நீதிபதிகள் நச்னு சொன்ன பாயிண்ட்.. பள்ளி மாணவர்களுக்கு பாலியல் கல்வி 9ம் வகுப்பு முன்பேயே அவசியம்
சென்னை: மேல்நிலை பள்ளிகளின் பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றும் பள்ளி மாணவர்களுக்கு, ஒன்பதாம் வகுப்புக்கு முன்பு இருந்தே பாலியல் கல்வியை வழங்க வேண்டும் என்றும் வழக்கு ஒன்றில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். நீதிபதிகளின் இந்த கருத்தானது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.. என்ன நடந்தது?
நம்முடைய இந்தியாவை பொறுத்தவரை, சிறார்களின் நலனை காப்பதற்காகவே போக்சோ உள்ளிட்ட எண்ணற்ற சட்டங்களும் அமலில் உள்ளன.. அதேபோல பாலியல் வக்கிரங்களை அரங்கேற்றுவர்களை தண்டிக்க நீதிமன்றங்களும் துணையாய் நிற்கின்றன..

எனினும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான துன்புறுத்தல்கள் குறித்தான புகார்கள் அதிகரித்திருப்பதாக தேசிய மகளிர் ஆணையம் வருத்தத்துடன் கூறியிருப்பதை இங்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. அதிலும், கடந்த 5 ஆண்டுகளை காட்டிலும் தற்போது கணிசமாக அதிகரித்து இருப்பதாக புள்ளி விவரங்களும் தெரிவிக்கின்றன.
பள்ளிகளில் விழிப்புணர்வு
பள்ளிகளில் போதுமான விழிப்புணர்வு இல்லாததால் பல பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போதும் வெளியே சொல்ல பயப்படுகிறார்கள்.
எனவே, தங்கள் பெண் மற்றும் ஆண் குழந்தைகளையும் இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது என்றும், இதனால் ஏற்படும் விளைவுகளையும் அவர்களுக்கேற்றவாறு பள்ளிகளிலும் ஆசிரியர்கள், குட் டச், பேட் டச் குறித்த கற்பித்தலும் அவசியமாகிறது. முக்கியமாக தனிமனித ஒழுக்கமும், பாலியல் சார்ந்த நல்கருத்துக்களும் போதிக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
உச்ச நீதிமன்றம் நீதிபதிகள்
இந்நிலையில், 9ம் வகுப்பில் இருந்து அல்ல, மிக இளம் வயதிலேயே மாணவர்களுக்கு பாலியல் கல்வியை கற்றுத்தர வேண்டும் என்று வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் தற்போது கருத்து தெரிவித்துள்ளது.
மேல்நிலைப்பள்ளி பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று போக்சோ சட்டத்தின் கீழ் கைதான 15 வயது சிறுவனுக்கு ஜாமீன் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச வழக்கு என்ன?
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த அந்த சிறுவனுக்கு 15 வயதாகிறது.. போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்தார்... அந்த சிறுவனுக்கு எதிராக ஐபிசி 376வது பிரிவின்கீழ் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த சிறுவன் ஜாமீன் கேட்டு அலகாபாத் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்... ஆனால், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
உடனே இதனை எதிர்த்து அந்த சிறுவன், சுப்ரீம்கோர்ட்டுக்கு அப்பீல் செய்தார்.. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் குமார், அலோக் அராதே அமர்வு, அந்த சிறுவனுக்கு ஜாமீனை வழங்கி உத்தரவிட்டது.. மேலும், உத்தரப் பிரதேச மாநில அரசு, பள்ளிகளில் பாலியல் கல்வி எவ்வாறு நடைமுறையில் உள்ளது ? என்பது குறித்து பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
பிரமாண பத்திரம்
அதன்படியே மாநில அரசும், தன்னுடைய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில், "9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் NCERD எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன வழிகாட்டுதலின் அடிப்படையில், பாலியல் கல்விக்கான பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.
உடனே நீதிபதிகள், "பள்ளிகளில் இப்போது நடைமுறையிலுள்ள பாலியல் கல்வியின் நிலை போதுமானது கிடையாது.. . மேல்நிலைப்பள்ளி பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி ஒரு பகுதியாக இருக்க வேண்டும்
9ம் வகுப்பு மாணவர்கள்
குழந்தைகள் பருவமடையும் காலத்தில் ஏற்படும் உடல் மற்றும் மன மாற்றங்கள் குறித்து அவர்களுக்கு தேவையான விழிப்புணர்வும் வழங்கப்பட வேண்டும்... எனவே 9ம் வகுப்புக்கு முன்னாடியே, மாணவர்களுக்கு பாலியல் கல்வியை கற்றுத்தர வேண்டும்.. இனிமேல் இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதன்மூலம், தங்களுடைய உடல்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து குழந்தைகளால் தெரிந்துகொள்ள முடியும். அதன்மூலம், தேவையான கவனிப்புகளை அவர்களால் எடுத்துக்கொள்ள முடியும்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications