சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தந்தையர் தினம் 2020 : என் தந்தை என் பொக்கிஷம்!

Google Oneindia Tamil News

சென்னை: சொல்லில் அடங்கா அர்ப்பணிப்பு... எதிர்பார்ப்பில்லா மனம் எதையும் தாங்கும் இதயம் ... எல்லையில்லா அன்பு... கணக்கிட முடியாத கவலைகளை தன்னுள்ளே மறைத்து வைத்திருக்கும் அரிய பெட்டகம். சந்தோசத்தை வாரி வழங்கும் வள்ளல்... தந்தை என்றாலே தன்னம்பிக்கையின் ஊற்று...

என் தந்தை எனக்கு ஒரு விந்தை. சிந்தையில் சிறிதுமில்லை அவருக்கு தடுமாற்றம். வாழ்க்கையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர். நம்பிக்கை ஒன்றே நம்பகமான நண்பன் என்ற தாரக மந்திரத்தோடு நாள்தோறும் பயணத்தை தொடங்குபவர். பித்தளை பாத்திரம் உற்பத்தி செய்யும் தொழிலாளி. சுத்தியல் பிடித்து காய்ந்துபோன கைகள்.. அடி வேலை பார்த்து அயர்ந்து போன உடல்... மனம் மட்டும் என்றுமே மணம் வீசும் பூ... வேலை செய்யும் பொழுது வெயிலின் தாக்கத்தில் வியர்வைத்துளிகள் உடலை குளிர்விக்கும்.

Fathers Day 2020: my father my treasure

கை கால்களில் தகடு வெட்டிய தடங்கள் ... உழைப்பின் அடையாளங்கள்... இரவு பகல் பாராமல் சுத்தியல் பிடித்து பாத்திரம் உற்பத்தி செய்யும் பொழுது... ஒவ்வொரு பாத்திரமும் அவரது குழந்தைகளே.. அழகாக வடிவமைப்பார். காலை வேலைக்கு சென்றுவிட்டு இரவு நாங்கள் தூங்க செல்லும்போதே வருவார். உடல் களைப்பை மறந்து புன்னகை செய்வார். அவரது கடின உழைப்பை புரிந்து கொள்ளமுடியும் அதை காட்டிக் கொள்ளாது எங்களை சிரிக்க வைத்து அதில் சந்தோஷம் பெறுவார்.

தூங்கும் போது குறட்டை சத்தம் அவரின் கடின உழைப்பை உரக்கச் சொல்லும். மீண்டும் காலைப்பொழுது காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு புறப்பட்டு விடுவார். அதற்கு முன் எங்கள் தேவைகளை கேட்காமலேயே தேடி செய்வார். அவர் எதிர்பார்ப்பது எங்கள் சிறு புன்னகை மட்டுமே. நகைச்சுவை திறனால் தன்னைச் சுற்றியிருப்பவர்களின் மனதை தன் வசப்படுத்தபவர்.

தந்தை என்பது நமக்கு கடவுள் கொடுத்த வரம் தான். எனக்கு வரமாய் வந்த கடவுள். கடவுளிடம் வேண்டுதல் வைக்க வேண்டும். ஆனால் என் தந்தை சொர்க்கத்தை கண்முன் காட்டுபவர் . படிப்பு தான் மனிதனை உயர்த்தும் படிக்கட்டு என்று அடிக்கடி சொல்வார். தான் கல்லாத கல்வியை நாங்கள் பெற்றுவிட அவரை அவரே வருத்திக் கொண்டார். மூன்று பிள்ளைகளும் வாழ்வில் முன்னேற மூச்சுவிடக்கூட நேரம் இன்றி உழைத்தார்.
பெண் பிள்ளைகளை பெற்ற அப்பாக்கள் மிகவும் வலிமை மனம் கொண்டவர்கள். படிப்பையும் கொடுத்து திருமண செலவுகளை பார்த்து வாழ்க்கையை செவ்வனே அமைத்துக் கொடுப்பது என்பது மிகவும் கடினமான செயல்.

தந்தையர் தினம் 2020 : எப்பிறவி நான் எடுத்தாலும்.. என் தந்தையர் தினம் 2020 : எப்பிறவி நான் எடுத்தாலும்.. என் "அப்பா" என்றும்.. நீ மட்டுமே..!

ஒவ்வொரு நொடியும் அவரின் வேதனையை புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், அதைக் காட்டிக் கொள்ளாத ஜீவன். உடல் உழைப்பு என்பது அனைவருக்கும் சாத்தியமல்ல சுத்தியல் எடுத்து அடிக்கும் ஒவ்வொரு நொடியும் என் இதயம் நின்றே துடிக்கும். அந்த அளவுக்கு அவரது வேலை கடினம். ஒரு பாத்திரம் உருப்பெற்று வர தன்னைத்தானே செதுக்கிக் கொள்ளும் சிற்பி. எப்படி பாத்திரங்களை அழகாக வடிவமைத்தாரோ அதேபோல் குடும்பத்தையும் குழந்தைகளையும் மிகவும் அழகாக வடிவமைத்தார்.

மனவேதனை மறைத்து சந்தோஷத்தை மட்டுமே கொண்டாடுபவர். இன்னும் நினைவிருக்கிறது. நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது மதிய உணவை மறந்து வைத்து பள்ளிக்கு சென்று விட்டேன்.என் அப்பா மதிய உணவுக்கு அரை மணி நேரம் முன்பே உணவை எடுத்துக் கொண்டு வந்துவிட்டார். அவரின் வேலைப் பளுவுக்கு இடையில் காத்துக்கொண்டிருந்தார். வண்டியை நிறுத்தி விட்டு தூரத்தில் நின்று என் வகுப்பறையை பார்த்துக் கொண்டே இருந்தார். தமிழ் பாடம் நடந்து கொண்டிருந்தது. நான் வாசித்துக் கொண்டிருந்தேன். அதற்கு ஆசிரியர் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார். சாப்பாட்டு கூடையை கையில் பிடித்தவாறே என்னை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டே இருந்தார். மெய்மறந்து நின்று கொண்டிருந்தார். ஆசிரியர் விளக்கம் கொடுக்கும் வேலையில் என் அப்பாவின் முகத்தை பார்த்தேன். சந்தோஷம் மட்டுமே!

தன் மகளே ஆசிரியரோ என்று ஒரு பெருமிதம். மதிய உணவு இடைவேளை மணி அடித்ததும் தமிழ் ஐயா வகுப்பறையை விட்டு வெளியே சென்றார். என் அப்பா ஓடி வந்து என் பிள்ளை எப்படி படிக்கிறாள் என்று கேட்டார். அதற்கு அவர் "நல்லா படிக்கும் பிள்ளை" என்றதும் தனக்கே பட்டம் சூட்டிய மன நிம்மதி. சாப்பாட்டு கூடை நிறைய பிஸ்கட் தின்பண்டம் என்று ஏதேதோ வாங்கி அடுக்கி வைத்திருந்தார். எதுக்குப்பா இதெல்லாம் என்றால் வயிறு நிறைய சாப்பிடுமா அம்மா சோறு மட்டும் தான் வச்சிருக்கா ... அதான் பண்டம் வாங்கிட்டு வந்தேன் என்றதுமே... அவரின் எதிர்பார்ப்பில்லா அன்பை மட்டுமே உணர்ந்தேன்.

அன்றைய நாள் முழுதும் அவர் காற்றில் பறந்தார். நல்லா படிக்கும் பிள்ளை என்ற ஒரு சொல் அவரின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம். தான் சிறந்த தந்தை என்பதற்கு எடுத்துக்காட்டு என்று தன்னைத்தானே பெருமிதம் செய்துகொண்டார்.

உழைப்பை எந்த சூழ்நிலையிலும் விடாமல் இன்றும் எங்களுக்கு எது தேவை, எது நல்லது, என்று இன்னும் தன்னை வருத்தி செய்துகொண்டே இருக்கிறார். உடல் வலுவிழந்தாலும் மன வலிமை கொண்டு தைரியமாக நடைபோட்டு சிறந்த தந்தை என்று ஊர் போற்றும்படி வாழ்ந்து வருகிறார். என் தந்தை எனக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் .

- காயத்ரி.ஏ

English summary
Father's Day 2020: For every daughter father is the first and evergreen hero.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X