மதுரை கலெக்டர் - திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம்.. யாருக்கு பவர்? வரும் ஜனவரியில் என்ன நடக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரை திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தின் பரபரப்பு இன்னும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.. இந்த பரபரப்பு இந்த ஆண்டுடன் முடிந்துவிடுமா? அடுத்த கார்த்திகை தீபத்தின்போதும் இதே பிரச்சனை வருமா? இந்த வருடம் மட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், அடுத்த ஆண்டுக்கான நிலை என்ன என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இங்கே சுருக்கமாக ஆராய்வோம்..!!

ஒருபக்கம் நீதிமன்றத்தில் தொடரும் வழக்கு, இன்னொரு பக்கம் கோயில் நிர்வாகத்தின் நிலைப்பாடு. இதற்கிடையே சட்டப்பேரவையில் மெஜாரிட்டி தொடர்பான ஆதரவு கணக்குகளையும் கவனிக்க வேண்டிய நிலையில் விஜய் தலைமையிலான தவெக அரசு இருக்கிறது. அப்படியானால், அடுத்த ஆண்டு இந்த விவகாரத்தை அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது?

Thiruparankundram Deepam Row

திருப்பரங்குன்றம் - ஒரு நாள் அனுமதி

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்சினை கடந்த ஆண்டே கோர்ட் வரை சென்றது. அப்போது சென்னை ஹைகோர்ட், தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டுக்கு போனது.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கடந்த நவம்பர் 20-ம் தேதி இந்த ஆண்டு நவம்பர் 24-ம் தேதி மட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்தது.

ஆனால், இந்த அனுமதியை வைத்து அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தீபம் ஏற்றுவதற்கான நிரந்தர உரிமையை யாரும் கோர முடியாது என்றும் தெளிவுபடுத்தியிருந்தது.. அதாவது, இந்த வருடம் மட்டுமே ஏற்பாட்டை செய்ய கோர்ட் அனுமதி அளித்ததே தவிர, அந்த இடத்தின் உரிமை அல்லது வழிபாட்டு உரிமை தொடர்பான இறுதி முடிவை எடுக்கவில்லை.

நிர்வாக சிக்கல்

ஆனால், நீதிமன்றம் அனுமதி அளித்தும் நேற்று நவம்பர் 24-ம் தேதி தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது. இதுதொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். தேவஸ்தானம் அங்கீகரித்த குழுவினர் வராததால் தீபத்தூணில் தீபம் ஏற்ற முடியவில்லை என்பது அவரது விளக்கம்.

இங்கேதான் நமக்கு ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பிக்கிறது, ஆனால் அதைச் செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கிறது. ஆனால், கோயில் நிர்வாகத்தின் ஒத்துழைப்பும் அவசியம் தேவைப்படுகிறது.

அப்படியானால், கோயில் நிர்வாகத்தின் அதிகாரம் எது? மாவட்ட ஆட்சியரின் அதிகாரம் எது? நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துவதில் கோயில் நிர்வாகம் ஒத்துழைக்காதபோது அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்க முடியும்? இந்தக் கேள்விகளுக்கான தெளிவான விடை கிடைப்பது அவசியம்.

அறங்காவலர் பங்கு

இந்த விவகாரத்தில் கோயில் அறங்காவலர் குழுவின் முடிவும் முக்கியமானதாக இருக்கிறது... கோயிலில் எந்த இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும், எந்த முறையில் வழிபாடுகள் நடத்தப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் கோயில் நிர்வாகத்துக்கு என்னென்ன அதிகாரங்கள் உள்ளன என்பதும் விசாரணைக்கு உட்பட்ட கேள்வியாக இருக்கிறது. அதேசமயம், கோயில் நிர்வாகத்தின் முடிவு என்பதற்காக கோர்ட் உத்தரவை செயல்படுத்தாமல் இருக்க முடியுமா என்ற கேள்வியும் இங்கே எழுகிறது.

கோயில் மரபுகள், வழிபாட்டு உரிமைகள், நிர்வாக அதிகாரம் போன்றவற்றுக்கு இடையேயுள்ள வேறுபாடுகளை கோர்ட் தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது. இதற்கான முடிவு கிடைத்தால்தான் அடுத்தடுத்த ஆண்டுகளில் இதேபோன்ற சிக்கல்கள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

வரும் ஜனவரி விசாரணை

இந்த வழக்கில் அடுத்த முக்கியமான கட்டம் 2027 ஜனவரி 2வது வாரத்தில் வர இருக்கிறது. உச்ச நீதிமன்றம் அப்போது இந்த வழக்கை விரிவாக விசாரிக்க உள்ளது... தீபத்தூண் உண்மையில் என்ன தன்மை கொண்ட இடம்? அந்த இடத்தின் உரிமை யாருக்கு உள்ளது? அங்கு தீபம் ஏற்றுவது தொடர்பான பழைய வழக்கங்கள் என்ன? கோயில் நிர்வாகத்தின் அதிகார வரம்பு என்ன? மத வழிபாட்டு உரிமையில் நீதிமன்றம் எந்த அளவுக்கு தலையிட முடியும்? இப்படி பல கேள்விகளுக்கு இந்த விசாரணையில் விடை தேடப்பட உள்ளது.

முக்கியமாக, தனிநபர்களின் வழிபாட்டு உரிமைக்கும் கோயில் நிர்வாகத்தின் உரிமைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள், அரசியலமைப்பின் 25 மற்றும் 26-வது பிரிவுகளின் கீழ் உள்ள மத உரிமைகள் போன்றவையும் முக்கியமான விவாதங்களாக இருக்கலாம்.

விஜய்யின் தவெக அரசு

ஆனால், ஜனவரி மாத விசாரணையிலேயே எல்லா பிரச்சனைகளுக்கும் இறுதித் தீர்வு கிடைத்துவிடும் என்று நம்மால் உறுதியாக சொல்ல முடியாது. இந்த விவகாரத்தில் மிகவும் முக்கியமானது அடுத்த ஆண்டு மீண்டும் இதே பிரச்சினை ஏற்படாமல் இருப்பதுதான்.

ஒவ்வொரு கார்த்திகை தீபத்தின்போதும் கோர்ட்டை நாட வேண்டுமா? தீபம் ஏற்றும் இடம் தொடர்பான உரிமை, கோயில் நிர்வாகத்தின் அதிகாரம், மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பு ஆகியவை தெளிவுபடுத்தப்பட வேண்டாமா? என்ற கேள்விகளுக்கெல்லாம் நிரந்தரமான சட்டத் தீர்வு கிடைக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த ஆண்டு ஒரு நாள் அனுமதி, அடுத்த வருடம் மறுபடியும் வழக்கு, அதன்பிறகு மறுபடியும் அதே விவாதம் என்று பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கலாம்.

விஜய் அரசுக்கு சவால்

இதில், தற்போதைய தமிழக அரசின் அரசியல் நிலையும் கவனிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது... காரணம், விஜய் தலைமையிலான தவெக அரசு சட்டப்பேரவையில் மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சி நடத்தவில்லை. கூட்டணி கட்சிகளின் ஆதரவு, சட்டப்பேரவையில் பெரும்பான்மை தொடர்பான கணக்குகள் என அரசியல் ரீதியாகவும் ஏகப்பட்ட சவால்களை சந்தித்து வருகிறது.

அப்படியிருக்கும்போது, திருப்பரங்குன்றம் போன்ற மத உணர்வுகள் தொடர்பான விவகாரத்தை அரசு கையாள்வது லேசுபட்ட விஷயம் கிடையாது..

நிரந்தர தீர்வு கிடைக்குமா

ஒருபக்கம் கோர்ட் உத்தரவை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு, இன்னொரு பக்கம் கோயில் நிர்வாகத்தின் நிலைப்பாடு. அதேசமயம் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய கடமை... இப்படி மொத்தத்தையும் சமாளிக்க வேண்டிய நிலையில் விஜய் அரசு இருக்கிறது.

ஒருவேளை, இந்த ஆண்டு ஏற்பட்ட பிரச்சனை அடுத்த வருடமும் தொடர்ந்தால், அப்போது அரசுக்கு மேலும் சிக்கல் ஏற்படலாம். இந்த ஆண்டு தீபம் ஏற்றுவதில் ஏற்பட்ட பிரச்சனை அடுத்த ஆண்டும் தொடருமா? அல்லது நீதிமன்றத்தின் விசாரணை மூலம் நிரந்தரத் தீர்வு கிடைக்குமா? இப்போதைக்கு திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நாம் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் விடை இது மட்டும்தான்.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+