சென்னை தினம்! எம்டன் கப்பல் பொழிந்த குண்டு மழை.. பின்னணியில் செம்பகராமன் பிள்ளை! சுவாரஸ்ய பின்னணி
சென்னை: அடுத்த வாரம் சென்னை தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், வரலாற்றில் சென்னை எதிர்கொண்ட முக்கிய விஷயம் குறித்து இப்போது பார்க்கலாம்.
Recommended Video
ஒவ்வொரு ஆண்டும் சென்னை தினம் ஆகஸ்ட் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நாட்டின் மிகப் பழைய நகரங்களில் ஒன்றான சென்னை பல்வேறு வரலாற்றுச் சிறப்பு அம்சங்களைக் கொண்டதாகும்.
இப்படிச் சிறப்பை கொண்ட சென்னை முதலாம் உலகப் போர் நடந்த போது, 1914ஆம் ஆண்டு பெரிய சிக்கல் ஒன்றை எதிர்கொண்டது. அது குறித்து வாருங்கள் பார்க்கலாம்!
Madras Day: மறக்கப்பட்ட தமிழ் நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியாரும் சென்னை சுகுண விலாச சபையும்

உலகப் போர்
இந்தியாவில் இருந்து முதலாம் உலகப் போர் தள்ளியே இருந்தது. முதலாம் உலகப் போர் சமயத்தில் இந்தியாவில் எந்தவொரு பகுதியிலும் தாக்குதல் நடத்தப்படவில்லை. சென்னை மட்டும் இதில் விதி விலக்கைப் பெற்று இருந்தது.. இப்போது நாம் மெட்ராஸ் தினமாகக் கொண்டாடும் ஆகஸ்ட் 22இல் இருந்து சரியாக ஒரு மாதம் கழித்து செப். 22 1914ஆம் ஆண்டில் இந்தத் தாக்குதல் அரங்கேறி இருந்தது.

சென்னை
ஜெர்மனி மற்றும் அதன் நட்பு நாடுகளான ஹங்கேரி, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளால் தாக்குதலை எதிர்கொண்ட ஒரே இந்திய நகரமாகச் சென்னை உள்ளது. ஜெர்மனிக்குச் சொந்தமான எம்டன் கப்பல் சென்னையில் தாக்குதல் நடத்தியது. செப்டம்பர் 22ஆம் தேதி இரவு, எம்டன் போர்க்கப்பல் வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடலில் உள்ள பிரிட்டிஷ் கடற்படை கண்ணில் மண்ணை தூவிவிட்டு, சென்னை கடற்கரைக்கு மிக அருகே வந்துவிட்டது.

130 குண்டுகள்
சென்னை மீது எம்டன் கப்பலின் குண்டு மழை பொழிந்ததில் சென்னை துறைமுகத்தில் பர்மா ஆயில் கம்பெனி சேமித்து வைத்திருந்த சுமார் 3,50,000 கேலன் எண்ணெய்யை அழிக்கப்பட்டது. எம்டன் கப்பல் சுமார் 130 குண்டுகளைச் சென்னை மீது போட்டது. அதில் இரண்டு பெரிய எரிபொருள் சேமிப்பு தொட்டிகள் அழிக்கப்பட்டன. இரு கப்பல்கள் முழுமையாக அழிக்கப்பட்ட நிலையில், இரு கப்பல்கள் மோசமாகச் சேதம் அடைந்தன.

நிறுத்திவிட்டனர்
இது தவிரத் தபால் அலுவலகம், துறைமுக டிரஸ்ட் மெட்ராஸ் செஸ்லிங் கிளப் எனத் துறைமுகத்தைச் சுற்றி இருந்த பல முக்கிய கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்தத் திடீர் தாக்குதலைச் சென்னையில் இருந்த பிரிட்டிஷ் படையினர் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் சுதாரிப்பதற்குள் அத்தனையும் நடந்து முடிந்துவிட்டன. ஜெர்மனி நினைத்து இருந்தால் சென்னை மீதான தாக்குதலைத் தொடர்ந்து இருக்க முடியும். இருப்பினும் என்ன காரணமோ தெரியவில்லை தாக்குதலை அவர்கள் தொடரவில்லை.

எம்டன்
இந்தத் தாக்குதல் நகரை ஒட்டுமொத்தமாக அழிக்கவில்லை என்றாலும் கூட நகரத்திற்குப் பெரிய வடுவை விட்டுச் சென்றது என்பதில் சந்தேகமில்லை. பிரிட்டிஷ் படையைத் தாண்டி வந்து தாக்குதல் நடத்திய எம்டன் கப்பலின் துணிச்சலைப் பலரும் பாராட்டவே செய்கின்றனர். இப்போதும் கூட சென்னையில் பெரும் துணிச்சல் கொண்டவர்கள் எம்டன் என்றே அழைக்கப்படுவார்கள்

செம்பகராமன் பிள்ளை
எம்டன் தாக்குதல் தொடர்பாக பல்வேறு தகவல்கள் உள்ளன. அதில் செம்பகராமன் பிள்ளை என்பவரே ஜெர்மனி உடன் இணைந்து எம்டன் தாக்குதலை முன்னெடுத்தார் என்பது முக்கியமானது. இது தொடர்பாக வரலாற்று ஆசிரியர்கள் கேள்வி எழுப்பினாலும் கூட, எம்டன் கப்பலில் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் இருந்தது உறுதியாகவே கூறப்படுகிறது.

நேதாஜி போல
இரண்டாம் உலக போர் சமயத்தில் சுபாஷ் சந்திர போஸ் எப்படி வெளிநாடுகளுக்குச் சென்று இந்தியாவை ஆண்ட பிரிட்டஷார் மீது தாக்குதல் நடத்த முயன்றாரோ, அதேபோன்ற ஒரு முன்னெடுப்பு தான் இதிலும் நடந்துள்ளது. இன்னும் சில வரலாற்று ஆய்வாளர்கள் நேதாஜியின் இந்தியன் நேஷனல் ஆர்மியில் கூட செம்பகராமன் பிள்ளைக்குப் பங்கு இருக்கும் என கூறுகின்றனர்.

நினைவிடம்
செம்பகராமன் பிள்ளை பங்களிப்பைப் போற்றும் வகையில் கடந்த 2008இல் காந்தி மண்டபத்தில் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியால் சென்னை குண்டுவெடிப்புக்கு உதவிய செம்பகராமனின் நினைவிடம் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.