ஸ்மார்ட்டாக மாறும் சென்னை.. போக்குவரத்து போலீஸ் கையிலெடுத்த சூப்பர் திட்டம்..மக்களுக்கு குட்நியூஸ்
சென்னை: சென்னையில் வசித்து வரும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி போக்குவரத்து போலீசார் பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது சென்னை போக்குவரத்து போலீசார் குட்நியூஸ் தெரிவித்துள்ளனர். அதன்படி சென்னையை ஸ்மார்ட்டாக மாற்ற போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருவது தெரியவந்துள்ளது.
சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ஆண்டுதோறும் வாகனங்களின் எண்ணிக்கை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல நகரங்களில் மக்கள்தொகையை விட வாகனங்களின் எண்ணிக்கை இன்னும் சில ஆண்டுகளில் உயர்ந்து விடும் நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் தான் போக்குவரத்து விதிமீறல் வழக்குகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த அபராதத்தொகை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் போக்குவரத்து விதிகளை மீறும் நபர்களை கண்டுபிடிக்க தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

டிராஸ் தொழில் முறை
அந்த வகையில் தான் போக்குவரத்து ஒழுங்குமுறை கண்காணிப்பு ஜோன் ( Traffic Regulation Observed Zone அல்லது TROZ) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து ஒழுங்குமுறை கண்காணிப்பு ஜோன் என்பது தேசிய தகவல் மையத்துடன் (National Infomatice Centre அல்லது NIC) சேர்ந்து செயல்படும். இது போக்குவரத்து விதிகளை மீறும் நபர்களின் வாகன பதிவெண்ணை கேமரா மூலம் படம்பிடித்து அபராதம் விதிப்பதற்கான பணியை செய்து வருகிறது. இந்த திட்டம் சென்னையில் அமலில் உள்ளது. இதன்மூலம் சென்னையில் போக்குவரத்து போலீசார் இல்லாவிட்டாலும் கூட விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

5 இடங்களில் நடைமுறை
சென்னை அண்ணா நகரில் முக்கியமான 5 சந்திப்புகளில் TROZ நடைமுறையில் உள்ளது. இது தினமும் போக்குவரத்து விதிகளை மீறுவோரை அடையாளம் காட்டி அபராதம் விதிக்க உதவி வருகிறது. ஸ்பென்சர், ஈகா சந்திப்பு மற்றும் மின்ட் சந்திப்பு ஆகிய 3 இடங்களில் TROZ அமைக்க ரூ.10.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிய பல முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இ-சலான் மூலம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள இ-சலான் பற்றிய தகவல்களைப் பெற 12 மையங்கள் தொடங்கப்பட்டது.

ஸ்மார்ட் பணி துவக்கம்
இதேபோல் பல்வேறு புதிய திட்டங்களை சென்னை போக்குவரத்து போலீசார் கையில் எடுத்துள்ளனர். இந்த பணிகள் ஸ்மார்ட்டாக நடைபெற்று வருகிறது. இதுபற்றி சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிக்கையில், ‛‛சென்னையில் வாகன ஓட்டிகளுக்கு தெளிவாக போக்குவரத்து சிக்னல் தெரிவதற்காக 25 புதிய எல்இடி கம்பங்கள் முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில் நிறுவப்பட்டுள்ளன. 68 சிக்னல்களை மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் 186 முக்கிய சந்திப்புகளில் ரிமோட் சிக்னல்கள் நிறுவப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக்கிய 104 சந்திப்புகளில் ஒலிபெருக்கி மற்றும் பாடல்கள் மூலம் போக்குவரத்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ரோந்து வாகனங்களில் உதவி
சென்னையில் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 47 ரோந்து வாகனங்கள் மூலம் விபத்து அழைப்புகள், சமூக ஊடக அழைப்புகள் வந்தவுடன் விரைவாக போலீசார் செயல்படுகின்றனர். மேலும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணிகளிலும் ரோந்து வாகனங்கள் ஈடுபட்டு வருகின்றன. அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, விபத்துக்கள் நடைபெறுவதற்கான காரணங்களை அறிந்து நெடுஞ்சாலை துறையினர், பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள், 108 ஆம்புலன்ஸ்கள் மற்றும் போக்குவரத்து புலனாய்வு போலீசார் அடங்கிய குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது'' என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications