அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டே ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்! அமைச்சர் ரகுபதி புது விளக்கம்!
சென்னை: அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டே ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.
விளையாட்டுகள் முழுமையாக தடை செய்யப்படவில்லை என்றும் Game of Chance and Skill என்று வித்தியாசப்படுத்தி, ஆன்லைன் சூதாட்டங்கள் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அளித்துள்ள விளக்கத்தின் விவரம் வருமாறு;

அரசியலமைப்புச் சட்டம்
இந்த சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின் கூறுகளுக்கு உட்பட்டுதான் இருக்கிறதா என்பதை பொறுத்தவரை, அரசியலமைச் சட்டத்தின் 7-வது அட்டவணையில் உள்ள பட்டியல் 2-ல் உள்ள பின்வரும் உள்ளீடுகளை கருத்தில் கொண்டே இந்த சட்டம் உருவாக்கப்பட்டது.
34. Betting and Gambling
1. Public Order
6. Public Health
33. Theaters and dramatic performances. இவை அனைத்தும் மாநிலப் பட்டியலில் (Seventh Schedule List II- State List - Entries 34, 1, 6, 33) உள்ளது என்பதை குறிப்பிட்டு அதனடிப்படையில் தான் இந்த சட்ட முன்வடிவு உருவாக்கப்பட்டது என்பதால், இந்த சட்டம் எந்த வகையிலும் அரசியலமைப்பின் கூறுகளுக்கு எதிராக இல்லை. அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டே இந்த இணைய வெளி சூதாட்ட தடை சட்ட முன்வடிவு அமைந்துள்ளது.

ஆன்லைன் விளையாட்டு
ஆன்லைன் மற்றும் ஆப்லைன் விளையாட்டுகளை வித்தியாசப்படுத்தவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டதை கருத்தில் கொண்டுதான் தற்போதைய அவசர சட்டத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை மட்டும் தடைசெய்வதற்கான சட்ட முன்வடிவு உருவாக்கப்பட்டுள்ளது. முகப்புரையில் (Preamble) இது குறித்து தெளிவாகக் குறிப்பிட்டுதான், இந்த அவசர சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது, என்பது நினைவு கூறத்தக்கது.

பணத்தை சுரண்டும் வாய்ப்பு
நேரில் (ஆப்லைனில்) விளையாடும்போது யாருடன் மற்றும் எவ்வாறு விளையாடுகிறோம் என்பது தெரிந்து விளையாட வாய்ப்புள்ளது. ஆனால், ஆன்லைனில் (இணைய வெளியில்) விளையாடும்போது, அந்த விளையாட்டை உருவாக்கியவர் எழுதும் செயல்திட்டத்தின் (Programme) அடிப்படையில் விளையாடப்படுவதால், ஏமாற்றும் மற்றும் பணத்தை சுரண்டும் வாய்ப்புகள் உள்ளது என்பதன் அடிப்படையிலேயே ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய சட்டம் இயற்றப்பட்டது.

ஆன்லைன் சூதாட்டங்கள்
எனவே, சூதாட்டம் என்கின்ற அடிப்படையில் இது அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்குறிப்பிடப்பட்டுள்ள கூறு 34-க்கு உட்பட்டுதான் இந்த சட்ட முன்வடிவு அமைந்துள்ளது. Doctrine of proportionality - No complete ban. விளையாட்டுகள் முழுமையாக தடை செய்யப்படவில்லை. Game of Chance and Skill என்று வித்தியாசப்படுத்தி, ஆன்லைன் சூதாட்டங்கள் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, இது தேவையான அளவில் மட்டுமேயான (proportional) தடைதான் ஆகும்.












Click it and Unblock the Notifications