சென்னையில் கால் அகற்றப்பட்ட கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்.. தவறான சிகிச்சை என குடும்பம் கதறல்
சென்னை: சென்னையில் மூட்டு அறுவை சிகிச்சை செய்து கால் அகற்றப்பட்ட 17 வயது நிரம்பிய கால்பந்து வீராங்கனை பிரியா ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார். அரசு மருத்துவமனை சார்பில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் பிரியா இன்று உயிரிழந்தார். மருத்துவமனையில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை வியாசர் பாடியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகள் பிரியா (வயது 17). இவர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்.
சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்ந்து பட்டப்படிப்பு படித்து வந்தார். பிரியா கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்.

மாநில போட்டிகளில் பங்கேற்பு
சிறுவயது முதலே கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்று அசத்தினார். மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் அவர் பங்கேற்று வந்தார். இந்நிலையில் தான் சமீபத்தில் பிரியா மூட்டு வலியால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றார். சென்னை கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் பிரியாவை டாக்டர்கள் பரிசோதித்தனர்.

அறுவை சிகிச்சை
அப்போது பிரியாவின் வலது கால் மூட்டுப் பகுதியில் ஜவ்வு விலகி இருப்பதாக கூறினர். இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையை தொடர்ந்து தனது கால்வலி குணமாகும். மீண்டும் கால்பந்து போட்டியில் சாதிக்கலாம் என அவர் நினைத்தார். ஆனால் பிரியாவின் கால் வீக்கம் ஏற்பட்டு காணப்பட்டது. இதனால் அவர் சிரமத்தை சந்தித்தார்.

கால் அகற்றம்
இதையடுத்து மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வுந்தனர். மேலும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவரது வலது காலில் ரத்த ஓட்டம் தடைப்பட்டதும், அதனால் தான் அறுவை சிகிச்சைக்கு பிறகு கால் வீங்கியதும் தெரியவந்தது. இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் எனக்கூறி அவரது வலது கால் அகற்றப்பட்டது.

மருத்துவமனையில் உயிரிழப்பு
இதனால் பிரியா மற்றும் அவரது குடும்பத்தின் கலக்கம் அடைந்தனர். சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் தான் கால் அகற்றப்பட்டதாகவும், அதுதான் அவரது உயிரை பறித்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டி கதறி அழுதனர். மேலும் கவனக்குறைவாக உள்ள டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் தான் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிரியா இன்று காலை உயிரிழந்தார். காலை 7.15 மணியளவில் சிகிச்சை பலனின்றி பிரியா இறந்தார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

போலீஸ் குவிப்பு
பிரியாவின் இந்த மரணத்தால் ராஜீவ் காந்தி மருத்துமவனையில் பதற்றமான சூழல் உள்ளது. இதனால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இந்த சம்பவம் குறித்து அரசு சார்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதில் 2 டாக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட உள்ளதாகவும், அறுவை சிகிச்சைக்கு பிறகு இறுக்கமாக போடப்பட்ட கட்டால் தான் ரத்த ஓட்டம் தடைப்பட்ட நிலையில் பிரியா பிரச்சனைக்கு உள்ளாகி இறந்ததாக இன்று காலை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications