இன்று வெளியாகும் பாஜக வேட்பாளர் பட்டியல்.. ஹெச் ராஜா, குஷ்புக்கு வாய்ப்பு? ஜேபி நட்டா தீவிர ஆலோசனை
சென்னை: பாஜக சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 20 வேட்பாளர்களின் பெயர்கள் இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து ஐந்து மாநிலங்களுடன் இணைந்து மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
பாமக, பாஜக, தமாக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறது. அதேபோல திமுகவும் காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது.

வேட்பாளர் பட்டியல்
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதிமுக தரப்பில் இரண்டு கட்டங்களாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதேபோல திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியானது.

பாஜக வேட்பாளர்கள்
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 20 வேட்பாளர்களின் பெயர்கள் இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பாளர்களை இறுதி செய்ய, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்ளத் தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் டெல்லி சென்றுள்ளார்.

தொகுதியில் முகாமிட்ட பாஜக தலைவர்கள்
பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்னரே, சேப்பாக்கம்-திருவெல்லிக்கேனியில் குஷ்பு, ராஜபாளையத்தில் கவுதமி ஆகியோர் முகாமிட்டு தங்கள் பிரசாரத்தை மேற்கொண்டு வந்தனர். இருப்பினும், அந்தத் தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு வேறு தொகுதிகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நயினார் நாகேந்திரன்
இதனிடையே நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளில் துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் உள்ளிட்ட சிலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். பாஜக தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் வெளியாகாத நிலையில், திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தார். நடிகை குஷ்பு திருநெல்வேலி தொகுதியைக் குறிவைத்துக் காய் நகர்த்துவதாகத் தகவல் வெளியான நிலையில், அவசர அவசரமாக நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.