மறுபடியுமா.. தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு.. அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் 2 நாட்களாக நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை: கொரோனா வைரஸ் நோய் தொற்று இந்தியாவில் 41 சதவீதமாக தற்போது அதிகரித்து வருகிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர். மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். தமிழகத்தில் 17 மாவட்டங்களில் 2 நாட்களாக நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தனியார் மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் 36 மையங்களிலும் மாவட்ட தலைமை மருத்துவமனையில் 55 மையங்கள் இந்த எய்ட்ஸ் நோயாளிகளுக்கான கூட்டு மருந்து சிகிச்சை மையங்கள் இயங்கி வருகின்றன.
மேலும் தமிழக மக்களின் அவசியம் கருதி தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவத்துறை சார்பில் 8 தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் தொடங்க தமிழக அரசு ஒப்பந்தம் செய்யப்பட்டு அதற்கான முதல் மைய தொடக்க விழா இன்று நடைபெற்றது என்றார்.

17 மாவட்டங்களில் அதிகரிப்பு
கொரோனா வைரஸ் நோய் தொற்று இந்தியாவில் 41 சதவிகிதமாக தற்போது அதிகரித்து வருகிறது, தமிழகத்தில் 17 மாவட்டங்களில் 2 நாட்களாக நாளுக்கு நாள் நோய் தொற்று அதிகரித்து வருவதாக கூறினார். தமிழக சுகாதாரத்துறை செயலாளர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தலைமை சுகாதார அலுவலகம் கூட்டம் நடத்தி நோயை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

மெகா தடுப்பூசி முகாம்
வரும் ஜூன் 12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். இதுவரை தமிழகத்தில் ஒரு கோடியே 65 லட்சம் பேர் 2 தவணை தடுப்பூசி போட்டு உள்ளனர். தற்போது தமிழகத்தில் கொரானா தடுப்பூசி கையிருப்பு 99 லட்சம் உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

பூஸ்டர் தடுப்பூசி
தமிழகத்தில் மூன்றாவது தவணை என சொல்லப்படும் பூஸ்டர் தடுப்பூசி ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் விலைக்கு விற்பதாக தகவல் வந்துள்ளது. மத்திய அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டுதலின் படி தனியார் மருத்துவமனைகளில் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் கூடுதல் விலைக்கு பூஸ்டர் தடுப்பூசி விற்கப்படும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

கருமுட்டை விற்பனை
தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழகத்தில் கரு முட்டை விற்பனை சம்பந்தமாக ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் மருத்துவமனைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. கன்னித் தன்மை உள்ள இளம் பெண்களின் கருமுட்டைகள் பயன் அற்றதாக இருப்பதால் இளம் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி பிறகு எடுக்கப்படும் கருமுட்டைகள் என்பது பெரும் வேதனை அளிக்கிறது. அப்படி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கருமுட்டை விற்பனையை தடுக்கும் பொருட்டு மருத்துவத் துறை, காவல்துறை தொடர்ந்து தீவிரமாக நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications