ட்விட்டரில் ஓயாத அலைகள்.... மீண்டும் டிரெண்டிங் ஆன "GoBackModi"
சென்னை: பிரதமர் மோடியின் தமிழகம் வருகையை முன்னிட்டி வழக்கம் போல சமூக வலைதளங்களில் GoBackModi என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்காகி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் என்றாலே ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் "GoBackModi" என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்காகிவிடும். அதுவும் உலக அளவில் டிரெண்டிங்கான வரலாறும் உண்டு.

அதேபோல் பிரதமர் மோடிக்கு எதிராக அரசியல் கட்சிகள் கறுப்பு கொடி காட்டுவது, கறுப்பு பலூன்களை பறக்கவிடுவது என்பதும் தொடர் நிக்ழ்வாக இருக்கிறது. இந்த எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் பிரதமர் மோடி தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வருகை தந்த மோடி, தமிழ் மொழி, தமிழர் பண்பாடு ஆகியவற்றின் பெருமிதம் குறித்தும் பேசியிருந்தார். இந்த நிலையில் தமிழகம், கேரளா சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக இன்று மீண்டும் தமிழகம் வருகை தந்தார் பிரதமர் மோடி.
இன்று காலை கோவை வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து கேரளாவின் பாலக்காடு பகுதியில் நடைபெறும் பிரசாரத்தில் பங்கேற்க சென்றார். அதைத் தொடர்ந்து தமிழகத்தின் தாராபுரத்தில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
இன்றும் ட்விட்டரில் பிரதமர் மோடி வருகைக்கு எதிராக "GoBackModi" என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்த ஹேஷ்டேக்கில் விவசாயிகள் பிரச்சனை உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடிக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டும் வருகின்றன.