• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும்- மோடியிடம் திமுக வலியுறுத்தல்

|

சென்னை: "கொரோனா தடுப்பூசி நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாகத் தரப்பட வேண்டும்" என்று அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தி.மு.க சார்பில் நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவரும், கட்சி பொருளாளருமான டி.ஆர்.பாலு வேண்டுகோள் விடுத்தார்.

கோவிட்-19 என அழைக்கப்படும் கொரோனா தொற்று நோய் தடுப்பூசி தயாராகி வரும் நிலையில் நாடு முழுவதும் இந்தத் தடுப்பூசி போடுவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது.

corona vaccine should be given free to all the people: DMKs TR Balu

இந்தக் கூட்டத்தில் தி.மு.க. சார்பில் கழகப் பொருளாளரும் நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கலந்துகொண்டு பேசினார். முன்னதாக அவர் கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலினுடன் இது தொடர்பாக விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.

கொரோனா பெருந்தொற்று தொடர்பாக இரண்டாவது முறையாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியதற்கும் அதில் தி.மு.க. பங்கேற்றிட அழைத்து வாய்ப்பு அளித்ததற்கு நன்றி தெரிவித்த திரு. டி.ஆர்.பாலு, இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு நிவாரண தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் தனிப்பட்ட முறையில் அக்கறை கொண்டு கண்காணித்து மருந்து தயாராகி வரும் நிறுவனங்களுக்கு அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டு ஊக்குவித்ததையும் வெகுவாகப் பாராட்டினார்.

பிரதமர் தலைமையில் நடைபெற்ற காணொலிக் கூட்டத்தில் டி.ஆர்.பாலு ஆற்றிய உரையின் விவரம் வருமாறு: கொரோனா தொற்று பாதிப்பில் உலகளாவிய நிலையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஏறத்தாழ 95 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று வரை ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் இன்னுயிர் இழந்துள்ளனர். ஆனால், ஓராண்டுக்கு முன்னால் இந்தப் பெருந்தொற்று உருவான சீனாவில் நோய்ப் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 93,096 மட்டுமே. அதைப் போல இறந்தோரின் எண்ணிக்கை 4,744 என மிக மிகக் குறைவாக உள்ளது.

தொற்றைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைக்கான விலை அதிகமாக உள்ளதுடன் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. எனவே, பரிசோதனை எண்ணிக்கையை நாடு முழுவதும் அதிகரிக்கவும் செலவைக் குறைக்கவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு, பரிசோதனை செலவை மிகவும் குறைப்பதுடன் மாநிலங்களுக்கு நிதி உதவியும் அளியுங்கள்.

தொற்றுக்கு எதிரான தடுப்பூசி பலகட்ட சோதனைகளைக் கடந்து பயன்பாட்டுக்கு விரைவில் வெளிவர இருக்கும் நிலையில், நாம் எவ்வித தாமதத்துக்கும் இடம் தராமல், இந்திய மக்கள் 130 கோடி பேருக்கும் தடுப்பு மருந்து செலுத்த வேண்டும், அதற்கான ஆயத்தங்கள் திட்டமிடப்பட வேண்டும்.

உலகளவில் பல்வேறு நாடுகளில் 161 தடுப்பூசி வகைகள் தயாரிப்பு வெவ்வேறு நிலைகளில் உள்ளன. 55 தடுப்பூசி வகைகள் மனிதர்கள் மேல் சோதனை செய்யப்பட்டுள்ள நிலையை எட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் இரண்டு தடுப்பூசி மருந்துகள் இந்தியாவைச் சேர்ந்தவை. புனே நகரில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரிக்கும் ஏ.இ.ஜட்.டி.1222, மற்றும் ஐதராபாத் நகரில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம்,தேசியத் தொற்றியல் நிறுவனம் ஆகிய இரு மத்திய அரசின் நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கி வரும் கோவாக்ஸின் எனப் பெயர் கொண்ட தடுப்பூசிகள் இவை. மத்திய அரசும் பிரதமரும் இந்தக் குறிப்பிடத்தக்க சாதனைக்குப் பாராட்டுக்குரியவர்கள்.

இதற்கிடையில் புகழ்பெற்ற சர்வதேச மருந்து தயாரிப்பு நிறுவனமான ஃபைஸர் உருவாக்கி உள்ள கொரோனா தொற்று தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு அனுமதி அளித்து உள்ளது. இந்தத் தகவலை அந்நாட்டின் பிரதமர் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் அறிவித்தார். ஆனால், இந்தத் தடுப்பூசி விலை 37 முதல் 39 அமெரிக்க டாலர்கள் அளவில் விலை மிகுந்து இருப்பதுடன், இந்த மருந்து மைனஸ் எழுபது டிகிரி செல்சியஸ் குளிர் சேமிப்பில் வைத்து பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால், புனே சீரம் இன்ஸ்டிட்யூட் உருவாக்கி உள்ள கொரோனா தொற்று தடுப்பூசி அரசுக்கு மூன்று டாலர் விலைக்கும், தனியார் நிறுவனங்களுக்கு ஆயிரம் ரூபாய் விலையில் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும், இம்மருந்து இரண்டு முதல் எட்டு டிகிரி அளவில் சேமித்து வைக்கப்பட முடியும் என்று கூறப்படுகிறது. இந்தத் தகவல்கள் சரியாக இருக்குமானால் இந்தியத் தயாரிப்பான இந்தத் தடுப்பூசி நமது நாட்டின் சூழலுக்கு ஏற்றதாக இருக்கும்.

1600 மில்லியன் ஊசிமருந்து அளவுக்கு மக்களுக்கு, அதுவும் ஒருவருக்கு ஒரு டோஸ் ஊசி தந்திட மத்திய அரசு உத்தேசித்து இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், இந்திய நிறுவனங்கள் இந்த அளவுக்கு உடனடியாக உற்பத்தி செய்து தர முடியுமா என்று தெரியவில்லை. இந்த நேரத்தில், கனடா, அந்நாட்டு மக்களுக்கு ஒவ்வொருவருக்கும் 10 டோஸ் மருந்தும், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகள் 5 டோஸ் மருந்தும், ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா 5 டோஸ் அளவுக்கு ஊசிமருந்து தர திட்டமிட்டுள்ளன என்று தெரிகிறது.

எனவே, இந்தியாவிலும் குறைந்தபட்சம் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போல 3 டோஸ் தடுப்பூசி வழங்க வேண்டும். எனவே, இந்தியாவில் தயாராவது போக வெளிநாட்டிலிருந்து தருவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். நமது மக்கள் தொகை 130 கோடி என்று கணக்கில் கொண்டு பார்த்தால் ஊசி விலை சராசரி ரூபாய் ஆயிரம் என்று வைத்து மதிப்பீடு செய்தாலும், மொத்த செலவு 3,90,000 கோடி வரை ஆகும். எனவே, இப்போதைக்கு ஆளுக்கு இரண்டு டோஸ் என எடுத்துக் கொண்டால் அரசுக்கு ஆகும் செலவு ரூபாய் 2,60,000 கோடி அளவில் இருக்கும். இந்தத் தொகையை மத்திய - மாநில அரசுகளுடன் இவற்றின் பொதுத் துறை நிறுவனங்களும் இணைந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரை அவர்கள் சட்டப்பூர்வமாக ஒதுக்க வேண்டிய நிறுவன சமுதாய பொறுப்பு நிதியை 2021-2022-ஆம் ஆண்டுகளில் முற்றிலும் தடுப்பூசி மருந்துக்கு பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.

தடுப்பூசிக்கான செலவின் அளவைப் பார்த்து அரசு மலைத்து போகக் கூடாது. இது, அரசு இந்திய மக்களாலான மனிதவளத்தின் மீது செய்யப்படும் முதலீடு என்று தான் கருத வேண்டும். கொரோனா காரணமாக கடும் வீழ்ச்சிக்கு ஆளான இந்தியப் பொருளாதாரம் மீளத் தொடங்கிவிட்டதைத் தெரிவிக்கும் வகையில் ஜி.எஸ்.டி. வரி வருவாய் இவ்வாண்டு அக்டோபர், நவம்பர் மாதத்தில் ஒரு லட்சம் கோடியைத் தாண்டி உள்ளது. எனவே, அரசு தேவைப்பட்டால், ஏனைய தவிர்க்கக் கூடிய செலவினங்கள் அனைத்தையும் ஒத்திவைத்து, கொரோனா தடுப்பூசி செலவுக்கு ஒதுக்கீடு செய்வது அவசியம்.

இன்று நாம் முன்னுரிமை அளித்துச் செயல்படுத்த வேண்டிய கடமை என்பது மாவட்ட, வட்ட தலைநகர்களில் கொரோனா தொற்று தடுப்பூசி மருந்துகளை எடுத்துச் செல்லவும், குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்கு வசதிகளைத் தயார் நிலையில் வைப்பதுதான். அத்துடன், தடுப்பூசி வழங்கப்பட வேண்டிய மக்கள் தொகையை முன்னுரிமை அடிப்படையில் வகைப்படுத்தி உரிய திட்டத்தை உடனடியாக தயாரித்தால்தான் 130 கோடி மக்களுக்கும் ஊசிமருந்து செலுத்தும் பெரும் சவாலைச் சந்திக்க முடியும்.

இறுதியாக, பிரதமரின் கவனத்திற்குத் தலைநகர் டெல்லியில் பல நாட்களாக உறைய வைக்கும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வெட்ட வெளியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகள் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயிகள் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்து குவிந்துள்ளனர். முதியோர், வயது முதிர்ந்த தாய்மார்கள் எனக் கண்பார்வை செல்லும் இடமெல்லாம் நிறைந்து போராடி வரும் வரும் இவர்கள் கோரிக்கை உங்களுக்குத் தெரியாததல்ல. அண்மையில் இயற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயப் பெருமக்களுக்கு எவ்வித நன்மைகள் பயக்காது என்பதால் அவற்றை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பது தான் அவர்களின் ஒரே கோரிக்கை. 130 கோடி மக்களுக்கு உணவு வழங்கிடும் நாட்டின் விவசாயிகளை இதுபோன்ற கடுங்குளிரில் நாட்கணக்கில் போராட வைப்பது கொஞ்சமும் நியாயம் அல்ல. ஆகவே, பிரதமர் அவர்கள் போராடும் விவசாயிகளை உடனடியாக அழைத்துப் பேசி சுமுகத் தீர்வு காண வேண்டும். இவ்வாறு டி.ஆர்.பாலு பேசினார்.

விவசாயிகள் பிரச்சினை பற்றி டி.ஆர்.பாலு பேசியதற்கு நாடாளுமன்ற துறை அமைச்சர் ஆட்சேபம் தெரிவித்ததுடன் விவசாயிகள் தொடர்பாகப் பேசக் கூடாது என்று கூறினார். இதற்குக் கடுமையான கண்டனக் குரலை எழுப்பிய டி.ஆர்.பாலு, கூட்டத்தின் துவக்கத்தில் அமைச்சரும் செயலாளரும் முழுக்க முழுக்க இந்தியில் பேசியதையும் உரிய ஆங்கில மொழி மாற்றம் ஏற்பாடு செய்யப்படாதது குறித்தும் தனது கடும் கண்டனத்தை வெளிப்படுத்தினார்.

 
 
 
English summary
DMK Parliamentary Committee leader and party treasurer TR Balu appealed to Prime Minister Narendra Modi at an all-party meeting that "the corona vaccine should be given free to all the people of the country". Prime Minister Narendra Modi has said that health workers and the elderly will be vaccinated first.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X