’நவீன கால பரதன்’ அவரேதான்! முதல் பக்கத்தில் சிரிக்கும் ஒபிஎஸ்! ‘வாரிசுகள்’ எடுத்த கடைசி அஸ்திரம்.!
சென்னை : அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்ச கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் இன்று வெளியாகும் பெரும்பாலான முன்னணி நாளிதழ்களில் ஓபிஎஸ் தரப்பிலிருந்து பிரம்மாண்ட விளம்பரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் நம்பிக்கை நட்சத்திரம், நவீன கால பரதன் என நீண்ட விளக்கங்கள் கூறப்பட்டுள்ளது.
முதலமைச்சர், முதலமைச்சர் வேட்பாளர், கட்சியின் தலைமைப் பொறுப்பு உள்ளிட்ட பல விவகாரங்களில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவில் அதிகாரப் போட்டி நீண்ட நாட்களாகவே இருந்தது.
தொடர் தோல்விகள், உட்கட்சி விவகாரங்களை கையாள முடியாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை திடீரென வெடித்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக மோதல்
கட்சியின் தலைமை அலுவலகம் ரத்தக்களறியாக மாறும் அளவுக்கு மோதல் வலுத்து உள்ள நிலையில் இது குறித்து பல ஊடகங்களில் கட்சியில் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் விளக்கம் அளித்து வருகிறார். ஆனால் எடப்பாடி தரப்பில் இதுவரை அவரோ அல்லது அவரது ஆதரவாளர்களோ இதுவரை வாய்திறக்கவில்லை. இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வளர்மதி ஆகியோர் காரை முற்றுகையிட்டு பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து விவாதித்தோம் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பு இருக்கிறது என கூறியிருந்தார்.

ஒற்றை தலைமை விவகாரம்
இதையடுத்து கடந்த காலங்களில் அமைதியாக இருந்த பன்னீர்செல்வம் திடீரென மௌனத்தை கலைத்து தனது தரப்பு நியாயத்தை கூறினார். அதிமுகவின் இரட்டை தலைமையே நீடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்த அவர் நேற்று பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படும் இருக்கும் தீர்மானங்களுக்கு இறுதி வடிவம் கொடுப்பதற்கான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி வரை அவர் வரவே இல்லை. இந்நிலையில் தான் அலுவலகத்தில் வன்முறை வெடித்தது. அதிமுகவினர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் முழக்கங்களை எழுப்ப எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர்.

நாளிதழ்களில் விளம்பரம்
இதனால் கட்சி அலுவலகம் கலவரமாக மாறியது. தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து அல முன்னணி நாளிதழ்களில் இரண்டு பக்கங்களுக்கு விளம்பரம் தரப்பட்டுள்ளது அதில் விசுவாசத்தின் விலாசம், நவீனகால பரதன் என்பதோடு ஜெயலலிதா ஓ.பன்னீர்செல்வம் குறித்து கூறிய உள்ளிட்ட பல விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் கட்சியிலும் ஆட்சியிலும் பன்னீர்செல்வத்தின் வரலாறு செயல்பாடுகள் நிதி அமைச்சராக அவர் செய்த திட்டங்கள் முதல்வராக இருந்தபோது அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்பன குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

பலன் கிடைக்குமா?
அதுமட்டுமல்லாமல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ பன்னீர்செல்வம் சந்தித்த சங்கடங்கள் அவருக்கு எதிராக நடந்த சூழ்ச்சிகள் என்பன குறித்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் இந்த புகைப்படங்கள் வேகமாக பரவி வருவதோடு அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் மூல காரணம் 'வாரிசு' ஒருவர் தான் என தகவல் வெளியாகி உள்ள நிலையில் அது எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications