தமிழக பள்ளி மாணவர்களுக்கு திறனறி தேர்வு.. கல்வித்துறை உத்தரவு.. எந்தெந்த வகுப்புகளுக்கு தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக ஒரு ஆண்டுக்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் பூட்டிக் கிடந்தன. 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலும் தேர்வுகள், 11-ம் வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.
10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து கொரோனா கட்டுக்குள் வந்ததால் தமிழகத்தில் பள்ளி, கல்லுரிகள் செப்டம்பர் 1-ம் தேதி முதல் திறக்கப்பட்டன.

வகுப்புகள் திறக்கப்பட்டன
அதாவது 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் திறக்கப்பட்டன. இதனால் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்க வேண்டும் என்று தொடர்ச்சியாக கோரிக்கைகள் எழுந்து வந்தன. இது தொடர்பாக பெற்றோர்களிடமும், மருத்துவ நிபுணர்களிடமும் தமிழக அரசு ஆலோசனை நடத்தியது.

1 முதல் 8-ம் வரை வகுப்புகள் தொடங்கும்
இந்த நிலையில் நவம்பர் 1-ம் தேதியில் இருந்து 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. மேலும், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி மையங்களும் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. பல மாதங்களாக மாணவர்கள் பள்ளிக்கு வராததால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் குறைபாட்டை சரி செய்யும் விதமாக மாணவர்களுக்கு திறனறிவு தேர்வு நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது.

பள்ளிக்கல்வி இயக்குநரகம்
இந்த நிலையில் தமிழகத்தில் மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி 3, 5, 8 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 12-ம் தேதி திறனறிவு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:-

மாநில அளவில் திறனறித்தேர்வு
கொரோனா பரவலால் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்பீட்டை கண்டறிய நாடு முழுவதும் திறனறித் தேர்வு நடத்த மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் 3, 5, 8, 10-ம் வகுப்புகளுக்கு மாநில அளவில் திறனறித்தேர்வு நவம்பர் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏற்கனவே மதிப்பீடு தேர்வு ஒன்றை பள்ளிகல்வித்துறை நடத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications