கருணாஸுக்கு மீண்டும் டிக்கெட் உண்டா இல்லையா.. சஸ்பென்ஸ் வைத்து பீதியைக் கிளப்பும் அதிமுக
சென்னை: அதிமுக தொகுதி பங்கீடு உத்தேச பட்டியல் என ஒன்று உலா வருகிறது. அதில் பார்த்தால் அதிமுக கூட்டணியில் கருணாஸ் கட்சிக்கு இடம் இல்லாதது போல் சஸ்பென்ஸ் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் மே மாதத்திற்குள் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று ஹாட்டிரிக் வெற்றி பெற முயற்சித்து வருகிறது. கிட்டதட்ட அதிமுகவின் கூட்டணி உறுதியாகிவிட்டது.
பாஜக, தேமுதிக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி, அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி, புதிய நீதி கட்சி, முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்ட கட்சிகள் களம் காணவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

கூட்டணி கட்சி
இந்த நிலையில் இன்றைய தினம் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு குறித்த உத்தேச பட்டியல் ஒன்று வெளியானது. அதில் அதிமுக 171 இடங்களிலும் பாமக 21 இடங்களிலும் பாஜக 20 இடங்களிலும் தேமுதிக 14 இடங்களிலும் தமிழ் மாநில காங்கிரஸ் 5 இடங்களிலும் கூட்டணி கட்சிகள் 3 இடங்களிலும் போட்டியிடுவதாக அந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

54 தொகுதிகள்
அதிமுக போட்டியிடும் 117 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. மற்ற 54 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பின்னர் வெளியாகும் என தெரிகிறது. அது போல் தேமுதிக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுகவின் உறுப்பினர்
ஆனால் இந்த முறை கூட்டணி கட்சிகளின் பட்டியலில் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் திருவாடானை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸின் கட்சியின் பெயர் இடம்பெறவே இல்லை. அவர் தற்போது பதவி வகித்து வரும் திருவாடானை தொகுதிக்கு அதிமுகவின் டிபிகே நலவிரும்பி போட்டியிடுவார் என உத்தேச பட்டியல் சொல்கிறது.

சீர்மரபினர்
சசிகலாவுக்கு ஆதரவாக பேசியதால் அவருக்கு இடம் வழங்கப்படவில்லையா? சீர்மரபினர் குறித்த கோரிக்கைக்கு யார் உறுதி அளிக்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி அமைப்பேன் என கருணாஸ் சொல்லியிருந்ததை மனதில் வைத்துக் கொண்டு அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லையா , இல்லை கூட்டணி குறித்த உடன்பாட்டை அதிமுகவுடன் கருணாஸ் ஏற்படுத்திக் கொள்ளவில்லையா என தெரியவில்லை.

அமமுகவுடன் கூட்டணி?
எனவே நடப்பதை பார்த்தால் கருணாஸ், அமமுகவுடன் கூட்டணி வைத்து கணிசமான தொகுதிகளை பெறுவார் என்றே தெரிகிறது. ஒரு வேளை சசிகலா தலைமையில் 3ஆவது அணி அமைந்தால் அதில் கருணாஸ் கட்சி இடம்பெறவும் வாய்ப்புள்ளது. இதெல்லாம் உத்தேச பட்டியல்தான் இதை வைத்து நாம் எந்த ஒரு தீர்க்கமான முடிவையும் எடுத்து விட முடியாது.