அண்ணாமலைக்கு எதிராக ‘லாபி’.. குடைச்சல் கொடுக்கும் மேலிட புள்ளி! ‘அதே குரல்’ போட்டு உடைக்கும் சூர்யா!
சென்னை : பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை டார்கெட் செய்து இடையூறுகள் கொடுத்துக் கொண்டிருப்பதாக, அண்மையில் பாஜகவில் இருந்து விலகிய திருச்சி சூர்யா சிவா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே மாதம் பாஜகவில் இணைந்த திருச்சி சூர்யா சிவா, அடுத்தடுத்து பல சர்ச்சைகளில் சிக்கினார். கடைசியாக, பாஜக சிறுபான்மை அணி தலைவர் டெய்சி சரணுடன் திருச்சி சூர்யா பேசிய போன் உரையாடல் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கட்சியில் இருந்து 6 மாதங்கள் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து, கட்சியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார் திருச்சி சூர்யா. ஆனாலும், எல்.முருகன், கேசவ விநாயகம் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதுகுறித்து காயத்ரி ரகுராம், திருச்சி சூர்யா, வேறொருவரின் வெறுப்பையே அவர் கொட்டுகிறார் என அண்னாமலையை மறைமுகச் சாடினார். இந்நிலையில், காயத்ரி, எல்.முருகனின் குரலையே ஒலிக்கிறார் எனக் குற்றம்சுமத்தி இருக்கிறார் திருச்சி சூர்யா.

அண்ணாமலைக்கு நெருக்கம்
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான திருச்சி சூர்யா, சஸ்பெண்ட் நடவடிக்கையை ஏற்றுக்கொள்வதாகச் சொல்லிவிட்டு, ஏன் திடீரென கட்சியை விட்டே விலகினார் எனக் கேள்விகள் எழுந்தன. திருச்சி சூர்யாவை டிஸ்மிஸ் செய்ய டெல்லி மேலிடம் அறிவுறுத்தியதால், அண்ணாமலை, சூர்யாவிடம் சொல்லி, அவரையே விலகச் செய்ததாகவும் கூறப்படுகிறது. கட்சியை விட்டு விலகிய சூர்யா, அண்ணாமலையை மட்டும் பாராட்டியதோடு, எல்.முருகன், கேசவ விநாயகம் ஆகியோரை விமர்சித்திருந்தார்.

விமர்சனங்கள்
அண்ணாமலை, பிரதமர் வேட்பாளராக வரும் தகுதி உள்ளவர், ஆனால், எல்.முருகனும், கேசவ விநாயகமும் இருக்கும் வரை தமிழக பாஜக வளராது என விமர்சனம் செய்திருந்தார் திருச்சி சூர்யா. அண்ணாமலை, தனக்கு பிடிக்காத எல்.முருகன், கேசவ விநாயகம் ஆகியோரை கட்டம் கட்டுவதற்காக திருச்சி சூர்யாவை பயன்படுத்துவதாகவும் குற்றசாட்டு எழுந்தது. அண்ணாமலையின் ஆதரவாளர், திருச்சி சூர்யா என்பதால்தான் அவருக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்று காயத்ரி ரகுராமும் குற்றம்சாட்டிக் கொண்டே இருந்தார்.

அண்ணாமலை vs காயத்ரி ரகுராம்
ஆரம்பம் முதலே, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் காயத்ரி ரகுராமுக்கும் மோதல் போக்கு இருந்து வந்த நிலையில் திருச்சி சூர்யா - டெய்சி சரண் ஆடியோ விவகாரத்தின்போது அவரை ஆறு மாதம் பொறுப்பிலிருந்து நீக்கி உத்தரவிட்டார் அண்ணாமலை. தொடர்ந்து, அண்ணாமலைக்கு எதிராக மறைமுகமாக கருத்துக்களை தெரிவித்து வந்தார் காயத்ரி. இதனால் வகித்து வந்த பொறுப்புக்கு இசையமைப்பாளர் தினாவை நியமித்துள்ளார் அண்ணாமலை. அதன் பிறகும் காயத்ரி நாள்தோறும் அண்ணாமலை தரப்பை ட்விட்டரில் விமர்சித்து வருகிறார்.

திருச்சி சூர்யா குற்றச்சாட்டு
இந்நிலையில், அண்ணாமலையின் வளர்ச்சி எல்.முருகனுக்கு பிடிக்கவில்லை, அதனால், எல்.முருகன் தனது ஆதரவாளர்கள் மூலம் அண்ணாமலைக்கு இடையூறு செய்து வருகிறார் எனக் குற்றம் சாட்டியுள்ளார் திருச்சி சூர்யா. அண்ணாமலைக்கு எதிராக பேசும் காயத்ரி ரகுராமின் பேச்சுக்கள் எல்லாம் எல்.முருகனின் பேச்சாகத்தான் இருக்கிறது என்று கூறியுள்ளார், அண்மையில் பாஜகவில் இருந்து வெளியேறிய திருச்சி சூர்யா சிவா. திருச்சி சூர்யா - காயத்ரி ரகுராம் இடையே வார்த்தை மோதல்கள் தொடர்ந்து வந்த நிலையில், காயத்ரி, எல்.முருகன் பேச்சைக்கேட்டே இப்படி பேசுகிறார் எனக் கூறி இருக்கிறார் சூர்யா.

அப்போ ஏன் சொல்லல
இதுபற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ள திருச்சி சூர்யா, "நானும் டெய்சி சரணும் பேசிய ஆடியோவை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. மொத்தம் 18 நிமிடங்கள் உள்ள அந்த ஆடியோவில், நான் அதிகமாகப் பேசும் ஆறு நிமிடங்களை மட்டுமே கட் செய்து வெளியிட்டு இருக்கிறார்கள். ஒரு பெண்ணை ஆபாசமாக பேசி விட்டதால் உடனே அந்த ஆடியோவை வெளியிட்டு கண்டனம் தெரிவித்ததாக சொல்லி இருக்கிறார் காயத்ரி ரகுராம். ஆனால் இதற்கு முன்பு கே.டி.ராகவன் வீடியோ வெளியானபோது அதை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ஏன் காயத்ரி கண்டனம் தெரிவிக்கவில்லை.

பாஜகவில் சாதி
இதனால்தான் அவர் பிராமணர் என்பதால் கண்டனம் தெரிவிக்கவில்லையா என்ற சலசலப்பு கட்சிக்குள் எழுந்திருக்கிறது. அண்ணாமலை பிராமணர் அல்ல, நானும் பிராமணர் அல்ல. இதனால் தான் நான் அண்ணாமலையின் ஆதரவாளர் என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது. பெண்ணுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறேன் என்று என் விஷயத்தில் சீறும் காயத்ரி ரகுராம், கே.டி ராகவன் விவகாரத்தில் ஏன் சீறவில்லை என்ற கேள்வி தலைமைக்கு இருக்கிறது.

அண்ணாமலையை சிறுமைப்படுத்த
தமிழகத்தில் அண்ணாமலையால் பாஜகவுக்கு ஏற்பட்டிருக்கும் வளர்ச்சியைப் பார்த்து பாஜகவினர் நெகிழ்ந்து போய் இருக்கும் நிலையில், கட்சிக்குள்ளேயே இருந்துகொண்டு அவற்றையெல்லாம் கடுமையாக விமர்சித்து வருகிறார் காயத்ரி ரகுராம். அண்ணாமலை பங்கேற்கும் கூட்டத்திற்கு அதிக கூட்டம் கூடும்போது இது அண்ணாமலைக்காக கூடிய கூட்டம் இல்லை என்று விமர்சிக்கிறார். அண்ணாமலையை சிறுமைப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து இப்படி இயங்கிக்கொண்டே இருக்கிறார்.

எல்.முருகன் குரல்
அண்ணாமலைக்கு முன்பு தமிழக பாஜகவில் தலைவர்களாக இருந்த பலரையும் விமர்சிக்கும் காயத்ரி ரகுராம், எல்.முருகனை மட்டும் விமர்சிப்பதில்லை. எல்.முருகன் அண்ணாமலை வளர்ச்சியின் மீது அதிருப்தி கொண்டிருக்கிறார். அண்ணாமலையால் தான் தமிழக பாஜகவில் பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். இதனால் தான் அவர் காயத்ரி ரகுராம் மூலமாக தனது கருத்துகளை பரப்புகிறார் என்று சலசலப்பு இருக்கிறது. காயத்ரியின் பேச்சுகள் எல்லாம் எல்.முருகனின் கருத்துகளாகவே இருக்கிறது.

எல்.முருகன் ஆதரவாளர்
காயத்ரி ரகுராம் எல்.முருகன் ஆதரவாளர் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. என் ஆடியோவை வானதி சீனிவாசனுக்கும் டெல்லியில் ஒருவருக்கும் அனுப்பினேன் என்று சொல்கிறார் காயத்ரி . டெல்லியில் உள்ள அந்த நபர் யார்? அவர் எல்.முருகன் தான். கேசவ விநாயகமும் எல்.முருகனும் ஓர் அணியில் இருக்கிறார்கள். அதனால் தான் இவர்கள் இருவரும் அண்ணாமலைக்கு எதிராக செயல்படுகிறார்கள். எல்.முருகன் மாநிலத் தலைவராக இருந்தபோது சில நிர்வாகிகளை நியமித்து இருந்தார். அவர்கள் மூலமாக இப்போது அண்ணாமலைக்கு குடைச்சல் கொடுத்து கொண்டிருக்கிறார்.

முருகன் லாபி
மத்திய அமைச்சராகி விட்டாலும், மாநில பொறுப்பில் இருந்து ஒதுங்கிக் கொள்ளாமல் இருக்கிறார் எல்.முருகன். டெல்லியில் இருந்துகொண்டே இங்கு அண்ணாமலைக்கு இடையூறு செய்து கொண்டிருக்கிறார். என் ஆடியோ விவகாரத்தில் கூட டெல்லியில் இருந்து கொண்டு எல்லோரிடமும் பரப்பினார் எல்.முருகன்.
டெல்லியில் இருந்துகொண்டு இங்கிருந்து வரும் செய்திகளை வைத்து அண்ணாமலைக்கு எதிராக லாபி செய்கிறார் எல்.முருகன். " எனக் பகீர் புகார்களை தெரிவித்துள்ளார் திருச்சி சூர்யா.












Click it and Unblock the Notifications