எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டோம் என ஏமாற்றினோமா?... சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்
பெரியார் கண்ட கனவை கலைஞர் முன்னெடுத்ததை செயல்படுத்தி வருகிறேன் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோடிக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பு என்னை இயக்குகிறது நாம் கடக்க வேண்டிய தூரம் அதிகம் என்றும் அவர் கூறியுள்ளா
சென்னை: வாழ்த்த மனமில்லாதவர்களையும் வென்றெடுக்க அடுத்த 100 நாளில் பணிகள் இருக்கும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். நான் இப்போது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதாக சொல்லி உங்களையும் ஏமாற்றி என்னையும் ஏமாற்றிக் கொள்ள நான் தயாராக இல்லை. படிப்படியாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறோம். நிறைவேற்றுவோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. அதை உறுதியாக நிறைவேற்றுவோம் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
100 நாள் திமுக ஆட்சி, வேளாண் பட்ஜெட் ஒரே நாளில் வந்தததால், கருணாநிதி நினைவிடம் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காய்கறிகளின் மேல், 100 நாள் ஆட்சி மக்கள் மகிழ்ச்சி என எழுதப்பட்டிருந்தது.
தமிழக சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வாசித்து முடித்ததும் திமுக அரசின் 100 நாள் சாதனைகளை தோழமை கட்சித் தலைவர்கள் பாராட்டி பேசினார்கள்.
அதிமுக தவிர பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்களும் சட்டசபையில் பேசினார்கள்.

ஸ்டாலின் பேச்சு
ஏற்புரை நிகழ்த்திய மு.க ஸ்டாலின், தேர்தலுக்கு முன்பு எனக்கோ, கழகத்துக்கோ இருந்த எதிர்பார்ப்பை விட இந்த 100 நாட்களில் எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகி இருக்கிறது என்றார். திமுகவிற்கு வாக்களிக்காதவர்கள் கூட இப்போது தேர்தல் நடந்தால் வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள். இந்த அளவுக்கு ஒரு பெயரை பெற்றிருக்கிறோம். அந்த பெயரை காலமெல்லாம் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் எனது எண்ணமாக இருந்து கொண்டிருக்கிறது.

100 நாள் ஆட்சி
தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. படிப்படியாக தொடர்ந்து நிறைவெற்றுவோம். நம்பிக்கை கொடுக்கும் நாட்களாக 100 நாள் ஆட்சி அமைந்துள்ளது. 100 நாள் சாதனை பற்றி பேசினீர்கள். ஆனால், அடுத்து வரும் காலம் பற்றியே என் நினைப்பு இருக்கிறது. வாழ்த்த மனமில்லாதவர்களையும் வென்றெடுக்க அடுத்த 100 நாளில் பணிகள் இருக்கும்.

கடக்க வேண்டிய தூரம் அதிகம்
கொரோனா காலத்தில் லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியதும்; அவர்களுக்கு உறுதுணையாக இருந்ததும்தான், இந்த அரசு 100 நாட்களில் செய்த பெரிய சாதனையாக நான் கருதுகிறேன். இது மக்களின் சாதனை, உங்களுக்கு உழைக்க எனக்கு நீங்கள் உத்தரவிட்டதால் கிடைத்த பயன் இது. பெரியார் கண்ட கனவை கலைஞர் முன்னெடுத்ததை செயல்படுத்தி வருகிறேன். கோடிக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பு என்னை இயக்குகிறது நாம் கடக்க வேண்டிய தூரம் அதிகம் என்று கூறினார்.

போர்க்கால அடிப்படை
ஆட்சிக்கு வரும் போது கொரோனா என்ற பெருந்தொற்று நம்மை சூழ்ந்து இருந்தது. அதை எதிர்கொள்ள நாமெல்லாம் போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைந்து செயல்பட்டோம். முதல் ஒரு மாத காலம் ஆம்புலன்ஸ் சத்தம்தான். அந்த சத்தம் நம்மை நிம்மதியாக இருக்க விடவில்லை. அதையும் தாண்டி மருத்துவமனையில் இடமில்லை. ஆக்சிஜன் பற்றாக்குறை. இப்படி ஏதாவது ஒரு செய்தி வந்து எனது மனதை வாட்டி வதைத்தது.

ஏமாற்ற விரும்பவில்லை
இதையெல்லாம் சமாளிப்பதற்காகத்தான் உடனடியாக ஒரு வார் ரூமை ஏற்படுத்தினோம். மக்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்டோம். அதை முடிந்த வரைக்கும் நாம் நிவர்த்தி செய்தோம். இன்னும் சொல்ல வேண்டுமானால் கோரிக்கைகளே வராத சூழ்நிலையை இப்போது உருவாக்கி இருக்கிறோம்.
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரை போல இந்த அரசு நடவடிக்கை எடுத்தது என்று நம்மை பற்றி நம்முடைய வருங்கால தலைமுறை சொல்ல வேண்டும். நான் இப்போது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதாக சொல்லி உங்களையும் ஏமாற்றி என்னையும் ஏமாற்றிக் கொள்ள நான் தயாராக இல்லை. படிப்படியாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறோம். நிறைவேற்றுவோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. அதை உறுதியாக நிறைவேற்றுவோம் என்றார்.

வரி இல்லா நிதிநிலை அறிக்கை
நேற்றைய தினம் முதல் நிதிநிலை அறிக்கையை நம்முடைய நிதி அமைச்சர் தாக்கல் செய்தார். நமது அரசின் 100-வது நாளான இன்று தமிழக வரலாற்றில் பதிவாகக் கூடிய வகையில் நீங்கள் பெருமையோடு சொன்ன அடிப்படையில் வேளாண் துறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து துறைகளுக்கும் தாயுள்ளத்தோடு திட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரி இல்லாத நிதி நிலை அறிக்கை கொடுத்துள்ளோம்.

சந்தேகம் வேண்டாம்
இப்போதுதான் தொடங்கி உள்ளோம். படிப்படியாக வாக்குறுதிகளை நிறைவேற்றி காட்டுவோம். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். கலைஞர் இருந்து செய்ய வேண்டியதை அவரது மகன் நிச்சயமாக செய்வான் என்ற உறுதியை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த 100 நாட்களில் 2 மடங்கு உழைப்போம்.












Click it and Unblock the Notifications