சென்னையில் கல்லூரி மாணவி தூக்கு போட்டு சாவு.. இவர்கள் தான் காரணம்.. போலீசில் தாய் கண்ணீர் பேச்சு!
சென்னை: சென்னை திருவேற்காட்டில் 19 வயது கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மன உளைச்சல் காரணமாகவே மகள் இறந்ததாகவும், மகளின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர் போலீசில் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை திருவேற்காடு கருமாரியம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 46). உதயகுமார் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி உமா. உதயகுமார் உமா தம்பதிக்கு ஸ்ரீநிதி என்ற 19 வயது மகளும் மகனும் உண்டு.

பிணமாக தொங்கிய கல்லூரி மாணவி
இதில் மகள் ஸ்ரீநிதி சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். வழக்கம்போல் ஸ்ரீநிதி மற்றும் குடும்பத்தினர் இரவு ஒன்றாக தான் தூங்கினர். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் தாய் உமா தூக்கத்தில் இருந்து எழுந்து பார்த்த போது, மகள் ஸ்ரீநிதி அருகில் உள்ள அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிண்மாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உமா மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்.

மாணவியின் செல்போன் பறிமுதல்
இதற்கிடையே சம்பவம் குறித்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கல்லூரி மாணவி ஸ்ரீநிதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி ஸ்ரீநிதி வைத்திருந்த செல்போனை போலீசார் பறிமுதல் செய்து அதன் மூலம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டின் உரிமையாளர் மீது..
இதேபோல் கல்லூரி மாணவி ஸ்ரீநிதியின் பெற்றோரும் தன் மகளின் தற்கொலைக்கு ஏற்கனவே வாடகை வீட்டில் இருந்த வீட்டின் உரிமையாளர் தான் காரணம் என்று போலீசாரிடம் தெரிவித்தனர். இது தொடர்பாக மாணவியின் தாய் உமா கூறுகையில், ''நாங்கள் ஏற்கனவே திருவேற்காடு, சிவசங்கர் நகர் பகுதியில் வினோத்-ரேவதி தம்பதியரின் வீட்டில் வாடகைக்கு இருந்து வந்தோம். அப்போது குடும்ப பிரச்சினை காரணமாக ரேவதியிடம் இருந்து 2 பவுன் நகையை வாங்கியிருந்தோம். அந்த நகையை அடகு வைத்த நிலையில் அந்த வீட்டில் இருந்து மாறி தற்போது நாங்கள் வேறு வீட்டில் வசித்து வருகிறோம்.

7 பவுன் நகை வாங்கியதாக..
இதற்கிடையே ரேவதியின் கணவர் வினோத் நாங்கள் 7 பவுன் நகையை வாங்கியதாக கூறி அதனை உடனே திருப்பி தரும்படி அடிக்கடி வீட்டுக்கு வந்து சத்தம் போட்டார். ஆனால் நாங்கள் 2 பவுன் நகை தான் வாங்கினோம் என்று கூறினோம். ஆனால் அவர்கள் 7 பவுன் நகை வாங்கியதாக கூறி போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீசார் வீட்டில் வந்து எங்கள் எல்லாரையும் விசாரித்தனர். தொடர்ந்து போலீசார் விசாரிப்பதாக கூறிவிட்டு சென்றனர்.

கைது செய்துவிடுவார்கள் என்று பயந்து..
இதனால் எங்கள் குடும்பத்தினரை போலீஸ் கைது செய்துவிடுவார்கள் என்று பயந்து போய் ஸ்ரீநிதி கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் எங்கள் தரப்பு நியாயத்தை செல்போனில் போலீசார் ஒருவருக்கு ஸ்ரீநிதி அனுப்பியிருந்தார். அதற்கு பிறகு தான் இப்படி ஒரு முடிவினை அவள் எடுத்துவிட்டாள்.. எனவே என் மகளின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

போலீசார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருவேற்காடு போலீசார் மாணவியின் செல்போனில் உள்ள தகவல்களை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மன உளைச்சலில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications