சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மதவாதம், இனவெறி அரசியல் செய்தால் இலங்கை கதிதான்.. மத்திய பாஜக அரசுக்கு திமுகவின் முரசொலி எச்சரிக்கை!

Google Oneindia Tamil News

சென்னை: மதவாதம் மற்றும் இனவெறி அரசியல்தான் இலங்கைக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும் என்று மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக முரசொலி நாளேட்டில் இன்று எழுதப்பட்டுள்ள தலையங்கம்: சொந்த நாட்டு மக்களால் துரத்தி அடிக்கப்படுகிறார்கள். இதுதான் மக்கள் புரட்சி என்பது. ஒரே மதம், ஒரே இனம் - என்ற கோட்பாடு மக்களின் பசிக்கு முன்னால், மக்களின் தேவைக்கு முன்னால் செல்லுபடி ஆகவில்லை.இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷே, ராணுவ விமானம் மூலம் மாலத்தீவுக்கு தப்பிப் போய்விட்டார் என்றும், அங்கு முதலில் அவரது விமானம் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை என்றும், அதன் பிறகு மாலத்தீவு அதிபர் தலையிட்டு தரையிறங்க அனுமதித்தார் என்றும் செய்திகள் வலம் வருகின்றன.

 கோத்தபாயவை கைது செய்ய சர்வதேச கைது வாரண்ட்- பிரிட்டன் நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் வலியுறுத்தல் கோத்தபாயவை கைது செய்ய சர்வதேச கைது வாரண்ட்- பிரிட்டன் நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் வலியுறுத்தல்

தான் மட்டுமல்ல, தனது மனைவியுடன் தப்பித்திருக்கிறார் கோத்தபய. அங்கிருந்து இன்னொரு நாட்டுக்குச் சென்று விடுவார் என்றும் சொல்லப்படுகிறது. தனது அதிபர் பதவியை கோத்தபய, விலக இருந்தார். அதற்கான விலகல் கடிதத்தைக் கொடுப்பதற்கு முன்னதாக அவர் தலைமறைவாகி இருக்கிறார்.
மதவாத, இனவாத, எதேச்சதிகார, சர்வாதிகார ஆட்சியை நடத்தி வந்த ராஜபக்ஷேக்களின் மொத்தப் பிம்பமும் ஓரிரு மாதங்களில் இடிந்து நொறுங்கிவிட்டது. பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரால் சொந்த நாட்டுத் தமிழ்ச் சமூகத்தைச் சூறையாடினார்கள் பத்து ஆண்டுகளுக்கு முன்னால். அப்போது இலங்கை மக்களால் ஹீரோக்களாகவும், ரட்சகர்களாகவும் பார்க்கப்பட்டார்கள் ராஜபக்ஷேக்கள்.

 சொந்த நாட்டு மக்களால் துரத்தியடிப்பு

சொந்த நாட்டு மக்களால் துரத்தியடிப்பு

இன்று அதே சொந்த நாட்டு மக்களால் துரத்தி அடிக்கப்படுகிறார்கள். இதுதான் மக்கள் புரட்சி என்பது. ஒரே மதம், ஒரே இனம் - என்ற கோட்பாடு மக்களின் பசிக்கு முன்னால், மக்களின் தேவைக்கு முன்னால் செல்லுபடி ஆகவில்லை. ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களான மக்கள்தான், அதே மதத்தைச் சேர்ந்த தங்களது அதிபரை- தங்களது முன்னால் ரட்சகரை விரட்டி அடிக்கிறார்கள். துரத்தி அடிக்கிறார்கள். கடந்த மார்ச் மாதம் தொடங்கியது இலங்கையில் களேபரங்கள். மக்களுக்கு எந்த அடிப்படைப் பொருள்களும் கிடைக்கவில்லை. கிடைத்தவை அனைத்தும் 100 - 200 மடங்கு விலை அதிகம். கடன் வாங்கி, கடன் வாங்கி, அதற்கு வட்டி கட்டுவதற்கும் கடன் வாங்கி - இலங்கை அரசாங்கத்தை நடத்தி இருக்கிறார்கள். ஆனால் சிலரது குடும்பம் மட்டும் கோடி கோடியாய் கொழித்துக் கொண்டு இருந்தது. எரிபொருள் தொடங்கி - பால் பொருள் வரை எதுவும் இல்லை என்ற சூழல். அதனை ஏற்பாடு செய்யவும் அவர்களுக்குத் தெரியவில்லை. இந்த கையாலாகாத்தனத்துக்கு மொத்தமாக ‘பொருளாதாரப் பிரச்சினை' என்று பூசிமொழுகிக் கொண்டு இருந்தார்கள்.

6 மாதம் முடக்கம்

6 மாதம் முடக்கம்

அடிப்படை பிரச்சினை எதையும் தீர்க்காமல் மதவாத மயக்கத்தில் மக்களை வைத்திருக்க நினைத்தார்கள். ஆனால் மக்கள் விழிப்படைந்து விட்டார்கள். ‘இலங்கையின் இன்றைய நெருக்கடியை விளங்கிக் கொள்ளுதல்' என்ற தலைப்பில் எழுத்தாளர் தெ.ஞால்சீர்த்தி மீநிலங்கோ எழுதியுள்ள கட்டுரையில், "இது பொருளாதார நெருக்கடி மட்டுமல்ல அரசியல், சமூகநெருக்கடி"என்பதைத் தெளிவுபடுத்தி இருக்கிறார்.(‘உயிர்மை' இதழ், ஜூன் 2022) நாடு முழுவதும் ராஜபக்ஷேக்களை பதவி விலகச் சொல்லி நெருக்கடி கொடுத்தாலும், பதவி விலக முடியாமல் இலங்கையின் அரசமைப்பு காப்பாற்றுகிறது, அதற்கு ஏற்ப அந்த அரசமைப்பு உள்ளது என்றும், இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த ஆறுமாத காலமாக எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார்.

ஒற்றையாட்சிக்கு எதிரான போர்

ஒற்றையாட்சிக்கு எதிரான போர்

இலங்கையின் அரசமைப்பைச் சீர்திருத்தாமல் இந்தப் பிரச்சினையைச் சீர்படுத்த முடியாது என்பது இவரது வாதம். ‘இலங்கைச் சூழலில் அரச சீர்திருத்தம் என்பது பிராந்திய சுயாட்சி மூலம் பெரும் பான்மை மற்றும் சிறுபான்மை இனச் சமூகங்களுக்கு இடையில் அதிகாரப் பகிர்வுக்கான ஏற்பாடுகளை உருவாக்குவதற்காக அரச கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்வது ஆகும்' என்பதை அவர் தெளிவாகச் சொல்லி இருக்கிறார்.இப்போது இலங்கையில் நடப்பது; "ஒற்றையாட்சிக்கு எதிரான, மையப்படுத்தப்பட்ட அதிகாரத்துக்கு எதிரான போர் என்பதை இலங்கை ஆய்வாளர்கள் அனைவரும் எழுதி வருகிறார்கள். அதேபோல் இருப்பவர்க்கும் - இல்லாதவர்க்குமான இடைவெளி நாளுக்கு நாள் அதிகமாகி வரும் சமூக நெருக்கடியையும் கவனித்தாக வேண்டும். தேசியவாத முகமூடி போட்டு வறுமை யையும், பசியையும் மறைத்துவிட முடியாது என்பதையும் இலங்கை களேபரங்கள் வெளிக்காட்டுகின்றன.

ராஜபக்சேக்கள் அத்தியாயம் ஓவர்

ராஜபக்சேக்கள் அத்தியாயம் ஓவர்

அதிகாரப் பசியால் உழன்ற ராஜபக்ஷேக்கள், தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட ரணில் விக்கிரம சிங்கேவுக்கு பிரதமர் பதவியைக் கொடுத்து - அனைத்துக்கும் கேடயமாக மாற்ற நினைத்தார்கள். இந்த ஏமாற்றத்தை மக்கள் ஏற்கத் தயாராக இல்லை. பிரச்சினையை பூசி மெழுகப் பார்த்தார்கள். மக்கள் விழிப்படைந்த வேகத்தில், அதிபர் மாளிகைக்குள்ளேயே போய்விட்டார்கள். முன்பு ஒருமுறை பேட்டி அளித்த மகிந்த ராஜபக்ஷே, "ராஜபக்ஷேக்களை மக்கள்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? மக்கள் விரும்பவில்லையானால் அவர்களை விரட்டுவார்கள். சகல ராஜபக்ஷேக்களையும் கூண்டோடு விரட்டுவார்கள்'' என்று கோபமாகச் சொன்னார். இப்போது அதுதான் அங்கு நடந்து வருகிறது.
‘போர் நாயகன்' என்று சிங்கள மக்களால் போற்றப்பட்டவர்கள், தங்களைக்காப்பாற்ற தாங்களே தலைமறைவாக வேண்டி வரும் என்ற சூழலை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ராஜபக்ஷேக்களே ஆளாத இலங்கையையும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். மே 9 - மகிந்த விலகினார். ஜூன் 9 - பசில் விலகினார். ஜூலை 9 - கோத்தபய விலகினார். ‘69 லட்சம் மக்களின் ஆணைப்படி நான் பதவியில் இருக்கிறேன்' என்று சொன்ன கோத்தபய, பயந்து போய் பதவி விலகக் காரணமாக மக்கள் போராட்டங்கள் அமைந்தன.

Recommended Video

    Sri Lanka-வை விட்டு தப்பியோடிய Gotabaya Rajapaksa | Maldives | Sri Lanka Crisis | *World
    மதவாதம்- இனவாதம் எச்சரிக்கை

    மதவாதம்- இனவாதம் எச்சரிக்கை

    ‘ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்ற முடியாதே தவிர, மற்றபடி இலங்கை ஜனாதிபதி பதவியை வைத்து அனைத்தையும் செய்ய முடியும்' என்று ஒரு காலத்தில் சொன்னார் ஜெயவர்த்தனே. அப்படித்தான் இதுவரை செய்து கொண்டும் இருந்தார்கள். இனிச் செய்ய முடியாது என்பதைக் காட்டிவிட்டார்கள் மக்கள். இலங்கையில் பொருளாதாரம்தான் பிரச்சினை, உணவுத்தட்டுப்பாடுதான் பிரச்சினை என்று மட்டும் சொல்வதே, ராஜபக்ஷேக்களைக் காப்பாற்றும் வாதம் ஆகும். மதவாதம் - இனவாதம் - மொழி - சாதி - வட்டாரம் - எல்லை - பணம் - அதிகாரம் - ஆகிய அனைத்து பிரச்சினைகளும் முற்றிவிட்டதன் அடையாளம் மொத்தமாக வெடிக்கிறது. அதிபர் மாளிகையே அலறிக் கொண்டிருப்பது இதனால்தான். மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் மதவாதத்தை வைத்தும், இனவெறியை வைத்தும் அரசியல் நடத்தி ஏமாற்ற நினைத்தால் இறுதியில் என்ன கதி ஏற்படும் என்பதற்கு இலங்கையே சாட்சி! இவ்வாறு திமுகவின் முரசொலி எச்சரித்துள்ளது.

    English summary
    DMK's official Daily Murasoli has warned that the Centre should learn the leasson From the Srilanka Crisis on the Religion Politics.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X