தமிழ்நாட்டில் அடிக்கடி கரண்ட் கட்.. அணில் காரணம் இல்லையாம்.. ஆவேசமான நத்தம் விஸ்வநாதன்!
சென்னை: தமிழகத்தில் மின் வெட்டுக்கு காரணம் மின் துறை அமைச்சரின், மின் துறை பற்றி புரிதல் இல்லாததுதான் என்றும், திமுகவையும் மின்சார வெட்டையும் பிரிக்கமுடியாது என்றும் முன்னாள் மின் துறை அமைச்சரும், அதிமுக சீனியர் தலைவருமான, நத்தம் விசுவநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நத்தம் விஸ்வநாதன்.
இதையடுத்து, இன்று நத்தம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அவர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்காக, நூற்றுக்கணக்கான அதிமுகவினர் குவிந்தனர்.

புரிதலே இல்லை
அப்போது பத்திரிக்கையாளார்களுக்கு பேட்டி அளித்த நத்தம் விஸ்வநாதன், தமிழகத்தில் தற்பொழுது நிலவி வரும் மின் வெட்டுக்கு காரணம் அத்துறையைப் பற்றி முழுமையாக புரிதல் இல்லாததுதான் என்றார். அவற்றை தீர்க்க முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். திமுக ஆட்சி வந்தவுடன் தமிழகத்தில் மின்வெட்டும் வந்துவிடும்.

பிரிக்க முடியாதது பவர் கட்
திருவிளையாடல் படத்தில் நாகேஷ் கூறுவதுபோல்.. பிரிக்க முடியாதது எது என்ற கேள்வி கேட்கப்பட்டால், அதற்கு விடை.. திமுகவும் மின்வெட்டும் தான். அவற்றை பிரிக்க முடியாது. திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் தொடர்ந்து மின்வெட்டும் வந்துவிடும். இது ஒரு ராசிபோல தமிழகத்தில் உள்ளது.

நாலு நாள் வேலைதான்
மின்வெட்டுக்கு காரணம் பராமரிப்பு பணிகள்தான் என்றால், அதை நான்கு நாட்களில் சரி செய்துவிடலாம். ஆனால் இப்போது திமுக ஆட்சி சரியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை. முன்பு, திமுக ஆட்சியில் மின்வெட்டு இருந்தது போல இப்போதும், ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மின்வெட்டுக்கு இன்றைய ஆட்சியில் உள்ளவர்கள், அற்ப சொற்ப காரணங்களை கூறி தப்பிக்கப் பார்க்கிறார்கள்.
Recommended Video

திமுக கலாச்சாரம்
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சட்ட ஒழுங்கு கெட்டு விடுவது வாடிக்கையானது. அதேபோல் திமுகவும் மின் வெட்டும் இணைந்தது.
திமுகவிற்கு என ஒரு கலாச்சாரம் உள்ளது. சட்டசபை தேர்தலில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக யுக்தி வகுத்திருந்தால் திமுக இப்போதும் ஜெயித்திருக்க முடியாது.

திமுகவை விரும்பி ஏற்கவில்லை
அதிமுகவை மக்கள் வெறுத்து ஒதுக்கவும் இல்லை, திமுகவை விரும்பி ஏற்றுக் கொள்ளவும் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்தது ஒரு விபத்துதான். தேர்தல் நேரத்தில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை திமுகவினர் அள்ளி எறிந்தனர். ஆனால் தமிழகத்தில் சில கோரிக்கைகள் நிறைவேற்றி இருப்பதாகவும் முக்கியமான கோரிக்கையான பெண்களுக்கு நிதி உதவி, அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டம் ஆகியவை கவர்னர் உரையில் இடம் பெறவில்லை என்றும் குற்றம்சாட்டினார் நத்தம் விஸ்வநாதன்.

வாக்குறுதிகள் என்னவானது?
மேலும், கூட்டுறவு துறையில் 5 பவுன் நகை தள்ளுபடி மற்றும் நீட் தேர்வு ரத்து பற்றியும் எவ்வித அறிவிப்பும் இல்லை. நீட் தேர்வு விஷயத்தில் மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்களின் வருங்கால வாழ்க்கையை சூனியமாக்கும் ஆபத்தான போக்கை அரசு கையாளுகிறது என்று குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications