திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் மகள் டாக்டர் மனமல்லி காலமானார்
சென்னை: மறைந்த திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகனின் மகள் டாக்டர் மனமல்லி உடல் நலக்குறைவால் காலமானார்.
திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இந்த நிலையில் இன்று அவரது மகள் டாக்டர் மனமல்லி சென்னையில் காலமானார்.
இதென்னப்பா திமுகவுக்கு வந்த சோதனை- சென்னை மேற்கு மா.செ. பதவிக்கான போட்டியில் 2 மாஜி அதிமுக தலைகள்

பேராசிரியர் அன்பழகனுக்கு மொத்தம் 3 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். 3 மகள்களில் ஒருவர் டாக்டர் மனமல்லி. சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த டாக்டர் மனமல்லி சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார்.

மனமல்லி மறைவுச் செய்தி அறிந்ததும் திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் விரைந்து சென்று அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். அன்பழகன் இறந்த சில மாதங்களிலேயே அவர் அதிக பாசம் வைத்திருந்த மகள் மனமல்லி இறந்திருப்பது அவரது குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில்தான் திமுக எம்எல்ஏ அன்பழகன் கொரோனாவால் மரணமடைந்தார். இந்த நிலையில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வீட்டில் துக்க சம்பவம் நடந்திருப்பது திமுகவினரையும் வருத்தப்பட வைத்துள்ளது.
மு.க.ஸ்டாலின் இரங்கல்:
இதற்கிடையே, மனமல்லி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் குறிப்பில், மறைந்த கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியப் பெருந்தகை அவர்களின் மகள் திருமதி. மனமல்லி அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தி கேட்டு நான் மிகவும் மன வேதனையடைந்தேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பேராசிரியர் அவர்களின் மகளான டாக்டர் திருமதி மனமல்லி சிவராமன் அவர்கள், என் மீது எப்போதும் தனிப்பற்றும் பாசமும் கொண்டிருந்தார்கள். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் - உறவினர்களுக்கும் எனது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.