பழனியில் கேரளா பெண் பலாத்காரம்- தமிழக புனிதத் தலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: ராமதாஸ்
சென்னை: பழனி முருகன் கோயிலுக்கு வழிபாட்டுக்கு வந்த கேரளாவை சேர்ந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் போலீசார் புகாரை வாங்க மறுத்ததற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் இன்று தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

பழனி முருகன் கோயிலுக்கு கடந்த மாதம் 19-ஆம் தேதி வழிபாட்டுக்காக வந்த கேரளத்தை சேர்ந்த 40 வயது பெண் அங்குள்ள கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. கேரள பெண்ணின் கணவனை அடித்துத் துரத்தி விட்டு, அங்குள்ள விடுதிக்கு கடத்திச் சென்று இந்தக் கொடுமையை அந்த கும்பல் செய்திருக்கிறது.
அதனால் பாதிக்கப்பட்ட பெண் கேரளத்தில் கண்ணூர் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார். அதைவிடக் கொடுமை தமக்கு இழைக்கப்பட்ட கூட்டு பாலியல் வன்கொடுமை குறித்து பழனி காவல்நிலையத்தில் அப்பெண் புகார் கொடுத்தும் அதை வாங்க காவல்துறையினர் மறுத்து விட்டனர் என்பது தான்.
இதுபற்றி தமிழக டிஜிபிக்கு கேரள டிஜிபி கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் புனிதத் தலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதும், பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்த புகாரைக் கூட காவல்துறை வாங்க மறுத்திருப்பதும் தமிழகம் தலைகுனிய வேண்டிய செயல்கள். இதற்கு காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
