எனக்கும் பல பிரச்சனைகள்.. நான் இப்படியா முடிவெடுத்தேன்..? காயத்ரி ரகுராமுக்கு வானதி கொடுத்த அட்வைஸ்!
சென்னை : பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ராகுராமுக்கு, அக்கட்சியின் மகளிரணி தலைவியும் எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் அறிவுரை வழங்கியுள்ளார். "பிரச்சனைகளை எப்படி லாவகமாக, தைரியத்தோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதை நாம்தான் தெரிந்துகொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு தலைவர்களைப் பொதுவெளியில் விமர்சிப்பதன் மூலமாக, பிரச்சனையை வெளியே கொண்டு வரலாமே தவிர, நீதி கிடைக்காது" என வானதி சீனிவாசன் காயத்ரி ரகுராமுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
நடிகை காயத்ரி ரகுராமுக்கும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் அவர் கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில் அவரை கட்சியின் அடிப்படை பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அண்ணாமலை உத்தரவிட்டார்.
இந்நிலையில், பாஜகவுக்கு எதிராக சென்னை முதல் கன்னியாகுமரி வரை நடைபயணம் செல்ல இருப்பதாக காயத்ரி ரகுராம் அறிவித்து, தேதியையும் அறிவித்துள்ளார்.

காயத்ரி ரகுராம் விமர்சனம்
பாஜகவில் கடந்த 8 ஆண்டுகளாக இருந்தவர் காயத்ரி ரகுராம். பாஜகவில் அண்டை மாநில மற்றும் வெளிநாட்டு தமிழ் வளர்ச்சிப் பிரிவின் தலைவராகச் செயல்பட்டு வந்தார். பாஜகவில் சூர்யா சிவா, டெய்சி சரண் விவகாரத்தில் ட்விட்டரில் அண்ணாமலையை மறைமுகமாக விமர்சித்ததற்காக கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மாநிலத் தலைவர் அண்ணாமலை காயத்ரியை 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில் தொடர்ந்து சமூகவலைதளங்களில் அண்ணாமலைக்கு எதிராகவும் அவர் பெண்களை குறிவைத்து அவதூறு கிளப்புவதற்காகவே வார் ரூம் வைத்திருப்பதாகவும் ட்விட்டரில் விமர்சித்து வருகிறார் காயத்ரி.

கட்சியில் இருந்து விலகல்
மேலும், டெல்லி பாஜக தலைவர்களிடமும் அண்ணாமலை பற்றி புகார்களைத் தெரிவித்ததோடு, ட்விட்டரில் தொடர்ச்சியாக அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வந்தார். அண்ணாமலையின் ஆதரவாளர்கள், காயத்ரியின் ட்விட்டர் பதிவுகளில் அவரை கடுமையாகத் தாக்கிப் பதிவிட்டு வந்தனர். இதையடுத்து, பாஜகவில் இருந்து விலகுவதாகவும் சமீபத்தில் அறிவித்தார் காயத்ரி. இந்நிலையில் நேற்று கட்சியில் இருந்து காயத்ரி ரகுராமை நீக்கினார் அண்ணாமலை.

தூக்கி எறிஞ்சிட்டீங்க
இதையடுத்து காயத்ரி வெளியிட்ட அறிக்கையில், "என் தொழிலைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெயரைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெண்மையை அவமானப்படுத்தியதற்கு நன்றி, என்னை மானபங்கம் செய்ததற்கு நன்றி, என் 8 வருட சேவை, கடின உழைப்பு மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டதற்கு நன்றி, எல்லாவற்றையும் பறித்த பிறகு என்னை தூக்கி எறிந்ததற்கு ஒரு பெரிய நன்றி. என்னால் திரும்பக் கொண்டுவர முடியாத இளமைக் காலத்தை பறித்ததற்கு நன்றி. என் தனிப்பட்ட வாழ்க்கையை பறித்ததற்கு நன்றி. எனக்கு துரோகம் செய்த பாஜகவுக்கு நன்றி. நான் என் தர்மத்தை நிலைநாட்டுவேன். விரைவில் களத்தில் சந்திப்போம்" எனத் தெரிவித்த்தார்.

கட்சிக்கு என கட்டுப்பாடு இருக்கிறது
இந்நிலையில், காயத்ரி ரகுராமுக்கு அறிவுரை வழங்கும் வகையில் வானதி சீனிவாசன் கூறுகையில், "காயத்ரி கொஞ்சம் உணர்ச்சிவசப்படக்கூடியவர். தவறு என்றால் உடனடியாகச் சொல்லக்கூடிய தைரியம் மிகுந்த பெண்மணி. ஆனால், கட்சிக்கு என்று ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. உங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு, கட்சிக்குள் இருக்கக்கூடிய அமைப்பு ரீதியான விஷயத்தைப் பின்பற்றித்தான் நியாயம் பெற வேண்டும். அதை விட்டுவிட்டு தலைவர்களைப் பொதுவெளியில் விமர்சிப்பதன் மூலமாக, பிரச்சனையை வெளியே கொண்டு வரலாமே தவிர, நீதி கிடைக்குமா என்பதை பார்க்க வேண்டும்.

எனக்கும் சிக்கல் வந்திருக்கிறது
பிரச்சனைகளை எப்படி லாவகமாக, தைரியத்தோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதை நாம்தான் தெரிந்துகொள்ள வேண்டும். எனக்கும் இதுபோன்ற பல்வேறு சிக்கல்கள் வந்திருக்கின்றன. அதையெல்லாம் பொறுமையாகவும், சட்டரீதியாகவும் தகர்த்து எறிந்திருக்கிறேன். அதனால் அந்த நம்பிக்கையைவிட்டு வெளியே செல்லக்கூடாது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications