பாஜகவில் "சின்னம்மா".. அழுத்தம் திருத்தமாக சொன்ன நயினார் நாகேந்திரன்! கட்சி கருத்து அல்ல என விளக்கம்
சென்னை: சசிகலா பாஜகவில் இணைந்தால் வலுவாக இருக்கும் என சொன்னது எனது சொந்த கருத்து, அது கட்சியின் கருத்து அல்ல என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொண்டால் அக்கட்சி வளரும். அதிமுகவில் சசிகலாவை சேர்த்துக் கொள்ளவில்லை என்றால் பாஜகவில் இணையுமாறு நாங்கள் அவரை வரவேற்போம்.
சசிகலா வந்தால் பாஜக வலுப்பெறும். கட்சிக்கு மேலும் உறுதுணையாக இருக்கும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

வளர்ச்சி
இந்த நிலையில் அதிமுக தமிழகத்தில் வளர்ச்சி அடையவில்லை என அதிமுக நிர்வாகி பொன்னையன் தெரிவித்திருந்தார். சசிகலா குறித்து நயினார் கூறிய கருத்து தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் நயினார் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து.

கட்சியில் சேருவது
இன்னார் கட்சியில் சேர வேண்டுமானால் அதை டெல்லி தலைமைதான் முடிவு செய்யும் என தெரிவித்திருந்தார். அதுபோல் பொன்னையன் பாஜகவின் வளர்ச்சி குறித்து கூறிய கருத்து அவருடைய சொந்த கருத்து என்றார். ஏற்கெனவே அதிமுக எம்எல்ஏக்களின் செயல்பாடுகளை மிகவும் மோசமாக விமர்சித்தவர் நயினார்.

அதிமுகவின் சொந்த விஷயம்
இந்த நிலையில் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதும் சேர்க்காமல் இருப்பதும் அதிமுகவின் சொந்த விஷயம் என இருக்கும் நிலையில் மாற்று கட்சியை சேர்ந்த நயினார் கருத்து கூறியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்றைய தினம் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

பொன்னையன் கருத்து
அப்போது அவரிடம் பாஜக குறித்து பொன்னையன் கூறிய கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பழுத்த மரம்தானே கல்லடிப்படும். தமிழகத்தில் பாஜக மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் கட்சியாக இருக்கிறது. எனவே பாஜகவை மற்ற கட்சிகள் விமர்சனம் செய்வது எதிர்பார்த்த ஒன்று. அது போல் சசிகலா அதிமுகவில் சேர்ந்தால் வலுப்பெறுமா என்று செய்தியாளர்கள் கேட்டார்கள்.

சசிகலா பாஜகவிற்கு வந்தால் எப்படி இருக்கும்
அதற்கு நான் உண்மையில் அவர் வந்தால் வலுவாக இருக்கும் என்றேன். அடுத்தபடியாக அவர்கள் என்ன கேட்டார்கள் என்றால் சசிகலாவை பாஜகவில் எதிர்பார்க்கிறீர்களா என கேட்டார்கள், அதற்கு நான் வரவேற்கிறேன் என்றேன். உடனே சசிகலா பாஜகவிற்கு வந்தால் எப்படி இருக்கும் என கேட்டார்கள். அதற்கு நான் சசிகலா வந்தால் பாஜகவிற்கு நிச்சயம் மெருகூட்டும் விதமாகவே இருக்கும் என்றேன். இது முழுக்க முழுக்க என்னுடைய கருத்து, கட்சியின் கருத்து அல்ல என்றார். மேலும் அவர் தனது பேட்டியில் சின்னம்மா என்றே அழைத்தார். நயினார் நாகேந்திரன் அதிமுகவிலிருந்து பாஜகவில் ஐக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications