தித்திக்கும் தீபாவளி..ஆவினில் என்னென்ன ஸ்வீட்..விலை உயர்ந்த காரணத்தை விளக்கிய அமைச்சர் நாசர்
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவினில் 9 வகையான இனிப்புகள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குலாப்ஜாமூன், ரசகுல்லா உள்ளிட்ட இனிப்புகளின் விலை உயர்த்தி ஆவின் உத்தரவிட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அதற்கான காரணத்தை விளக்கியுள்ளார் அமைச்சர் நாசர்.
125 கிராம் குலாப்ஜாமூன் ரூ.45 லிருந்து ரூ.50 ஆகவும், 250 கிராம் குலாப்ஜாமூன் ரூ.80 லிருந்து ரூ.100 ஆகவும், 100 கிராம் ரசகுல்லா ரூ.40 லிருந்து ரூ.45 ஆகவும் உயர்ந்துள்ளது. 200 கிராம் ரசுகுல்லா ரூ.80 லிருந்து ரூ.90 ஆகவும், 500 கிராம் பால் கோவா ரூ.210 லிருந்து ரூ.250 ஆகவும் உயர்ந்துள்ளது.
100 கிராம் பால் கோவா ரூ.45 லிருந்து ரூ.50 ஆக உயர்ந்தப்பட்டுள்ளது. 250 கிராம் பால் கோவா ரூ.110 லிருந்து ரூ.130 ஆகவும், 1 கிலோ சர்க்கரை இல்லாத கோவா ரூ.520 லிருந்து ரூ.600 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 500 கிராம் சர்க்கரை இல்லாத கோவா ரூ.260 லிருந்து ரூ.300 ஆகவும், 100 கிராம் மில்க் பேடா ரூ.47 லிருந்து ரூ.55 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

விலை உயர்வுக்கு காரணம்
250 கிராம் மில்க் பேடா ரூ.110 லிருந்து ரூ.130 ஆகவும், 500 கிராம் மைசூர்பாகு ரூ.230 லிருந்து ரூ.270 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 250 கிராம் மைசூர்பாகு ரூ.120 லிருந்து ரூ.140 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பால் விலையை குறைத்ததன் காரணமாக ஆவின் நிறுவனத்திற்கு ஆண்டிற்கு ரூ. 225 கோடி இழப்பு ஏற்படுகிறது எனவும் ஒரு நாளைக்கு ரூ. 85 லட்சம் இழப்பு ஏற்படுகிறது எனவும் அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.

தீபாவளிக்கு 9 இனிப்புகள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவின் நிறுவனம் பிரத்யேகமாக தயாரித்துள்ள 9 இனிப்பு வகைகளை அறிமுகம் செய்து வைத்தார் பால்வளத்துறை அமைச்சர் நாசர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தீபாவளிக்கு சிறப்பு ஆவின் இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்பட உள்ளது எனவும் வியாபார நோக்குடன் அல்லாமல் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் சேவை நோக்குடன் இந்த சிறப்பு இனிப்பு வகைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கருப்பட்டி அல்வா
கடந்த ஆண்டு தீபாவளியின் போது இந்த இனிப்பு வகைகள் ரூ. 85 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஏற்கனவே உள்ள 275 பால், இனிப்பு வகை பொருட்களுடன், நெய் பாதுஷா, கருப்பட்டி அல்வா, நட்ஸ் அல்வா, காஜு கட்லி உள்ளிட்டவற்றுடன் புதிதாக 9 இனிப்பு வகைகள் அறிமுகபடுத்தபட்டுள்ளது.

ரூ.250 கோடி விற்பனை இலக்கு
இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ. 250 கோடி வரை விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளது என கூறினார். மேலும் எல்லா இனிப்பு வகைகளும் தனியார் விற்பனை நிறுவனங்களை ஒப்பிடும் போது 20% குறைத்து தான் விற்கப்படுகிறது என தெரிவித்தார்.

ஆவினில் விலை குறைவு
தனியார் நிறுவனங்களை விட ஆவின் பொருட்களின் விலை குறைவாக தான் உயர்த்தபட்டுள்ளது என கூறிய அமைச்சர், மத்திய அரசு GST போடுகிறது, மத்திய அரசு நேர்முகமாக 5% சதவீதம் GST உயர்த்துகிறது, மறைமுகமாக 20% சதவீதம் உயர்த்துகிறது. அதனால் தான் தமிழ்நாடு அரசும் விலையை ஏற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது என கூறினார்.

முதல்வர் முடிவெடுப்பார்
இதனை தொடர்ந்து, பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது எனவும் அது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் எனவும் தெரிவித்தார். பால் விலையை குறைத்ததன் காரணமாக ஆவின் நிறுவனத்திற்கு ஆண்டிற்கு ரூ. 225 கோடி இழப்பு ஏற்படுகிறது எனவும் ஒரு நாளைக்கு ரூ. 85 லட்சம் இழப்பு ஏற்படுகிறது எனவும் தெரிவித்தார்.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
ஆவினில் தற்போது அறிமுக படுத்தப்பட்டுள்ள பொருட்கள் 20 முதல் 25 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம் எனவும் தீபாவளிக்கு இந்த இனிப்பு வகைகள் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாகவும் அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications