என் சாவுக்கு காரணம் மாமியாரும் புருஷனும்தான்...தற்கொலைக்கு முன் வீடியோ பதிவிட்ட ஜோதி - மூவர் கைது
என் சாவுக்குக் காரணம் மாமியாரும், கணவரும்தான் என்ற புதுமணப்பெண் ஒருவர் தனது தற்கொலைக்கு முன்பாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். பெண்ணை தற்கொலைக்குத் தூண்டியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளன.
சென்னை: புது மணப்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர், மாமியார் உள்பட 3 பேரை திருமுல்லைவாயல் போலீசார் கைது செய்தனர். தற்கொலைக்கு முன்பு அந்த பெண் பதிவு செய்த வீடியோ காட்சியை அடிப்படையாக வைத்து கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரளாவில் விஸ்மயாவின் மரணம் உலுக்கிய நிலையில் அடுத்தடுத்து இளம்பெண்கள் வரதட்சணை கொடுமையால்
மரணமடைவது அதிர்ச்சியை அளித்து வருகிறது. தமிழ்நாட்டில் வரதட்சணை கொடுமை மரணங்கள் குறித்து பல நாட்கள் செய்திகள் வெளியாகாமல் இருந்த நிலையில் புதுமணப்பெண் ஒருவரின் மரணம் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.
கணவர், மாமியாரின் கொடுமையால் திருமணமான நான்கே மாதங்களில் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த பெண்ணின் பெயர் ஜோதிஸ்ரீ என்பதாகும்.

ஜோதிஸ்ரீயின் திருமணம்
சென்னை, கே.கே நகர், எம்ஜிஆர் நகர், தந்தை பெரியார் தெருவில் வசித்து வந்த ஜோதிஸ்ரீ பி.காம் பட்டதாரி. இவருக்கும் ஆவடி அருகே திருமுல்லைவாயல், அன்னை சத்யா நகரைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

சிதைந்த கனவு
பாலமுருகன் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். திருமணத்திற்கு பிறகு பல கனவுகளுடன் புகுந்த வீட்டில் அடியெடுத்து வைத்த ஜோதிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பாலமுருகன் அவரது தாயார் அம்சாவும் சேர்ந்து,ஜோதியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.

பெற்றவர்களிடம் பணம் வாங்கி வா
"வீடு கட்ட கடன் வாங்கி உள்ளோம். எனவே, எங்களுக்கு பணம் தேவைப்படுகிறது. உனது பெற்றோரிடம் சென்று பணம் வாங்கி கொடு" என கூறி கொடுமைப்படுத்தி உள்ளனர். இதனையடுத்து கடந்த டிசம்பர் மாதம் இறுதியில், ஜோதிஸ்ரீ பாலமுருகனை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

வீட்டிற்குள் விடாத மாமியார்
உறவினர்கள் சமாதானம் செய்து வைத்ததை அடுத்து கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி ஜோதிஸ்ரீ திருமுல்லைவாயலில் உள்ள கணவர் பாலமுருகன் வீட்டுக்கு மீண்டும் வந்தார். அப்போது மாமியார் அம்சா அவரை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை என தெரிகிறது. இதனையடுத்து ஜோதிஸ்ரீ வீட்டின் முதல் மாடிக்கு சென்றார். இதனால் ஆத்திரமடைந்த அம்சா அறைக்கு செல்லும் மின் வயரை துண்டித்தார்.

தூக்குப் போட்டு தற்கொலை
இதனால் மனமுடைந்த ஜோதிஸ்ரீ வீட்டிற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜோதியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆவடி போலீஸ் உதவி ஆணையர் சத்தியமூர்த்தி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஜோதிஸ்ரீ செல்போனில் ஒரு வீடியோ பதிவிட்டு இருந்தார். மரணத்திற்கு முன்பாக அவர் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்திருந்தார்.

வீடியோ பதிவு
என்னை மன நோயாளி என்று சொல்கின்றனர். நான் மன நோயாளியா என்று வாட்ஸ் அப்பில் பதிவிட்டுள்ளார் ஜோதி.
எனது சாவுக்கு கணவர் பாலமுருகனும், மாமியார் அம்சா மற்றும் குடும்பத்தினர் தான் காரணம் என கூறியிருந்தார். அதேபோல் தமது தற்கொலைக்கு காரணமான தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை சும்மா விட வேண்டாம் எனவும் தமது குடும்பத்தினருக்கு உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

விசாரணையில் அம்பலம்
திருமணமாகி சில மாதங்களில் ஜோதிஸ்ரீ தற்கொலை செய்து கொண்டதால் அவரது மரணம் குறித்து திருவள்ளூர் ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொண்டார். ஜோதிஸ்ரீயின் தற்கொலைக்கு அவரது கணவர் பாலமுருகன்,29, மாமியார் அம்சா,65, பாலமுருகன் அண்ணன் சத்யராஜ்,35 ஆகியோர்தான் காரணம் என தெரியவந்தது.

3 பேர் கைது
ஆர்டிஓ உத்தரவுவின் பேரில் திருமுல்லைவாயல் போலீசார் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருமணமான நான்கே மாதத்தில் இளம் பெண்ணை வரதட்சணை கேட்டு கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டிய சம்பவம் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. கேரளாவில் இளம் பெண்கள் வரதட்சணை கொடுமையால் மரணமடைவது அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் வரதட்சணை கொடுமையை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications