எங்க போவாரு? இங்க தான் வரணும்.. திடீர் மீட்டிங்! எடப்பாடிக்கு ‘சிரிப்பு’ ரியாக்ஷன் காட்டிய ஓபிஎஸ்!
சென்னை : எடப்பாடி பழனிசாமியின் சமீபத்திய நகர்வுகள் பற்றி ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, பாஜக ஈபிஎஸ்ஸை வழிக்குக் கொண்டு வந்துவிடும் என ஓபிஎஸ் நம்பிக்கையோடு பேசியதாகக் கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி, விரைவில் உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வரும் நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டவிருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் நியமனம் என அதிரடி காட்டி வரும் ஓபிஎஸ், புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் விரைவில் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும் வாரம் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர் தனித்தனியாக ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிமுக யாருக்கு
அதிமுகவில் தொடர்ந்து நீடித்து வரும் உட்கட்சி மோதலுக்கு இடையே எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் ஈபிஎஸ்ஸால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதேசமயம் ஓ.பன்னீர்செல்வம் நான் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று கூறி தொடர்ச்சியாக அதிமுக நிர்வாகிகளை நியமித்து வருகிறார். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் இறுதி முடிவைப் பொறுத்தே அதிமுகவின் தலைமை அதிகாரம் யாருக்கு என்பது தெரியவரும்.

விலகவும் ரெடி
இதற்கிடையே, பாஜக மேலிடம், ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என இருவருக்கும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இதனை ஏற்க மறுத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. இதையொட்டி, ஈபிஎஸ், பாஜகவின் விருப்பங்களுக்கு எதிராகப் பேசியும் வருகிறார். பாஜக தனது நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் கூட்டணியை விட்டு விலகவும் எடப்பாடி பழனிசாமி தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் ஆணையத்தில் ஈபிஎஸ்
இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வரும் வாரத்தில் நடைபெற இருக்கும் நிலையில், அதன் போக்கைப் பொறுத்து, உயர்மட்ட குழுவை கூட்டுவதற்கு முடிவு செய்துள்ளாராம் எடப்பாடி பழனிசாமி. இந்தக் கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் பதவியை தொடர்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க உள்ளதாக கூறப்படுகிறது. வழக்கு விசாரணை முடிவடைவதற்குள் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த முடியாமல் இருப்பதால் இடைக்கால பொதுச் செயலாளர் பதவியை நீட்டிப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுத உள்ளாராம் ஈபிஎஸ்.

ஓபிஎஸ் ஆலோசனை
எடப்பாடி பழனிசாமி, பாஜக கருத்தைப் புறந்தள்ளி, அதிமுகவில் தனிப்பெரும் தலைமையாக உருவெடுப்பதற்கான தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது வீட்டில் இன்று முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் ஓ.பன்னீர்செல்வம். பின்னர் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த தனது ஆதரவாளர்களைச் சந்தித்தார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.

நம் அருகில் தான்
எடப்பாடி பழனிசாமி, பாஜகவை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்வது போல பேசி வருவது பற்றியும் இன்றைய ஆலோசனையின்போது ஓபிஎஸ் தரப்பு விவாதித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, எடப்பாடி பழனிசாமி, எவ்வளவுக்கு எவ்வளவு பாஜகவுக்கு எதிராகத் திரும்புகிறாரோ, அவ்வளவுக்கு அவ்வளவு நமக்கு சாதகம் தான், பாஜக நமக்கு ஆதரவாகவே இருக்கும், எந்தப் பக்கம் போனாலும், எடப்பாடி பழனிசாமி, நமக்கு அருகில் தான் கடைசியில் நிற்க வேண்டி இருக்கும் என்று ஓபிஎஸ் பேசியதாகக் கூறப்படுகிறது.

வழிக்கு வந்துடுவாரு
மேலும், பாஜக தலைமை தேர்தலை மனதில் வைத்து செயல்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தங்களுக்கு ஒத்துவரவில்லை என்றால் என்ன செய்யவேண்டும் என்பது டெல்லிக்கு தெரியும். 2 நாளுக்கு முன்னாடி பேசிய பேச்சுக்கே டெல்லியில் இருந்து குட்டு விழுந்திருக்கும். பாஜக நினைக்கும் கூட்டணிக்கு எடப்பாடி ஒத்துவரவில்லை என்றால், மொத்தமாக காலி செய்துவிடுவார்கள். பாஜக அவ்வளவு சீரியஸாக இந்த தேர்தலை அணுகுகிறது. எடப்பாடியை வழிக்குக் கொண்டு வந்து விடுவார்கள் என்று ஆதரவாளர்களிடம் ஓபிஎஸ் சிரித்தபடி கூறியதாக ஓபிஎஸ் தரப்பில் கூறப்படுகிறது.

பொதுக்குழு கூட்டம்
ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் ஓபிஎஸ். அப்போது பேசிய ஓபிஎஸ், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளையும் சேர்த்து அனைத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் விரைவில் நடைபெறும். அதன்பிறகு அதிமுக பொதுக்குழு கூட்டத்தையும் உறுதியாக கூட்டுவோம், அனைத்து நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்ட பிறகு அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார். இன்று தூத்துக்குடி மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து 3 மாவட்ட செயலாளர்களை ஓபிஎஸ் நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓபிஎஸ் - தினகரன்
அதிமுக கூட்டணியில் இணைய தினகரன் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அதிமுக கூட்டணியில் அமமுகவை சேர்த்துக்கொள்ள 1% கூட வாய்ப்பு இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறினார். இதனால் அவர்கள் இருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. அதேசமயம், ஓபிஎஸ்ஸை வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருந்தார். அது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், அதுபற்றி நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன், வாய்ப்பு அமைந்தால் சந்திப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

பன்னீர்- அமித்ஷா
மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சென்னையில் சந்தித்தபோது அரசியல் தொடர்பாக பேசினீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ், பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று வழியனுப்பி வைத்தோம். அதேபோல் தனியார் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தோம். தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அமித்ஷாவை சந்தித்தால் அவருடன் அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை எனப் பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications