நாங்க பனங்காட்டு நரி... மிசாவையே பார்த்திருக்கோம் ரெய்டுக்கு பயப்பட மாட்டோம் - ஸ்டாலின் அதிரடி
சென்னை: நாங்கள் பனங்காட்டு நரிகள் ரெய்டு போன்ற சலசலப்புக்கு எல்லாம் அஞ்சமாட்டோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். மிசாவையே பார்த்த நாங்கள் ரெய்டுக்கு பயப்பட மாட்டோம் என்று கூறியுள்ள ஸ்டாலின், தேர்தல் நேரத்தில் பயம் காட்டி திமுகவினரை முடக்கி வைக்க மத்திய அரசு திட்டமிடுவதாகவும் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிக்கட்ட பிரசாரத்தில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் பிரசார களம் ஒரு பக்கம் அனல் பறக்கும் சூழ்நிலையில் மற்றொரு பக்கம் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது.
இன்றைய தினம் சென்னை நீலாங்கரையில் உள்ள ஸ்டாலின் மகள் செந்தாமரை , மருமகன் சபரீசன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. அண்ணா நகர் திமுக வேட்பாளர் மகன் கார்த்திக் மோகனின் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர். கரூர் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

பிரசாரத்தில் ஸ்டாலின்
மிசா காலத்திலும் வருமான வரித்துறை சோதனை நடந்தது. எந்த சலனமும் இன்றி பணியாற்றினார் கருணாநிதி. தந்தை கருணாநிதியை விட இரும்பு நெஞ்சம் கொண்டவர் ஸ்டாலின். ஸ்டாலினை பயமுறுத்தி விடலாம் என நினைப்பது அப்பாவித்தனம் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேட்டியளித்திருந்தார். அதுபோல ரெய்டு பற்றிய தகவல் கிடைத்தும் தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பாக இருந்தார் மு.க ஸ்டாலின்.

ஜெயங்கொண்டம் பிரசாரம்
சென்னையில் வருமானவரி சோதனை நடைபெற்று வரும் நிலையில் ஜெயங்கொண்டத்தில் திமுக வேட்பாளர்கள், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். வாக்காளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசிய ஸ்டாலின் திமுகவினர் வீடுகளில் ரெய்டு நடத்தினால் பயப்படுவோம் என்று நினைக்கிறார்கள் நாங்கள் பயப்பட மாட்டோம் என்றார்.

அஞ்சமாட்டோம்
நான் மிசாவையே பார்த்தவன் இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம் என்றும் கூறினார் ஸ்டாலின். அதிமுகவை மிரட்டுவதைப் போல திமுகவை மிரட்ட முடியாது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

சலசலப்புக்கு அஞ்சமாட்டோம்
நாங்கள் பனங்காட்டு நரிகள் இந்த சலசலப்புக்கு எல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம் என்று கூறிய ஸ்டாலின் வருமான வரி சோதனை நடத்தி திமுகவினரை அச்சுறுத்தி வீட்டிற்குள் முடக்கி வைக்க நினைக்கின்றனர் அது ஒரு போதும் நடக்காது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.