சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவிலும் பரவிய BF.7 ஓமிக்ரான் வைரஸ்.. சீனாவில் கொரோனா வேகமெடுத்தது ஏன்? டாக்டர் பரூக் விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: சீனாவில் பரவி வரும் BF.7 எனும் ஓமைக்ரான் வேரியண்ட் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது பாதகத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து சிவகங்கை அரசு பொது நல மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கியுள்ளார். இந்தியாவில் குஜராத்தில் 3 பேருக்கும், ஒடிஸாவில் ஒருவருக்கும் இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில் அதுகுறித்த அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சீனாவில் பரவி வரும் ஓமைக்ரானின் வேரியண்ட்டான B.F.7 இந்தியாவில் தற்போது ஆங்காங்கே கண்டறியப்பட்டாலும் அதனால் இந்தியாவுக்கு பாதகம் நேர்வதற்கு வாய்ப்பு மிக மிகக் குறைவு. காரணம் கடந்த ஓராண்டாக நாம் ஓமைக்ரானின் பல வேரியண்ட்களினால் தொடர்ந்து தொற்றுக்கு உள்ளாகி மீண்டு இருக்கிறோம்.

இதனால் நேரடியான தொற்றின் மூலம் கிடைத்த ஓமைக்ரானுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி நம்மிடம் இருக்கிறது. கூடவே இரண்டு / மூன்று டோஸ் தடுப்பூசிகள் என போட்டு தடுப்பூசிகள் மூலமும் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொண்டுள்ளோம். இந்தியாவில் தற்போது 60% மக்களுக்கேனும் ஓமைக்ரானுக்கு எதிரான கலப்பு எதிர்ப்பு சக்தி இருக்கும் என்று நம்புகிறேன்.

மாடுகளை காப்பாற்றணும்.. உடனே தடுப்பூசி அனுப்புங்க! மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! மாடுகளை காப்பாற்றணும்.. உடனே தடுப்பூசி அனுப்புங்க! மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

 ஓமைக்ரான்- ஓமிக்ரான்

ஓமைக்ரான்- ஓமிக்ரான்

எனவே இந்தியாவில் ஓமைக்ரானின் வேற்றுருவமான B.F.7 உருமாற்றத்தால் பெரிய பாதிப்பை ஏற்படுத்த இயலாது என்பதே இப்போது வரை அறிவியல் பூர்வ நம்பிக்கை. அச்சம் கொள்ள வேண்டாம், பீதி அடைய வேண்டாம் எச்சரிக்கை உணர்வுடன் இருந்தால் போதுமானது. சீனாவில் தற்போது கோவிட் தொற்று முன்னெப்போதும் இல்லாத அதிகரித்திருப்பதாகவும் மேலதிகமான மரணங்கள் நடந்து வருவதாகவும் மருத்துவமனைகளில் மூச்சுத்திணறலுடன் செயற்கை சுவாசக் கருவிகளில் நோயர்கள் படுத்திருப்பதையும் மரணித்தவர்கள் சவக்கிடங்குகளில் கிடத்தி வைத்திருப்பதையும் காணொளிகளாகப் பகிரப்படுகின்றன.

எந்த நகரில் எடுக்கப்பட்டது

எந்த நகரில் எடுக்கப்பட்டது

இந்தக் காணொளிகள் எந்த கால இடைவெளியில் எடுக்கப்பட்டவை, எந்த நகரில் எடுக்கப்பட்டவை என்பது குறித்த அதிகாரப்பூர்வ கருத்துகள் இல்லை. இந்தக் காணொளிகளை சீன அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை ஆயினும் தற்போதைய சீனத்தின் கோவிட் நிலையை வெளிக்கொணரும் வகையில் இந்த காணொளிகளை ட்விட்டரில் அமெரிக்காவைச் சேர்ந்த கொள்ளைநோயியல் மருத்துவர் வெளியிட்டுள்ளார்.

வலி பதற்றம்

வலி பதற்றம்

அந்த காணொளிகள் நம்மிடையே மீண்டும் PTSD எனும் POST TRAUMATIC STRESS DISORDER விபத்துக்கு பின்னால் மீண்டும் அந்த விபத்தை நியாபகப்படுத்தும் விசயங்கள் தோன்றினால் மீண்டும் அதே வலி , பதற்றம், உறக்கமின்மை போன்றவை ஏற்படும். இதனால் பலரும் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொண்டமையால் விளக்கம் அளிப்பது கடமையாகிறது. சீன நாடு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை கோவிட் பெருந்தொற்றைப் பொருத்தவரை "பூஜ்ய கோவிட் கொள்கை" ZERO COVID POLICY கோவிட் தொற்று எங்கு காணப்பட்டாலும் அங்கிருந்து வேறெங்கும் பரவாத வண்ணம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

ஒரே நேரத்தில் லட்சக்கணக்கில் கொரோனா பரிசோதனைகள் எடுப்பது மீண்டும் மீண்டும் பரிசோதனை செய்து அலுவல்களுக்கு அனுமதிப்பது அறிகுறிகளற்ற தொற்றாக இருந்தாலும் சரி கண்டிப்பான முறையில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த தொற்றாளருடன் தொடர்பில் இருந்தவர்கள் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் நபர்கள் என்று அனைவரும் கட்டாயத் தனிமைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

 தொற்று பரவல்

தொற்று பரவல்

ஒரு நகரில் ஊரில் தொற்றுப் பரவல் நடக்கிறது என்றால் தொடர்ந்து லாக்டவுன் போடப்படும். இப்படியாக மூன்று வருடங்களாக ஜீரோ கோவிட் பாலிசியை கடைபிடித்து வந்தது சீனா. இதனால் மக்கள் விரக்தி அடைந்து பேதலித்து அடக்குமுறைக்கு எதிராக ஆங்காங்கே கண்டனக்குரல் எழுப்பியதாகத் தெரிகிறது. கூடவே அந்நாட்டின் உற்பத்தி பொருளாதாரமும் சுணக்கம் காணத் தொடங்க இனியும் மக்களை முடக்கி வைப்பது சரியன்று என்ற முடிவை சீனா எடுத்தது. பெருந்தொற்றுக்கு முந்தைய நிலையைப் போல அனைத்தையும் திறந்து விட்டது. பரிசோதனைகள் இனி அவசியமில்லை என்றும் கூறிவிட்டது.

சாதாரண அறிகுறிகள்

சாதாரண அறிகுறிகள்

சில நகரங்களில் சாதாரண அறிகுறிகள் இருந்தாலும் வேலைகளுக்கு வரலாம் என்று கூட அறிவிப்புகள் வந்தன. இதன் விளைவாக கொரோனா வைரஸின் ஓமைக்ரான் உருமாற்றம் அங்கே வேகமெடுத்துப் பரவி வருகிறது. பெருந்தொற்று தொடங்கியது முதல் இப்போது வரை வைரஸின் எந்த அலையையும் சந்திக்காத சீனாவில் முதல் கொரோனா அலை தற்போது அடித்து வருகிறது. ஓமைக்ரான் உருமாற்றம் என்பது முந்தைய உருமாற்றங்களை விட வேகமெடுத்துப் பரவக் கூடியது. ஆயினும் முந்தியவைகளை விட வீரியம் குறைவானது என்று அறியப்பட்டுள்ளது.

மூன்றாவது அலை

மூன்றாவது அலை

இந்த வேரியண்ட் மூலம் இந்தியாவில் மூன்றாவது அலையில் ( டிசம்பர் 2021 முதல் மார்ச் 2022 வரை) தொற்றடைந்தவர்களில் முதியோர்கள், பல்வேறு இணை நோய்களுடன் இருந்தவர்கள் அதிகமான பாதிப்புக்கு உள்ளாகினர். சீனாவிலும் அதே நிலை இப்போது இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. எனினும் இந்தியா சந்தித்த ஓமைக்ரான் அலைக்கும் சீனா சந்திக்கும் ஓமைக்ரான் அலைக்கும் உள்ள பெரிய வித்தியாசம் யாதெனில் இந்தியா ஓமைக்ரான் அலையை சந்திக்கும் முன்பு ஆல்பா வேரியண்ட் மூலம் முதல் அலையை 2020இன் மத்தியிலும் டெல்ட்டா வேரியண்ட் மூலம் இரண்டாம் அலையை 2021இன் மத்தியிலும் சந்தித்து இருந்தது. கூடவே இரண்டாம் அலைக்குப் பிறகு 90% க்கு மேல் மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றிருந்தனர்.

தடுப்பூசி

தடுப்பூசி

தடுப்பூசி பெற்றவர்களில் 90% பேர் கோவிஷீல்டும் 10% பேர் கோவேக்சின் பெற்றனர். 2022 ஜனவரி மாதம் முதல் மூன்றாவது டோஸ் தடுப்பூசியும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சீனாவில் நிலை - இதுவரை அங்கு தொற்றுப் பரவல் அலையாக ஏற்படவே இல்லை.
மேலும் சைனோவேக் / சைனோபார்ம் ஆகிய செயலிழக்கச்செய்யப்பட்ட வைரஸ் தொழில்நுட்ப தடுப்பூசிகள் 2021 ஆம் வருடம் போடப்பட்டது. அதன் மூலம் தூண்டப்பட்ட எதிர்ப்பு சக்தி ஆறு மாதங்களுக்கு பின் குன்றக்கூடிய நிலையை ஆய்வுகள் சான்று பகர்கின்றன.

90 சதவீத சீன மக்கள்

90 சதவீத சீன மக்கள்

இந்நிலையில் 90% சீன மக்களுக்கு நேரடி தொற்றின் மூலம் கிடைத்த எதிர்ப்பு சக்தியும் இல்லை
தடுப்பூசிகள் மூலம் கிடைத்த எதிர்ப்பு சக்தியும் குன்றியுள்ளது. இதுவே இந்தியாவின் நிலை யாதெனில்
முதல் அலை முடிவில் 20% பேருக்கு தொற்று மூலம் எதிர்ப்பு சக்தி கிடைத்திருந்தது. இரண்டாம் அலை முடிவில் 60%க்கு மேல் தொற்றின் மூலம் எதிர்ப்பு சக்தி கிடைத்திருந்தது. மூன்றாம் அலை முடிவில் 80-90% பேருக்கு தொற்று+ தடுப்பூசி மூலம் கூட்டு எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளது. எனினும் புதிதாக வேரியண்ட்கள் உருவாகும் போது அவை நம்மிடையே தொற்றை ஏற்படுத்தக்கூடும் என்ற எச்சரிக்கை உணர்வு நம்மிடையே இருக்க வேண்டும்.

ஓமைக்ரான் வேரியண்ட்

ஓமைக்ரான் வேரியண்ட்

இப்போது சீனா சந்தித்து வரும் பிரச்சனைகளை நாம் 2020 ,2021 ஆண்டுகளில் சந்தித்து மீண்டு வந்திருக்கிறோம். மேலும் ஓமைக்ரான் வேரியண்ட் நமது மக்களில் பெரும்பான்மையினருக்குத் தொற்றை கடந்த ஓராண்டில் ஏற்படுத்தி அதன் மூலம் நேரடி எதிர்ப்பு சக்தியை சம்பாதித்து வைத்துள்ளோம். எனவே ஓமைக்ரான் மூலம் புதிய தொல்லை நமக்கு நேருவதற்கு வாய்ப்பு மிக மிகக் குறைவு என்றே கணிக்கிறேன். ஆயினும் சீனாவில் ஓமைக்ரான் கட்டுக்கடங்காமல் பரவும் போது வைரஸில் பாதகமான இடங்களில் உருமாற்றம் நிகழ்ந்தால் ( நிகழ்வதற்கு வாய்ப்பு குறைவு) புதிய பிரச்சனைக்குரிய வேரியண்ட் தோன்றலாம்.
சீனாவின் தற்போதைய அலை என்பது நமக்கு முன்பு நடந்தது இப்போது அவர்களுக்கு காலம்தள்ளி நடக்கிறது என்றே கொள்ள வேண்டும்.

ஜீரோ கோவிட் பாலிசியால் சாதகங்கள்

ஜீரோ கோவிட் பாலிசியால் சாதகங்கள்

இதற்கான காரணம் அவர்கள் கடைபிடித்த ஜீரோ கோவிட் பாலிசி என்றும் கொள்ளலாம்.அந்த கொள்கையால் அவர்கள் அடைந்த சாதகங்கள்
1. வீரியமிக்க கொரோனாவின் வேரியண்ட்களான ஆல்பா/ பீட்டா/ டெல்ட்டா ஆகியவற்றால் அலையை சந்திக்காமல் பலம் குன்றிய ஓமைக்ரான் மூலம் அலையைச் சந்திக்கின்றனர். இதன் மூலம் ஏனைய நாடுகளை விட குறைவான உயிரிழப்புகளை சந்திக்கும் வாய்ப்பு.
2. தடுப்பூசிகள் மூலம் அவர்களது நாட்டினருக்கு எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்திய பின்பு அலையைச் சந்திக்கின்றனர்.
3. கடந்த மூன்று ஆண்டுகளில் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் தேவையான ஆக்சிஜன் படுக்கைகளை உயர்த்திடக் கிடைத்த அவகாசம்

பாதகங்கள்

பாதகங்கள்

இந்தக் கொள்கையால் அவர்கள் அடைந்த பாதகங்கள்
1. மூன்று ஆண்டுகளாக மக்களை லாக் டவுன் / பரிசோதனைகள் என்று சுதந்திரத்தை வதைத்தது. இதனால் மக்கள் விரக்தி நிலையை அடைந்திருக்கக்கூடும்
2. உற்பத்தி பொருளாதாரத்தில் ஏற்பட்ட தொய்வு மந்தநிலை
3. சில முன்னணி நிறுவனங்கள் இந்த கொள்கையால் சீனாவை விட்டு வெளியேற முடிவு செய்திருப்பது
4. மூன்று ஆண்டுகள் ஆகியும் தாங்கள் நினைத்தவாறு கொரோனாவினால் பாதிப்பே இல்லாத நிலையை உருவாக்க இயலாமை

இவ்வாறாக தற்போது சீனாவிலும் அதை சுற்றியுள்ள நாடுகளிலும் ஏற்பட்டுள்ள கொரோனா சூழ்நிலை
மூலம் நாம் செய்ய வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள்
- மீண்டும் பொது இடங்களில் முகக்கவசம் அணியலாம்
- கூட்டமான இடங்களிலேனும் முகக்கவசம் அணியலாம்
- குறிப்பாக முதியோர் மற்றும் எதிர்ப்பு சக்தி குன்றியோர் முகக்கவசம் அணிவதை வழக்கமாகக் கொள்ளலாம்
- கைகளை சோப் போட்டுக் கழுவும் பழக்கம் எப்போதும் நல்ல பழக்கமே.
- காய்ச்சலுடன் சளி/இருமல் இருப்பவர்கள் அறிகுறிகள் நீங்குமட்டும் தனிமைப்படுத்திக் கொள்ளலாம். அறிகுறிகள் இருப்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
- இரண்டாவது மற்றும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள் அவற்றைப் பெற்றுக் கொள்வது குறித்து சிந்தித்து முடிவு செய்யலாம்.
- ப்ளூ தொற்றுக்கு எதிராக வருடாந்திர தடுப்பூசி முறை இருப்பது போல கொரோனா வைரஸுக்கு வேரியண்ட்டுக்கு ஏற்றாற் போல அப்டேட்டட் தடுப்பூசி வருடந்தோறும் கிடைத்தால் முதியோர் மற்றும் எதிர்ப்பு சக்தி குன்றியோர் / சுகாதாரப்பணியாளர்கள் பயன்பெறுவர்.

அச்சம் வேண்டாம்

அச்சம் வேண்டாம்

சீனாவில் தற்போது நிலவும் கொரோனா சூழ்நிலை என்று வரும் காணொளிகளைப் பார்த்து நாம் தற்போது அச்சம் கொள்ளத் தேவையில்லை. நாம் 2020இலும் 2021இலும் சந்தித்தவைகளைத் தான் சீனா அதன் கொள்கையால் காலந்தாழ்த்தி சந்திக்கிறது. நமக்குத் தேவை எச்சரிக்கை உணர்வேயன்றி அச்சமன்று! இவ்வாறு தனது சமூகவலைதள பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Coronavirus update: Sivagangai government hospital Dr Farook Abdulla explains about BF.7 Omicron new variant which spreads in India (3 cases found in Gujarat, 1 case found in Odisha). What are the symptoms of BF 7?, Whether Government has to take Covid preventive measures?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X