருளாதார ரீதியாக இதை எடுக்கக் கூடாது சமுதாய ரீதியாக மட்டுமே இதை எடுக்க வேண்டும் என்று கூறினார். கல்வியிலும் சமுதாயத்திலும் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு தரவேண்டும் என்பது அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளது. தற்போது பொருளாதாரத்தையும் இணைத்திருக்கிறார்கள்.

போராடி பெற்ற இட ஒதுக்கீடு
பொருளாதாரம் என்பது இந்த வரமுறைக்குள் வராது சமுதாயம் பிரிந்து கிடந்த போது நாங்கள் எல்லாம் இட ஒதுக்கீட்டை போராடி பெற்றோம். சமுதாய கல்வி அடிப்படையில் இட ஒதுக்கீடு அமைய வேண்டும் என்று வாதிடப்பட்டது. சமுதாய ரீதியாக கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கும் கல்வி வழங்க வேண்டும் என்பதே இட ஒதுக்கீட்டின் நோக்கமே என்றும் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

உயர்சாதியினருக்கு இட ஒதுக்கீடு
10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது உயர்சாதியில் பின் தங்கியவர்களுக்கு என்றும் வந்துள்ளது. தீர்ப்பை முழுமையாக படித்து விட்டு வழக்கறிஞர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி கூறுகிறோம் என்றும் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

பொன்.ராதாகிருஷ்ணன்
10 சதவிகித இட ஒதுக்கீடு பற்றிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்து கூறியுள்ள பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், இந்த தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. சமுதாயத்தில் அனைவரும் படிக்க வேண்டும் என்பதே பெருந்தலைவர் காமராஜரின் கனவாகும். அதே நோக்கத்தோடு மோடி அவர்களும் சமுதாயத்தின் பின் தங்கியவர்களும், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களும் படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ரிசர்வேசனை ஏற்படுத்தினார். இந்த இட ஒதுக்கீடு யாருக்கும் எதிரானது அல்ல. உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது என்றும் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
