சுகாதார நிலையமா இது? மத்திய அமைச்சர் வரும்போது இப்படி இருக்கேம்மா.. பாஜகவினர் வாக்குவாதம்
மத்திய இணை அமைச்சர் பார்வையிட வந்த மதுரவாயல் ஆரம்ப சுகாதார நிலையம் சேறும் சகதியுமாக காட்சி அளித்ததால் பாஜகவினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னை: என்னம்மா இப்படி இருக்கேம்மா... சுகாதார நிலையமா இது... சுகாதார நிலையமே சுகாதாரம் இல்லாம இருக்கேம்மா என்று மதுரவாயல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிகாரிகளுடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 3 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். சென்னையில் பல மையங்களில் தடுப்பூசி முகாம் போடப்பட்டு வருகிறது.

மதுரவாயலில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடத்தை பார்வையிடுவதற்காக அங்கு வருவதாக தெரிவித்திருந்தார்.
காலையில் பெய்த மழையால் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு மழைநீர் மற்றும் சேரும் சகதியுமாக காணப்பட்டது. இதனையடுத்து சுகாதார துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்களை கொண்டு தேங்கியிருந்த மழை நீர் அகற்றி விட்டு மண் கொட்டி நிரப்பிக்கொண்டிருந்தனர்.
இணை அமைச்சருக்கு வரவேற்பு அளிக்க வந்த பாஜக நிர்வாகிகள் ஆரம்ப சுகாதார நிலையம் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாக கூறி அங்கிருந்த அரசு அதிகாரிகளிடம் சரமாரியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். யாரும்மா.. நீங்க இங்க வாங்க அழைத்த ஒரு நிர்வாகி, சுகாதார நிலையமா? என்று கேள்வி எழுப்பினார். சுகாதார நிலையமே சுகாதாரம் இல்லாமல் இருக்கே என்று கூறிய அந்த பாஜக நிர்வாகி, மத்திய அமைச்சர் வரும் போது கூட இப்படியா வைத்திருப்பது எனறு வாக்குவாதம் செய்தார்.
அமைச்சர் வருவது பற்றி குறுகிய நேரத்தில் தகவல் வந்த காரணத்தால் அந்த பணிகளைச் செய்ய முடியவில்லை என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது அங்கிருந்த நபர் ஒருவர், இது மத்திய அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சி இங்கு கட்சிக்காரருக்கு என்ன வேலை என்று கேட்டார். அதற்கு பாஜகவினரால் பதில் சொல்ல முடியவில்லை.
கடும் வாக்குவாதம் செய்து விட்டு காத்திருந்த பாஜகவினரைப் பார்த்த மத்திய இணையமைச்சர், கட்சிக்காரர்கள் யாரும் உள்ளே வர கூடாது என்று கூறினார். அதன் பிறகு தடுப்பூசி முகாமை பார்வையிட உள்ளே சென்றார்.
மழை காலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையும் மீறி கூட்டம் கூடிய பாஜக நிர்வாகிகள் முன்களப்பணியாளர்களாக செயல்படும் சுகாதாரப்பணியாளர்களையும் அதிகாரிகளையும் பார்த்து சத்தம் போட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications