சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

''சத்துணவு சாப்பாடு தந்த வாழ்க்கை இது!'' –வெளிநாடுவாழ் தமிழர்களின் நெகிழ்ச்சி அனுபவங்கள்

Google Oneindia Tamil News

சென்னை: மதுரையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலை சிற்றுண்டி உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். 'சத்துணவுத் திட்டம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், இப்படியொரு வாழ்க்கை எங்களுக்குக் கிடைத்திருக்காது' என்கின்றனர், வெளிநாடுவாழ் தமிழர்கள்.

தமிழ்நாட்டில் கடந்த நூறு ஆண்டுகளாக பள்ளி மாணவர்களின் பசியைப் போக்கி வருகிறது, மதிய உணவுத் திட்டம். நீதிக்கட்சியின் கனவை திராவிடக் கட்சியான திமுக தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது.

பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு அளிக்கும் அரசின் திட்டத்தால் வாழ்க்கையில் உயர்ந்தவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது. அந்தவகையில், மதிய உணவால் உயரத்தை எட்டியவர்களைத் தேடிப்பிடித்து பேசினோம்.

மதிய உணவுத் திட்டத்தால், தங்களின் வாழ்க்கைத்தரம் எந்தளவுக்கு உயர்ந்தது என்பதை உணர்வுப்பூர்வமாக விவரித்தனர். அந்தப் பேச்சில் வலி கலந்த ஒருவித பெருமிதம் கலந்திருப்பதையும் நம்மால் உணர முடிந்தது.

'காலை சிற்றுண்டியில் சிறுதானியங்கள்!' - மாணவர்களுக்குக் கிடைக்கப் போகும் பலன்கள் என்ன? 'காலை சிற்றுண்டியில் சிறுதானியங்கள்!' - மாணவர்களுக்குக் கிடைக்கப் போகும் பலன்கள் என்ன?

சத்துணவுக்காகவே படிப்பு

சத்துணவுக்காகவே படிப்பு

தமிழ்நாட்டில் நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் தனக்கான அடையாளத்தை வகுத்துக் கொண்டவர், பாடகர் வேல்முருகன். ''சாதாரண குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு பள்ளியில் போடப்பட்ட மதிய உணவே, வாழ்க்கையைக் கொடுத்தது'' என நெகிழ்கிறார்.

''அந்த அனுபவத்தைச் சொல்ல முடியுமா?'' என்றோம்.

"என் இளவயதில் வீட்டில் சாப்பாடு என்பதையே பார்த்தது இல்லை. சோறு போடுகிறார்கள் என்றால் அது பள்ளிக்கூடத்தில் மட்டும்தான். வீட்டில் கூழோ கஞ்சியோ இருக்கும். அதுதான் பெரும்பாலும் காலை உணவு.

'பள்ளிக்குப் போனால் மதியம் சோறு கிடைக்கும்' என்பதற்காகவே படிக்கப் போனவர்களில் நானும் ஒருவன். நெய்வேலி பக்கம் உள்ள முதனை என்ற ஊர்தான் எங்கள் கிராமம். அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்தேன். அதன்பிறகு விருத்தாசலம் அரசுப் பள்ளியில் படித்தேன்.

என் அண்ணனும் நானும் பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவை வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் அப்பா, அம்மாவுடன் சேர்ந்து சாப்பிடுவோம். எனக்கு நினைவு தெரிந்து வீட்டில் சோறு சமைத்ததே இல்லை. பள்ளியில் பீட்ரூட் சாப்பாடு போடுவார்கள்.

சத்துணவு போட்டதால்தான் நான் பள்ளிக்கே போனேன். அங்கு சாப்பாடு மட்டும் போடவில்லை என்றால் என்னைப் போன்ற வசதியற்ற ஏழைக் குழந்தைகள் பள்ளிக்கூடம் பக்கமே சென்றிருக்க மாட்டார்கள்.

இன்று மதிய சாப்பாட்டுக்கும் ஒருபடி மேலே போய் காலை உணவை முதலமைச்சர் ஸ்டாலின் கொடுக்கிறார். அது எவ்வளவு பெரிய உதவி தெரியுமா? அந்தளவுக்கு இன்னும் நம் மக்களுக்குத் தேவை இருக்கிறது. வசதிபடைத்தவர்கள் இதை மறுத்துப் பேசலாம். என்னைப் பொறுத்தவரை சத்துணவு இல்லை என்றால் படிப்பறிவே இல்லாத ஒருவனாக இருந்திருப்பேன்" என்கிறார்.

சத்துணவும் கலிஃபோர்னியா வேலையும்

சத்துணவும் கலிஃபோர்னியா வேலையும்

வேல்முருகனை போலவே, சத்துணவால் கிடைத்த வாழ்க்கையை உணர்வுபூர்வமாக நம்மிடம் விவரித்தார், கனகராஜன் நடராஜன். இவர் அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவில் சீனியர் நெட்வொர்க் ஆர்க்கிடெக்ட் ஆகப் பணிபுரிகிறார்.

இவர், அரசுப் பள்ளியில் போடப்பட்ட சத்துணவால் வளர்ந்தவர். ''ஒரு காலத்தில் வறுமையால் குடும்பமே தத்தளித்தபோது தனது பள்ளிக்கனவை நிறைவு செய்வதற்கு, அந்தச் சாப்பாடுதான் உதவியது'' என்கிறார்.

சத்துணவு சாப்பாட்டை மறக்காமல் தன் பழைய வாழ்க்கையை நினைவுகூர்ந்தார், கனகராஜன் நடராஜன். ''சென்னையில்தான் நான் வளர்ந்தேன். ஆறாம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரைக்கும் தமிழ் வழியில் படித்தேன். அதுவும் சென்னை மாநகராட்சி அரசுப் பள்ளியில்.

என்னுடன் பிறந்தவர்கள் ஏழு பேர். அப்பாவின் வருமானம் வீட்டில் உள்ளவர்களுக்குச் சாப்பாடு சமைப்பதற்கே போதுமானதாக இருந்தது. வீட்டில் மூன்று வேளை உணவை எல்லாம் எதிர்பார்க்க முடியாது. காலையில் பள்ளிக்குப் போகும்போது இரவு மீதமான பழைய சாதத்தைச் சாப்பிட்டுவிட்டுப் போவேன்.

பலநேரங்களில் அதுவும் இருக்காது. அப்போது வெறும் தண்ணீரை மட்டும் குடித்துவிட்டுப் பள்ளிக்குப் போவேன். அப்படித்தான் என்னுடைய இளம் பருவம் கழிந்தது. நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது அப்பா திடீரென்று இறந்துவிட்டார்.

அவரது வருமானத்தைத்தான் மொத்தக் குடும்பமும் இருந்தது. அவர் இல்லை என்றதும் ஒட்டுமொத்தக் குடும்பமும் கவலையில் மூழ்கிவிட்டது. எங்கள் கிராமத்திலிருந்த உறவினர்கள் சென்னைக்கு வந்து அரிசி கொடுத்துவிட்டுப் போவார்கள். அதை வைத்து சமைப்போம். அதுவும் போதுமானதாக இல்லை. பசியின் கொடுமை அதிகம் வாட்டியது.

அந்தநேரத்தில், அம்மாவுக்கு வீட்டின் அருகே இருந்த சத்துணவுக் கூடத்தில் தற்காலிக உதவியாளர் வேலை கிடைத்தது. அவர் பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய உணவில் மீதமானதை வீட்டுக்குக் கொண்டு வருவார். அதை வைத்து பசியைப் போக்கிக் கொண்டோம்.

இன்று என்ன உணவு

இன்று என்ன உணவு

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது எங்கள் பள்ளிக்கு சத்துணவுத் திட்டம் வந்தது. தினமும் புத்தகப் பையுடன் அலுமினிய சாப்பாட்டுத் தட்டை எடுத்துச் செல்வேன். பள்ளிக்குள் நுழையும் முன்பே அறிவிப்புப் பலகையில், 'இன்று என்ன உணவு?' என்பதை எழுதி வைத்திருப்பார்கள்.

'இன்று காய்கறி உணவு' என எழுதியிருந்தால் அன்றைக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. இப்படியே ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் அரசு உதவிபெறும் பள்ளியில் தரும் மதிய சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு படித்தேன்.

பல மாணவர்கள் வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வருவார்கள். அவர்கள் பள்ளியில் வழங்கப்படும் சத்துணவைச் சாப்பிடும் மாணவர்களைச் சற்று ஏளனமாகப் பார்ப்பார்கள். அவர்களுக்கு, நான் எனது மதிப்பெண்ணை பதிலாகத் தருவேன். 12 ஆம் வகுப்பு படிக்கும்வரை வகுப்பில் நான்தான் முதல் அல்லது இரண்டாவது ரேங்க் வருவேன். அந்தளவுக்கு நன்றாகப் படிக்கும் மாணவனாக இருந்தேன்.

இதனால், பொறியியல் படிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. சில காலம் சென்னையில் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்தேன். என் குடும்பத்தை வறுமையிலிருந்து மீட்டேன். உடன்பிறந்த சகோதரிகளுக்குத் திருமணம் செய்து வைத்தேன்.

இன்று கலிஃபோர்னியாவில் பணியில் இருக்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள காலை உணவுத்திட்டம் போலவே கலிஃபோர்னியாவில் உள்ள பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அன்று என் பசியை சத்துணவுத் திட்டம் போக்கவில்லை என்றால் இன்றைக்கு நான் அமெரிக்காவில் உயர்ந்த பதவியில் உட்கார்ந்து வேலை செய்திருக்கவே முடியாது" என்கிறார் கனகராஜன்.

சத்துணவு தந்த கேம்பிரிட்ஜ் வாழ்க்கை

சத்துணவு தந்த கேம்பிரிட்ஜ் வாழ்க்கை

இவரைப்போலவே, சத்துணவுத் திட்டத்தால் பயன்பெற்ற இன்னொருவர் கோவையைச் சேர்ந்த டாக்டர் ஜெயராமகிருஷ்ணன் வேலுச்சாமி. இவர் இங்கிலாந்தில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதன்மை ஆராய்ச்சியாளராகப் பணியாற்றி வருகிறார்.

அவரது அனுபவம் என்ன?

"ஒத்தக்கால் மண்டபம்தான் எனது கிராமம். கோவையில் உள்ள பிரீமியர் மில்ஸ் அரசு ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளியில் படித்தவன் நான். அதனைத் தொடர்ந்து பிரீமியர் மில்ஸ் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். எனது பள்ளிப்படிப்பு முழுவதையும் அரசின் உதவியால்தான் நிறைவு செய்தேன்.

பள்ளிப்படிப்பு முதல் கால் செருப்பு வரை அனைத்தும் அரசு கொடுத்ததுதான். சீருடையையும் தந்து சிறப்பான உணவையும் கொடுத்ததால்தான் நன்றாகப் படிக்க முடிந்தது.

இன்று உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதன்மை ஆராய்ச்சியாளராகப் பணியாற்றி வருகிறேன். இது அரசின் சத்துணவுத் திட்டத்தால்தான் சாத்தியமானதுதான்" என்கிறார் உணர்ச்சிப் பெருக்குடன்.

English summary
CM Stalin breakfast scheme: Non Resident Tamilians support and praises announcement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X