• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக தலைவர் பதவிக்கு அக்.7ல் மு.க ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்..ஒருமனதான ஆதரவை கேட்டு கடிதம்

Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவர் பதவிக்கு போட்டியிடும் திமுக தலைவரும் முதல்வருமான மு.க ஸ்டாலின் வரும் 7ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஒருமனதான ஆதரவை தர வேண்டும் என்றும் மு.க ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

திமுக புதிய பொதுக்குழுக் கூட்டம் 9-ம் தேதி, காலை 9 மணிக்கு சென்னை, அமைந்தகரை, பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும். அப்போது திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் நான்கு தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும்.
மேற்கண்ட பொறுப்புகளுக்காக வேட்புமனுக்கள் 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் தலைமைக் கழகத்தில் பெற்றுக் கொள்ளப்படும். இப்பொறுப்புகளுக்குப் போட்டியிடுவோர் வேட்புமனுக் கட்டணமாக ரூ.50,000 அளித்து ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் நான்கு தணிக்கைக் குழு உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிடுவோர்களைப் பொதுக்குழு உறுப்பினர்கள் ஐவர் முன்மொழிய, ஐவர் வழி மொழிய வேண்டும். அனைத்து நடைமுறைகளிலும் கழகத் தேர்தல் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்" என்று சில தினங்களுக்கு முன்பு திமுக பொதுச்செயலாளர் அறிவித்திருந்தார்.

ஃபுல்டாஸ் போடும் திமுக.. சிக்ஸர் அடிக்கும் பாஜக..ஃபுல்டாஸ் போடும் திமுக.. சிக்ஸர் அடிக்கும் பாஜக..

மு.க ஸ்டாலின் கடிதம்

மு.க ஸ்டாலின் கடிதம்

இந்த நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான பொதுக்குழு அக்டோபர் 9ஆம் தேதி சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி 'விங்க்ஸ்' கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவிருக்கிறது. கழகத் தலைவர் என்ற பொறுப்பை, கண்ணுங் கருத்துமாக, எனது இதயத்திலும் தோளிலும் சுமந்திருக்கும் உங்களில் ஒருவனான நான், உடன்பிறப்புகளின் உளமார்ந்த வாழ்த்துகளையும், ஒருமனதான நல்லாதரவையும் எதிர்நோக்கி, அக்டோபர் 7ஆம் நாள் வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கிறேன்.

வழிகாட்டி இயக்கம்

வழிகாட்டி இயக்கம்

பேரறிஞர் அண்ணா உருவாக்கிய ஜனநாயக நெறிமுறைகளின் அடிப்படையில், தலைவர் கலைஞர் அவர்கள், சுமார் அரை நூற்றாண்டு அரும்பாடுபட்டுக் கட்டிக்காத்த இயக்கம் தி.மு.கழகம். மாநிலக் கட்சியாக இருந்தாலும், உள்கட்சி ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில், இந்தியாவில் உள்ள கட்சிகள் பலவற்றுக்கும் எப்போதும் வழிகாட்டியாக இருப்பது நம்முடைய இயக்கம்.

ஜனநாயக முறைப்படி தேர்தல்

ஜனநாயக முறைப்படி தேர்தல்

கழகத்தின் உள்கட்டமைப்பு ஜனநாயக முறைப்படி ஒழுங்குபடுத்தப்பட்டு, கண்ணை இமை காப்பதுபோல், தொடர்ந்து காக்கப்படுவதால்தான்,வலிவோடும் பொலிவோடும் திகழ்ந்து, இன்று தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதுடன், நம்முடைய திராவிட மாடல் ஆட்சித்திறனை, இந்தியாவின் பிற மாநிலங்களும் ஏற்றுப் போற்றிப் பாராட்டுகின்ற வகையில் சீராகச் செயலாற்றி வருகிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கழகத்தின் சிறப்பான பங்களிப்பை இந்தியாவே எதிர்பார்த்திருக்கிறது.

கற்பனை கதை

கற்பனை கதை

உடன்பிறப்புகளாம் உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பிலும், ஒத்துழைப்பிலும் வலிவு பெற்றிருக்கும் கழகத்தையும், அதன் ஆட்சியில் தமிழ்நாடு பெற்றுவரும் வளர்ச்சியையும் வலிமையையும் சற்றும் பொறுத்துக் கொள்ள முடியாத சில பிற்போக்கு சக்திகள், கழகத் தேர்தல் முடிவுகள் குறித்து, தங்களது கற்பனை எல்லையைக் காட்டும் வகையில் ஈரைப் பேனாக்கும் மட்டரகமான வேலையில் ஈடுபட்டு வருகின்றன.

உண்மை செய்திகள்

உண்மை செய்திகள்

நாடறிந்த சில ஏடுகளும், அறிந்தோ அறியாமலோ, அதற்கு உதவுவது, அத்தகைய ஏடுகளின் நம்பகத்தன்மைக்குச் சிறிதும் பொருத்தமானதாக இருக்காது. கழகத் தேர்தல் முடிவுகள் குறித்து, தொடர்பில்லாத யார் யாரோ சொன்னதை வைத்து, தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப செய்திகளை வெளியிட்டு, உண்மைக்கு மாறான செய்திகளைப் பரப்ப முயற்சிக்கும் செயல்கள், எந்த வகை இதழியல் அறம் என்பதை, அந்த ஏடுகள்தான் நேர்மையுடன் விளக்கிட முன்வர வேண்டும்.

தேர்தல் பொறுப்பாளர்கள்

தேர்தல் பொறுப்பாளர்கள்

கழக அமைப்புகளில் உள்ள பொறுப்புகளுக்குப் போட்டியிட விரும்புகிறவர்கள் தங்களின் விருப்பத்தை வெளிப்படுத்தி மனு தாக்கல் செய்வது வழக்கம். ஒரு மாவட்டத்திற்கு ஒரு செயலாளர்தான் என்பதை மனு தாக்கல் செய்த ஒவ்வொருவருமே அறிவார்கள். தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் முன்னிலையில் அவர்களின் விருப்பமும், வாய்ப்பும் பரிசீலிக்கப்பட்டு, தேவையென்றால் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறுவதும், அதற்கான அவசியம் ஏற்படாத நிலையில், ஒருமனதாக ஒருவரைத் தேர்வு செய்வதும் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் உருவாக்கிய வழிமுறையின்படி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

எதிர்மறை விமர்சனம்

எதிர்மறை விமர்சனம்

இதனைத் தெரிந்தும் தெரியாதது போல, நம்மைவிடக் கழகத்தின் மீதும் அதன் வளர்ச்சியின் மீதும் கூடுதல் அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் வகையில், கழக அமைப்புத் தேர்தல் முறைகளை வலிந்து எதிர்மறை விமர்சனம் செய்தும், வாய்ப்பு பெற்ற ஒரு சிலருக்கு எதிராக மற்றவர்களைத் தூண்டிவிடத் துணைபோகும் வகையிலும், செய்திகள் வழியே செயல்படும் போக்கு இன்று மட்டுமல்ல, நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் காலத்திலும் நடைபெற்றதை மறந்துவிட முடியாது.

கடும் மோதல்

கடும் மோதல்

வாக்குப்பதிவு மூலம் தேர்தல் நடைபெற்று நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் கடைப்பிடிக்கப்பட்ட முறையையாவது பாராட்டியிருக்கிறார்களா என்றால் அதுவும் இருக்காது. 'இருதரப்பிலும் கடும் மோதல்', 'ஆதரவாளர்கள் தாக்குதல்', 'உள்கட்சி உள்குத்து - வெளிக்குத்து' என்றுதான் செய்திகள் வெளியாகியிருக்கின்றன என்று மு.க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

நூற்றாண்டு இயக்கம் திமுக

நூற்றாண்டு இயக்கம் திமுக

தி.மு.கழகம் எனும் பேரியக்கம் ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு காலமாக வலிமை குன்றாமல் இருப்பதும், தேர்தல் தோல்விகளைக் கடந்து மீண்டும் மீண்டும் மக்களின் ஆதரவுடன் மகத்தான வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து சமூகநீதி மற்றும் சமத்துவ நெறி அடிப்படையிலான சட்டங்களைத் தீட்டி, தக்க திட்டங்களை நிறைவேற்றுவதும் 'பாரம்பரியமிக்கவர்களுக்கு' உறுத்தலாக இருப்பதன் விளைவுதான், நம்முடைய உள்கட்சித் தேர்தலில் அவர்கள் காட்டுகின்ற அதீத 'அக்கறை'க்குக் காரணம். இவற்றையெல்லாம் கடந்துதான் திராவிட இயக்கம் நூற்றாண்டு காலமாக இந்த மண்ணில் ஓயாது பாடுபட்டு, மக்கள் மனதில் மாற்றத்தையும் மறுமலர்ச்சியையும் உருவாக்கி, ஈராயிரம் ஆண்டுகால ஒடுக்குமுறைகளைத் தகர்த்து, இன்று 'எல்லார்க்கும் எல்லாம்' என்கிற திராவிட மாடல் நல்லரசை வழங்கி வருகிறது என்றும் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

English summary
DMK President and Chief Minister M. K. Stalin, who is contesting for the post of DMK President, has written a letter to the volunteers and administrators that he is going to file his nomination on the 7th. M.K. Stalin has also requested unanimous support in his letter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X