குலோப் ஜாமுன், மைசூர்பாக், பால்கோவா ஆவினில் கசக்கும்.. விலை உயர்வு எவ்வளவு தெரியுமா?
சென்னை: ஆவின் நிறுவனங்களில் விற்பனை செய்யப்படும் குலோப் ஜாமுன், மைசூர்பாக், பால்கோவா உள்ளிட்ட 17 வகையான இனிப்பு பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துகொண்டே வருகிறது. இதனால் சாமானிய மக்களின் குடும்ப பட்ஜெட்டில் துண்டு விழுகிறது. கடந்த ஆறு மாதங்களில் ஆவின் பால் பொருட்களின் விலை மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆவின் பால் விலை குறைக்கப்பட்ட சந்தோஷத்தில் மக்கள் இருந்த நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் ஆவினில் நெய், பாதாம் பால் பவுடர், தயிர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்களின் விற்பனை விலை உயர்த்தப்பட்டது.

ஜிஎஸ்டி விலை உயர்வு
கடந்த ஜூலை மாதத்தில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தயிர், லஸ்ஸி, மோர் உள்ளிட்ட பால் பொருள்களுக்கு 5 சதவிகித ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டதை அடுத்து, பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் தயிர், லஸ்ஸி, மோர் ஆகியவற்றின் விலையை ரூ.4 முதல் ரூ.10 உயர்த்தின.

ஆவின் நெய் விலை உயர்வு
இதனையடுத்து ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. அதன்படி ஆவின் நெய் ஒரு லிட்டர் விலை ரூ.535லிருந்து ரூ.580 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தயிர் அரை லிட்டர் ரூ.30லிருந்து ரூ.35 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 100 கிராம் தயிர், ரூ.10லிருந்து ரூ.12 ஆக உயர்த்தப்பட்டது.

இனிப்புகள் விலை உயர்வு
இந்த நிலையில் ஆவின் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் இனிப்பு வகை பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ரசகுல்லா, குலோப் ஜாமுன் உள்ளிட்ட 17 இனிப்பு வகைகளின் விலையை உயர்த்தியுள்ளது ஆவின் நிறுவனம். ரூ.20 முதல் ரூ.80 வரை இனிப்பு வகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

விலை உயர்வு எவ்வளவு
குலோப் ஜாமுன் 125 கிராம் 5 ரூபாய் உயர்ந்து 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று மைசூர்பாக் அரை கிலோ 230 ரூபாயில் இருந்து 270 ரூபாயாகவும், பால்கோவா 100 கிராம் 47 ரூபாயில் இருந்து 55 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இனிப்பில்லாத கோவா ஒரு கிலோ 520 ரூபாயில் இருந்து 600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆவின் பால் விலையை தமிழக அரசு குறைத்த நிலையில் பால் பொருட்களின் விலை அதிகரித்து வருவது சாமானிய மக்களை கலக்கமடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications