இரண்டு கைகளை கூப்பி.. அய்யோ..அவுங்க பெரியவங்க.. அடியேன் சின்னவங்க.. அண்ணாமலையை விளாசிய துரைமுருகன்!
சென்னை: காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு நாடகம் நடத்துவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளதற்கு திமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு அமைச்சருமான துரைமுருகன் தமக்கே உரிய கிண்டல் பாணியில் பதில் கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். இதனைத் தொடர்ந்து இன்று டெல்லியில் காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. காவிரி ஒழுங்காற்று கூட்டம் நடக்கும் நிலையில் திடீரென காவிரியில் திறக்கும் நீர் அளவை கர்நாடகா அதிகரித்திருக்கிறது.

அதேநேரத்தில் காவிரியில் தமிழ்நாட்டுக்கு சொட்டு நீரைக் கூட தரக் கூடாது என கர்நாடகா விவசாயிகள் 36 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே மண்டியா பந்த், கர்நாடகா பந்த் , பெங்களூர் பந்த் நடத்தின கன்னட விவசாயிகள், கன்னட அமைப்புகள். இன்றும் பெங்களூரில் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளன.
தமிழ்நாட்டிலும் காவிரி டெல்டா மாவட்டங்களில் தமிழ்நாட்டுக்கான உரிய காவிரி நீரை திறக்க கோரி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் சுமார் 1,00,000 கடைகள் இன்று மூடப்பட்டுள்ளன.
இதனிடையே சென்னையில் இன்று, காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளிக்கையில், வினாடிக்கு 3,000 கன அடிநீரை கர்நாடகா திறந்துவிட ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அப்படி நீரை முழுமையாக கர்நாடா திறந்துவிட்டிருந்தால் பிலிகுண்டுலுவில் 4.15 டிஎம்சி நீர் நமக்கு வந்திருக்கும். ஆனால் இதுவரை 3.15 டிஎம்சி நீர்தான் வந்துள்ளது. இது குறித்து நாம் பேசுவோம் என்றார்.
பின்னர், காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு நாடகமாடுகிறது என தமது எக்ஸ் பக்கத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருக்கிறாரே என ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இந்த கேள்வி முடிவதற்குள் காரில் அமர்ந்தபடியே இரு கைகளையும் கூப்பி, பெரியவங்க.. அடியேன் சின்ன பையன்.. எங்க கிட்ட கேள்வி கேட்கிறீங்களே என தனக்கே உரித்தான கிண்டல் பாணியில் பதிலளித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார் அமைச்சர் துரைமுருகன்.












Click it and Unblock the Notifications