சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

#Exclusive எடப்பாடி அணிக்கு மூன்றாம் இடம்? “ஓபிஎஸ் வியூகம்”.. பாஜக ’ஸ்கெட்ச்’.. சொல்கிறார் தனியரசு!

Google Oneindia Tamil News

சென்னை : "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் தோல்வி உறுதி. இரண்டாம் இடத்தை கைப்பற்றுவது ஓபிஎஸ்ஸா, ஈபிஎஸ்ஸா என்பதுதான் கேள்வி. எடப்பாடி பழனிசாமியை மூன்றாமிடத்திற்கு தள்ளுவதற்கான வியூகத்தை ஓ.பன்னீர்செல்வம் அமைப்பார்." என நமது ஒன் இந்தியாவிற்கு அளித்துள்ள பேட்டியில் முன்னாள் எம்.எல்.ஏ தனியரசு தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் தனித்தனி அணிகளாகக் களமிறங்குகின்றனர். இதனால் இரட்டை இலை முடங்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது. பாஜக, இருவரில் யாரை ஆதரிக்கும் என்பதும் பெரிய கேள்வியாக உள்ளது.

இந்நிலையில், அதிமுகவோடு கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு 2 முறை எம்.எல்.ஏவாக இருந்த தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு நமது ஒன் இந்தியாவிற்கு, அதிமுகவின் நிலை பற்றி பேட்டியளித்துள்ளார். அவரது பேட்டி பின்வருமாறு:

#Exclusive அண்ணாமலையின் பெரிய 'ஆட்டம்’.. வார் ரூம் இருக்கு.. ஆனா சாக்கடை இல்ல.. எஸ்.ஆர்.சேகர் பேட்டி#Exclusive அண்ணாமலையின் பெரிய 'ஆட்டம்’.. வார் ரூம் இருக்கு.. ஆனா சாக்கடை இல்ல.. எஸ்.ஆர்.சேகர் பேட்டி

 இரட்டை இலை முடங்குமா?

இரட்டை இலை முடங்குமா?

கேள்வி : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடங்குமா?

பதில் : உறுதியாக இரட்டை இலை சின்னம் முடங்கும். எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் ஆலோசிக்காமலேயே இடைத்தேர்தலில் தங்கள் அணி போட்டியிடும் என்ற முடிவை எடுத்துள்ளார். அதை பாஜக ரசிக்கவில்லை. ஓபிஎஸ்ஸும் வேட்பாளரை அறிவிப்பதாகச் சொல்லிவிட்டார். தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை இன்றுவரை ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் முறையே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கின்றனர். சமீபத்தில் தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதமும் அந்த அடிப்படையிலேயே இருந்தது. இருவரின் கையெழுத்தும் இல்லாமல் இரட்டை இலை கிடைக்காது. தற்போது இருவரும் இணைந்து கையெழுத்திட வாய்ப்பு இல்லை. எனவே இரட்டை இலை கட்டாயம் முடக்கப்படும்.

 தோல்வி நிச்சயம்

தோல்வி நிச்சயம்

கேள்வி : இரட்டை இலை முடக்கப்பட்டு பொதுச் சின்னம் கிடைத்தாலும், எடப்பாடி பழனிசாமி கொங்கு மண்டலத்தில் நடைபெறும் இந்த இடைத்தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற முடியும் என்ற சூழல் இருக்கிறது.. ஓபிஎஸ்ஸால் அதிக வாக்குகளை பெற முடியுமா?

பதில் : ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தொடர்ச்சியாக அதிமுக தோல்வியைச் சந்தித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமியை மக்கள் அங்கீகரிக்கவில்லை. இப்போது ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே பிளவு ஏற்பட்ட பிறகு, சின்னமும் முடக்கி வைக்கப்பட்ட பிறகு அது மேற்கு மண்டலமாகவே இருந்தாலும் சாதகமாக இருக்காது. அதிமுகவின் தோல்வி நிச்சயிக்கப்பட்ட ஒன்று. இரண்டாம் இடத்தை கைப்பற்றுவது ஓபிஎஸ்ஸா, ஈபிஎஸ்ஸா என்பதுதான் கேள்வி. எடப்பாடி பழனிசாமியை மூன்றாமிடத்திற்கு தள்ளுவதற்கான வியூகத்தை ஓபிஎஸ் அமைப்பார். ஓபிஎஸ் நேற்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். ஓபிஎஸ் தரப்பினர் முக்கிய முடிவுகளை எடுப்பார்கள்.

 ஈபிஎஸ் மூன்றாமிடம்?

ஈபிஎஸ் மூன்றாமிடம்?

பாஜக, டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. பாஜக, அமமுக, ஓபிஎஸ் எல்லாரும் ஓர் அணியில் இணைந்தால், புதிய நீதிக்கட்சி ஏசி சண்முகம், தமமுக ஜான் பாண்டியன், ஐஜேகே பாரிவேந்தர் ஆகியோரும் பாஜக அணியைத்தான் ஆதரிப்பார்கள். ஓபிஎஸ் தங்கள் அணியை இப்படி அமைத்தால், ஈபிஎஸ் தரப்பு மூன்றாம் இடத்துக்கு தள்ளப்படும் சூழல் உருவாகும். பாஜக இறுதி முடிவை எடுக்கும் வரை எடப்பாடி பழனிசாமியின் நிலையை நாம் தீர்மானிக்க முடியாது. இப்போதைக்கு ஈபிஎஸ் இரண்டாம் இடம் வருவது போன்ற தோற்றம் இருக்கிறது. நாளை ஓபிஎஸ் - பாஜக ஓரணியில் திரண்டால் எடப்பாடி பழனிசாமி மூன்றாமிடத்துக்குப் போக வாய்ப்பிருக்கிறது.

 வாக்கு வங்கி திசைமாறும்

வாக்கு வங்கி திசைமாறும்

கேள்வி : பாஜக இடம்பெறும் அணியால் எடப்பாடி பழனிசாமி மூன்றாமிடத்திற்குச் செல்வார் என்பது தமிழ்நாட்டின் அரசியல் சூழலுக்கு ஏற்றதா?

பதில் : இது ஆரோக்கியமானது அல்ல, ஆனால், இந்த நிலையை உருவாக்கியது எடப்பாடி பழனிசாமி தான். ஈபிஎஸ் தன்னைத் தாழ்த்திக்கொண்டு, நான்கரை ஆண்டு ஆட்சியில் கோட்பாட்டு எதிரி பாஜகவை பலப்படுத்தினார். ஆட்சியை இழந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்த பின்னும் ஆளுநரின் கண்ணசைவுக்குக் காத்திருக்கிறார் எடப்பாடி. மோடி, அமித்ஷாவின் கண்ணசைவுக்காக காத்திருக்கும் எடப்பாடியால் பாஜகவுக்கு எதிரான வாக்குகளை அறுவடை செய்ய முடியாது. திமுகவை கடுமையாக விமர்சிக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் எடப்பாடி, அண்ணாமலை கடுமையாக விமர்சிப்பதற்கான இடத்தைக் கொடுத்துவிட்டார். தொடர்ந்து பிடிவாதத்தோடு செயல்பட்டு அதிமுகவின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறார். இதனால், அதிமுக மற்றும் பொதுவான வாக்கு வங்கி எடப்பாடிக்கு விழாமல் மடைமாறக் கூடும்.

 பாஜகவால் தாமதம்

பாஜகவால் தாமதம்

கேள்வி : ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி அணி பூத் கமிட்டி கூட்டத்தையும் நடத்தி, தேர்தல் பணிமனைகளை அமைத்து வருகிறது. ஓபிஎஸ் அணி இன்னும் களத்திலேயே இறங்கவில்லையே?

பதில் : ஓபிஎஸ் பாஜகவின் முடிவுக்காகக் காத்திருக்கிறார். பாஜக திட்டமிட்டு இந்த வேலையைச் செய்கிறது. பாஜக நினைத்திருந்தால், இப்போதே முடிவைச் சொல்லி களத்தில் இறங்கியிருக்க முடியும். ஆனால், இருவரையும் ஆதரிப்பது போன்று மறைமுகமாகச் செயல்பட்டு இந்த பிளவு நிலை தொடர விரும்புகிறது. இதன் மூலமாக அந்த ‘ஸ்பேஸை' தாங்கள் நிரப்பலாம் என பாஜக நினைக்கிறது. பாஜக ஈபிஎஸ்ஸுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டுக்கு வந்தால், ஓபிஎஸ், பாஜகவுக்கு எதிரான புள்ளிகளை இணைத்து ஒரு திரட்சியை ஏற்படுத்த முடியும். அது ஒரு பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும். ஆனால், பாஜக இதில் ஒரு முடிவெடுக்காததால், ஓபிஎஸ்ஸும் களத்திற்குச் செல்ல முடியவில்லை, ஈபிஎஸ்ஸும், தெளிவான மெசேஜ் சொல்ல முடியாமல் இருக்கிறார். இன்னும் 2 - 3 நாட்களில் இதற்கு ஒரு முடிவு தெரிந்துவிடும் என்று நினைக்கிறேன்.

 எடப்பாடியும் காத்திருப்பார்

எடப்பாடியும் காத்திருப்பார்

கேள்வி : அதிமுக வரலாற்றில் இதுவரை 3 முறை எதிர்க்கட்சியாக இருந்திருக்கிறது. இந்த முறை மிக வலுவான எதிர்க்கட்சியாகவே இருக்கிறது. இந்த சூழலில், வாக்கு சதவீதம் இரட்டை இலக்கத்தை எட்டாத ஒரு கட்சியின் மாநில அலுவலகத்துக்கு அதிமுக தலைவர்கள் சென்று காத்திருக்கும் சூழல் பற்றி..?

பதில் : பலவீனமான, பிழைப்புவாத தலைவர்களிடம் அதிமுக சிக்குண்டதால், தொண்டர்களும் அதன்படியே பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 6 ஆண்டுகளாக பாஜகவின் தயவால் தான் அதிமுக ஜீவிக்கிறது என்ற தோற்றத்தை தலைவன் முதல் தொண்டன் வரை கடத்திவிட்டார்கள். பாஜகவின் அங்கம் தான் அதிமுக என்ற தோற்றம் உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. அதிமுக தொண்டர்கள் விசுவாசமானவர்கள். அதிமுக தலைவர்கள், கொள்கைகளை மறந்து பிழைப்புவாதிகளாகி விட்டனர். கட்சியை, பணம் ஈட்டுகிற ஒரு நிறுவனம் போல பாவிக்கிறார்கள். 99 விழுக்காடு மாவட்ட செயலாளர்கள், அடிமட்டத் தொண்டர்கள் வரை அப்படியே உருவாக்கப்பட்டு விட்டனர். நாளை எடப்பாடி பழனிசாமியே, பாஜக அலுவலகம் என்று அண்ணாமலைக்காக காத்திருக்கும் சூழல் வரலாம். வடநாட்டுக் கட்சியின் கிளை அலுவலகத்துக்குச் செல்லும் இவர்கள், சசிகலா, தினகரன் போன்ற சொந்தக் கட்சியின் தலைவர்களைச் சந்திப்பதை கௌரவக் குறைச்சலாக நினைக்கிறார்கள்.

English summary
"AIADMK's defeat in Erode East by-election is certain. The question is whether it is OPS or EPS that takes the second place. O. Panneerselvam will strategize to push Edappadi Palaniswami to third place.” : Former MLA U. Thanyarasu said in Exclusive interview.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X