சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராஜிவ் கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலை எப்போது? 50 நாட்களாகியும் ஆளுநர் முடிவெடுக்காதது ஏன்?

Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் காலதாமதம் செய்து வருவது ஏன் என்பது குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

1991ம் ஆண்டு மே 21ம் தேதி தேர்தல் பிரசாரத்துக்காக, சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூருக்கு அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி வருகை தந்தபோது, மனித வெடிகுண்டு தாக்குதலால் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில், அதே ஆண்டு ஜூன் 11ம் தேதி பேரறிவாளனும், ஜூன் 14ம் தேதி நளினியும், அவரது கணவர் ஸ்ரீகரன் என்ற முருகனும், ஜூலை 22ம் தேதி சுரேந்திர ராஜா என்ற சாந்தனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

வழக்கு கடந்து வந்த பாதை

வழக்கு கடந்து வந்த பாதை

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் 1998ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி, வழக்கிலல் தொடர்புள்ள 26 பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. தீர்ப்பை எதிர்த்து அனைவரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 1999ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி இதில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய 4 பேரின் தூக்குத் தண்டனை மட்டும் உறுதி செய்யப்படுத்தப்பட்டதோடு, பிற, 19 பேரும் தண்டனை காலத்தை முடித்து விட்டதாக கூறி விடுதலை செய்யப்பட்டனர். ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

ஆளுநர் தள்ளுபடி

ஆளுநர் தள்ளுபடி

1999ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி, இந்தநிலையில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய 4 பேரும் ஆளுநருக்கு கருணை மனுக்களை அனுப்பினர். ஆளுநராக இருந்த பாத்திமா பீவி இந்த கருணை மனுக்களை தள்ளுபடி செய்தார். ஆளுநர் முடிவை எதிர்த்து 4 பேரும் ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில், அவ்வாண்டு நவம்பர் 25ம் தேதி ஆளுநரின் உத்தரவை ரத்து செய்த ஹைகோர்ட்டு அமைச்சரவை முடிவின் மீதே ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியது.

ஆயுள் தண்டனையாக குறைப்பு

ஆயுள் தண்டனையாக குறைப்பு

2000ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், நளினியின் தூக்குத் தண்டனை மட்டும் ஆயுள் தண்டனையாக குறைக்க ஆளுநருக்கு பரிந்துரைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, ஏப்ரல் 24ம் தேதி வெளியிடப்பட்ட தமிழக அரசாணையில், நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 26ம் தேதி பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் ஜனாதிபதிக்கு கருணை மனுக்களை அனுப்பினர். 2000ல் குடியரசு தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணனும், 2007ம் ஆண்டு குடியரசு தலைவராக இருந்த அப்துல் கலாமும் இந்த கருணை மனுக்களை நிலுவையிலேயே வைத்தனர். இதனிடையே 2011ல் குடியரசு தலைவராக இருந்த பிரதீபா பாட்டீல் ஆகஸ்டு 12ல் அந்த கருணை மனுக்களை தள்ளுபடி செய்தார்.

மரண தண்டனை ரத்து

மரண தண்டனை ரத்து

இதன்பிறகு, 2014ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம் தலைமையிலான 3 பேர் அமர்வு, பல ஆண்டு காலம் 3 பேரின் கருணை மனுக்களும் எந்தக் காரணமுமின்றி நிலுவையில் இருந்ததால் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்வதாக தீர்ப்பளித்தது. பிப்ரவரி 19ம் தேதி தமிழக அமைச்சரவை எடுத்த தீர்மானத்தின்படி, ராஜீவ்காந்தி கொலையில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுவதாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

சிபிஐ வழக்கு

சிபிஐ வழக்கு

தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்த மத்திய அரசு, சிபிஐ விசாரித்த வழக்குகளில், மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல், குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் சென்று, 7 பேரையும் 3 நாட்களுக்குள் விடுவிப்பதை தடுத்து நிறுத்தியதோடு, தடையாணை பெற்றது. இந்த வழக்கில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் அதிகாரம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் வருவதால், 2014ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி, இந்த வழக்கு விசாரணை நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையிலான 5 பேர் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது. 2015 டிசம்பர் 2ம் தேதி தீர்ப்பளித்த 5 பேர் அமர்வு, சிபிஐ விசாரித்த வழக்கின் குற்றவாளிகளை மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் விடுவிக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கியது.

தமிழக அமைச்சரவை

தமிழக அமைச்சரவை

அதேநேரம், தமிழக அரசு 161வது சட்டப் பிரிவின் கீழ் விடுதலை செய்தால் மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை என்று கூறியது. 2016, மார்ச் 2ம் தேதி, 7 பேரையும் விடுவிக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியது. இந்த ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி, 7 பேரையும் விடுவிப்பது குறித்து அரசியல் சாசனத்தின் 161வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என ரஞ்சன் கோகய் தலைமையிலான சுப்ரீம் கோர்ட்டு 3 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 9ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடிய தமிழக அமைச்சரவை கூட்டத்தில், 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தர்மபுரி பஸ்

தர்மபுரி பஸ்

ஆனால், சுமார் 50 நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும், இந்த விவகாரத்தில் ஆளுநர் முடிவை அறிவிக்காமல் உள்ளதால், 7 தமிழர்கள் விடுதலை குறித்து வினாக்கள் எழுந்தன. ஜெயலலிதாவிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டபோது, தருமபுரியில் கல்லூரி பஸ்சை எரித்து மாணவிகளை கொலை செய்த அதிமுக கட்சியை சேர்ந்த 3 பேரை விடுதலை செய்வது குறித்து மாநில அரசு ஆளுநருக்கு பரிந்துரைத்திருந்தது. அதோடு சேர்த்துதான், ராஜீவ்காந்தி கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்வது குறித்தும் பரிந்துரை சென்றது. ஆனால், தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் சிறையில் உள்ள 3 பேரை விடுதலை செய்வதை ஏற்க முடியாது என்று அந்தப் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்துவிட்டார். 7 பேரை விடுவிப்பதில் மட்டும் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வருகிறார்.

பின்னணி என்ன

பின்னணி என்ன

ராஜிவ்காந்தி கொலை செய்யப்பட்டபோது, அவருடன் பலர் கொல்லப்பட்டனர். அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள், குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், வழக்கு நிலுவையில் இருக்கும்போது இதில் முடிவெடுக்க வேண்டாம் என ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் இன்று நிருபர்கள் கேட்டபோது, ஆளுநருக்கு, மாநில அரசு பரிந்துரை அனுப்பிவிட்டது. இனி ஆளுநர்தான் இதில் முடிவெடுக்க வேண்டியவர் என்று கூறினார்.

English summary
People seeks release of Rajiv Gandhi assassination case convicts as Governor yet to take his call.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X