விடியல் அரசுன்னு சொல்லி இப்படி இடியை இறக்கிட்டீங்களே.. “சொல்லாததை செய்வது” இதுதானா? தினகரன் கண்டனம்!
சென்னை : "வாக்குறுதி அளித்தது வேறு, இப்போது மக்கள் தலையில் இடியை இறக்குகிறார்கள். இதுதான் ஸ்டாலின் அடிக்கடி கூறும் சொல்லாததையும் செய்வதோ?" என டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் மக்களை பாதிக்காத வகையில் மின்கட்டணம் உயர்த்தப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனசாட்சியோடு யோசித்துப் பார்த்து தி.மு.க அரசு மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

உயரும் மின் கட்டணம்
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 27.50 கூடுதலாக செலுத்தும் வகையில் கட்டண மாற்றம் செய்யப்படுவது பரிசீலனையில் உள்ளது. மாதம் 300 - 400 யூனிட் பயன்படுத்துவோருக்கு மாதம் 147.50 அதிகரிக்க பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு 500 யூனிட் பயனீட்டாளர்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.298 கட்டணம் உயர வாய்ப்புள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்குப் பின் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் ரூ.12,647 கோடி கடன் உயர்ந்துள்ளது. மத்திய அரசின் மின் அமைச்சகத்தின் அறிவிப்பின்படி 10 சதவீதம் வெளிநாட்டு நிலக்கரியை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், மின்சாரத்தின் சராசரி விலை அதிகரித்துள்ளது. எனவே, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு மின் கட்டணத்தை 8 வருட இடைவெளிக்குப் பிறகு உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

மக்கள் தலையில் இடி
மின் கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தி.மு.க அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு மின்கட்டண உயர்வு என்ற அடுத்த பரிசை வழங்கியிருக்கிறது. விடியல் ஆட்சி தரப்போவதாக சொன்னவர்களின் ஒவ்வொரு அறிவிப்பும் மக்களின் தலையில் இடியாகவே விழுந்து கொண்டிருக்கிறது.

சொல்லாததையும்
மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறையை கொண்டுவரப்போவதாக வாக்குறுதி அளித்தவர்கள் இப்போது அதைப்பற்றி வாய் திறக்காமல், மின்சார கட்டணத்தை உயர்த்தியிருக்கிறார்கள். இதுதான் ஸ்டாலின் அடிக்கடி கூறும் சொல்லாததையும் செய்வதோ?" என டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வாபஸ் பெற வேண்டும்
மேலும் அவர், "ஏற்கனவே, நெருக்கடியிலிருக்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்களையும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் நிலையையும் மனசாட்சியோடு யோசித்துப் பார்த்து தி.மு.க அரசு மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications