கோவிலுக்கு பதிலாக.. சூடு ஏற்றிய சூரி! வரிந்து கட்டி வந்த அமைப்புகள்! இப்போ என்ன சொல்றார் தெரியுமா?
சென்னை : ஆயிரம் கோயில்கள் கட்டுவதை விட ஒரு மாணவனுக்கு கல்வி வழங்குவது நல்லது என விருமன் பட விழாவில் நடிகர் சூரி பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தான் கோவிலுக்கு எதிரானவன் கிடையாது எனவும் என்னுடைய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என நடிகர் சூரி விளக்கம் அளித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் முத்தையாவும் நடிகர் கார்த்தியும் இணைந்து உருவாக்கியுள்ள விருமன் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் இயக்குனர் முத்தையா, நடிகர் கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விருமன்
இந்த படத்தில் கார்த்தியுடன் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள், ராஜ் கிரண் மற்றும் சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு எதிர்பார்ப்புகள் எகிறியுள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுரையில் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் நடிகர் சூர்யாவும் கலந்து கொண்ட நிலையில், நிகழ்ச்சி களைகட்டியது.

நடிகர் சூரி சர்ச்சை
பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சூரி, நடிகர் சூர்யாவை மிகவும் புகழ்ந்து பேசினார். குறிப்பாக நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை குறித்து உணர்ச்சிப்பூர்வமாக குறிப்பிட்டார். அப்போது ஆயிரம் கோவில் கட்டுவதைவிட, அன்னசத்திரத்தை விட ஒரு மாணவனுக்கு கல்வி வழங்குவது சிறந்தது என பேசினார். அதற்கு சில இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. ஏற்கனவே சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா இதேபோல் பேசியது விவகாரமானது குறிப்பிடத்தக்கது.

பேச்சுக்கு விளக்கம்
இந்த நிலையில் தான் கோயிலுக்கு எதிரானவன் கிடையாது என நடிகர் சூரி விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற விருமன் பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சூரி தான் மதுரையில் பேசிய பேச்சுக்கு கிளம்பிய சர்ச்சைகள் குறித்து விரிவான விளக்கம் ஒன்றை அளித்தார். அதில்,"நான் எந்த வேலை தொடங்கினாலும் மதுரை மீனாட்சி அம்மனை வைத்து தான் ஆரம்பிப்பேன். கடவுளுக்கு எதிரானவன் தான் கிடையாது.

எதிரானவன் கிடையாது
நான் நடத்தும் ஹோட்டல்களுக்கு அம்மன் என தான் பெயர் வைத்துள்ளேன். சிலர் நான் சொன்னதை தவறாக எடுத்து கொண்டனர். என்னுடைய பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. நான் படிக்காதவன் அதனால் மற்றவர்கள் படிக்க வேண்டும் என்று தான் அதை சொன்னேன். நான் கோவிலுக்கு எதிரானவன் கிடையாது. அத்துடன் நான் படிக்காதவன் எனபதால் கல்வியின் முக்கியத்துவம் எனக்கு தெரியும் எனவும் தெரிவித்தேன்." என பேசினார்.


Click it and Unblock the Notifications
